ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி பலன்கள்

13.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் பிலவ வருட ஐப்பசி மாதம் 27-ம் தேதி சனிக்கிழமை சுக்ல பட்சத்து தசமி திதி, மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரத்தில், கும்ப ராசியில், வியாகாதம் நாமயோகம், தைதுலம் நாமகரணத்தில், பஞ்சபட்சியில் மயில் பலவீனம் அடையும் நேரத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த அமிர்தயோகத்தில், ரிஷப லக்னத்தில் நவாம்சத்தில் கும்ப லக்னத்தில், புதன் ஓரையில் பொன்னன் எனப் புகழப்படும் பிரகஸ்பதியாகிய குருபகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்குள் 13.11.2021 அன்று மாலை 6 மணி 10 நிமிடத்தில் அமர்கிறார்.

மேஷம் 77%

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பல வகையிலும் சிரமப்படுத்திய குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை இப்போது லாப வீட்டுக்கு வருகிறார். இனி தொட்டது துலங்கும். புது வேலை கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்ததைப்போல உங்கள் மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களைப் பற்றித் தவறாகப் பேசிய உறவினர்கள் இனி மதிப்பார்கள். வீட்டை நல்ல விதத்தில் கட்டி முடிப்பீர்கள். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை நீங்கும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். நாத்தனார், மாமியார், கொழுந்தனார் வகையில் இருந்த பனிப்போர் நீங்கும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இடமாற்றமும் உண்டு. இந்த குரு மாற்றம் சமூகத்தில் புது அந்தஸ்தைத் தரும்.

ரிஷபம் 55%

இதுவரை 9-ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை உள்ள காலகட்டத்தில் 10-ம் வீட்டில் நுழைவதால் மற்றவர்களுடன் இனி பக்குவமாகப் பழகுங்கள். அவசர முடிவுகள் வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். கணவன் உங்களை சந்தேகப்படுவார். சச்சரவுகளும் வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் சம்பந்தமாக முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். அதிக கடன்பட்டு வீடு, வாகனம் வாங்குவதையெல்லாம் தவிர்க்கப்பாருங்கள். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறையுங்கள். சிறு வழக்குகள், விபத்துகள் வரக்கூடும். ஓரளவு பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். கூட்டுத் தொழிலில் சிக்கல் வரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். பதவி உயர்வுடன்கூடிய சம்பள உயர்வும் உண்டு. இந்த குரு மாற்றம் ஆரம்பத்தில் அலைகழித்தாலும், முடிவில் முழு வெற்றி தருவதாக அமையும்.

மிதுனம் 70%

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து பல எதிர்ப்புகளையும், இழப்புகளையும் தந்த குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை உள்ள காலகட்டத்தில் 9-ம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்புத் தருவார். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து, புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாமனார் ஒத்தாசையாக இருப்பார். துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். வட்டிக்கு வாங்கிய கடனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கூட்டுத்தொழிலில் தொந்தரவு தந்த பங்குதாரர் விலகுவார். மார்ச், ஏப்ரல் மாதத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் வீண் பழி விலகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புது வேலை கிடைக்கும். இந்த குரு மாற்றம் சமாளிக்கும் சக்தியை உங்களுக்குத் தரும்.

கடகம் 65%

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் நின்ற குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் நுழைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சிறு சிறு நஷ்டங்கள், அலைச்சல், திடீர்ப் பயணங்கள் வந்து செல்லும். கணவருடன் வாக்குவாதங்களும், பிள்ளைகளால் டென்ஷனும் வந்து நீங்கும். குரு பகவான் உங்களது 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உங்கள் சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீண் அலைச்சல், செலவுகள், சலிப்பு, சோர்வு வந்து நீங்கும். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். இதுவரை இருந்த இழுபறி நிலை மாறும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. மார்ச் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றித் தவறாக நினைத்திருந்த மேலதிகாரி இனி நட்புறவாடுவார். சக ஊழியர்களைப் பற்றிக் குறை கூற வேண்டாம். இந்த குரு மாற்றம் வாழ்வில் முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்.

சிம்மம் 90%

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை ஏகத்துக்கும் கஷ்டப்பட வைத்த குரு பகவான் 13.11.2021 முதல் 13.04.2022 வரை 7-ம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர் பாராத பணவரவு உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவரின் பாராமுகம் மாறும். பாசமாகப் பேசுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரைகுறையாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். உங்களைக் குற்றம், குறை கூறிக்கொண்டிருந்த மாமியார், நாத்தனார் மனம் மாறும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். பிப்ரவரி மாதத்தில் பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த குரு மாற்றம் புதிய பாதையில் உங்களை சாதிக்க வைக்கும்.

கன்னி 54%

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் நின்ற குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை 6-ம் வீட்டில் சென்று மறைவதால் சிறு சிறு ஏமாற்றங்கள், குழப்பங்கள் வந்து செல்லும். கணவர் கொஞ்சம் புலம்புவார். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். இங்கிதமாகப் பேசி பல காரியங்களைச் சாதிப்பீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னை நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். சொந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வருமானம் உயரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் உயர்வு வரும். இந்த குரு மாற்றம் அலைச்சலுடன் ஆதாயத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

துலாம் 68%

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்குப் பல இன்னல்களைத் தந்த குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை 5-ம் வீட்டில் அமர்வதால் அடிப்படை வசதிகள் பெருகும். பெரிய பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். வீடு சுப நிகழ்ச்சிகளால் களைகட்டும். புது சொத்து வாங்குவீர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக்கொண்டிருந்த கணவர் இனி அன்பாகப் பேசுவார். சில நேரங்களில் உங்களின் பணிகளையும் சேர்த்துப் பார்ப்பார். புது டிசைனில் நகை, புடவை வாங்குவீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நாத்தனாருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சகோதர வகையில் நன்மை உண்டு. சொந்த வீட்டுக்குக் குடி புகுவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரிக்கு வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களின் தகுதி உயரும். வேலையில் ஆர்வம் பிறக்கும். புது வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு மாற்றம் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருவதாக அமையும்.

விருச்சிகம் 54%

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் நின்ற குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை 4-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நிதானமாகவே செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்குரிய குரு பகவான் தன் நட்சத்திரமுள்ள வீட்டில் அமர்வதால் கெடுபலன்கள் குறையும். ஓரளவு பணம் வரும். சேமிக்க முடியாதபடி வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். கணவர் கோபப்படுவார். மனம் புண்படும்படிப் பேசுவார். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புதுப் பொருள்கள், சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியையாவது கொடுக்க முயல்வீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர்களில் சிலர் பழசை மறந்து பேசுவார்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். புது முதலீடுகள் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இந்த குரு மாற்றம் தடுமாற்றங்களிலிருந்து விடுவிப்பதாக அமையும்.

தனுசு 51%

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் நின்ற குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை 3-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். குடும்பத்தில் அமைதியின்மை, பணத்தட்டுப்பாடு, இனந்தெரியாத கவலைகள், தாழ்வுமனப்பான்மை, உறவினர் பகை வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கணவரை சந்தேகப்படாதீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்கள்மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கல்வியாளர்களின் நட்பு கிட்டும். கணவர் தன் தவற்றை உணர்வார். பணவரவு திருப்தி தரும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். மருத்துவச் செலவுகள் நீங்கும். பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சொந்தங்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் மற்ற வியாபாரிகளைப் பார்த்து அதிக முதலீடுகளைப் போட்டு நட்டப்படாதீர்கள். வருங்கால சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை மட்டம் தட்டிப் பேசுவார்கள். இந்த குருமாற்றம் கொஞ்சம் செலவுகளையும் அலைச்சலையும் தந்தாலும் நல்ல அனுபவத்தையும் கொடுப்பதாக அமையும்.

மகரம் 66%

இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜன்ம குருவாக அமர்ந்திருந்த குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை 2-ம் வீட்டில் அமர்வதால் மனதில் இருந்த போராட்டம் நீங்கும். இனி எதையும் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். பணபலம் கூடும். கணவரின் கோபதாபங்கள் நீங்கும். உங்களின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் தருவார். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். சோர்ந்த முகம் மலரும். ஆரோக்கியம் கூடும். நட்பு வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த உரசல் போக்கு நீங்கும். இனி பாசமாகப் பேசுவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். எதிர்ப்புகள் அடங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மாமியார், நாத்தனார் உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். நல்ல வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை அலங்கரிப்பீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் திறமையை மெச்சுவார். சக ஊழியர்களும் இனி மதிப்பார்கள். பதவி உயர்வு உண்டு. இந்த குரு மாற்றம் வாழ்வின் விளிம்பிலிருந்த உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாக அமையும்.

கும்பம் 56%

இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்துகொண்டு பாடாய்படுத்திய குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்குள் ஜன்மகுருவாக அமர்வதால் வீண்பழி, மன உளைச்சல் என வந்துபோகத்தான் செய்யும். கணவர் கோபத்தால் பேசுவதையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். உங்களுக்குள் சிலர் கலகமூட்டிவிடுவார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். பிள்ளைகளை அரவணைத்துப் போகப்பாருங்கள். ஓரளவு நிம்மதி உண்டு. சலிப்பு, சோர்வு, அலைச்சல் ஏற்படக்கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாமனார் உதவுவர். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையுடனான கருத்து மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்வீர்கள். ஆனால், வேலையாட்களால் தொந்தரவு உண்டு. வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்கள் சிலர் உங்களைப் பொறாமையாகப் பார்ப்பார்கள். ஆனால், மேலதிகாரிகள் மதிப்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் உண்டு. இந்த குரு மாற்றம் சகிப்புத்தன்மையால் சாதிக்க வைப்பதாக அமையும்.

மீனம் 79 %

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து முயற்சிகளில் வெற்றியையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் தந்த குரு பகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு 12-ல் அமர்வதால் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். வருங்காலத்துக்காகச் சேமிக்கப் பாருங்கள். கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டில் கோபப்பட்டுப் பேசுவார். நீங்கள் கொஞ்சம் அரவணைத்துப் போங்கள். வெளிநாட்டினரின் உதவி கிடைக்கும். அரசு விஷயங்கள் உடனே முடியும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வெடிக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். மாமனார், நாத்தனார் உங்களின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உயரதிகாரியுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பதவி உயர்வு உண்டு. இந்த குரு மாற்றம் கொஞ்சம் குழப்பத்தையும் டென்ஷனையும் தந்தாலும் அதைச் சமாளிக்கும் வல்லைமையும் தருவதாக அமையும்.