Published:Updated:

டிசம்பர் 26 தமிழகத்துக்கு ஆபத்தா? - ஜோதிடர்கள், வானிலை மைய இயக்குநர் சொல்லும் விளக்கம்! #Video

Representational Image

அடுத்த ஒரு மாதத்துக்குள் இயற்கைப் பேரிடர்கள் இருக்கும் என்பதற்கோ பெருமழை பெய்து பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கோ எந்தவித அடிப்படை ஆதாரமும் சான்றுகளும் இல்லை என்பதுதான் உண்மை.

டிசம்பர் 26 தமிழகத்துக்கு ஆபத்தா? - ஜோதிடர்கள், வானிலை மைய இயக்குநர் சொல்லும் விளக்கம்! #Video

அடுத்த ஒரு மாதத்துக்குள் இயற்கைப் பேரிடர்கள் இருக்கும் என்பதற்கோ பெருமழை பெய்து பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கோ எந்தவித அடிப்படை ஆதாரமும் சான்றுகளும் இல்லை என்பதுதான் உண்மை.

Published:Updated:
Representational Image

``537 வருடங்களுக்குப் பிறகு தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள். 25.12.19, 26.12.19, 27.12.19 ஆகிய மூன்று நாள்கள் இந்த அமைப்பு இருக்கப்போகிறது. இது நெருப்புக்கும் காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமாக அமையும் கோள் சேர்க்கை. 1482-ம் வருடம் நிகழ்ந்த இது போன்ற கோள்சார அமைப்பு மிகப்பெரும் சாம்ராஜ்யங்களையே காணாமல் போகச்செய்தது."

சமீபத்தில் சமூக வலைதளங்களில் இப்படியொரு வாட்ஸ்அப் தகவல் வலம் வருகிறது. இதிலுள்ள தகவல்கள் யாவும் உண்மையா. இது குறித்து ஜோதிடர்கள், வானிலை ஆய்வு மைய இயக்குநர் சொல்வது என்ன?

Planets
Planets

ஜோதிட நிபுணர் திருவண்ணாமலை ஆனந்தாழ்வார்:

ஜோதிட சாஸ்திரப்படி, தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் சேர்வது 500 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது என்று கூறுவதற்கில்லை. அதற்கு முறையான ஆதாரங்களும் இல்லை. டிசம்பர் 25-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை, இந்தக் கிரகங்கள் ஒன்றாக இருக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.

இந்த மூன்று தினங்களுமே சுபதினங்களாக வருவதால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது என்பதே உண்மை. 66% பாதிப்புகள் நிச்சயம் இருக்காது. ஆனால், நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சென்னை, கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் மண் அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாகனங்களுக்கு மின்னல் பாதிப்பு ஏற்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குரு, கேது இருவரும் சேர்ந்திருப்பதால் மடங்கள், அறக்கட்டளைகள் வைத்து நடத்தும் மடாதிபதிகளுக்குத் தொந்தரவுகள் ஏற்படும் என்பதுதான் உண்மை. பொதுமக்களுக்குப் பொருள் இழப்பு ஏற்படலாம். ஆனால், உயிரிழப்பு ஏற்படாது.

கிரகங்களின் சேர்க்கையைவிட கிரகங்களின் பார்வை மிகவும் முக்கியமானது. டிகிரி, பாகை சுத்தமாக ஒவ்வொரு கிரகத்தின் பார்வையும் விலகிவிடுகிறது என்பதே உண்மை. இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் நிகழாது.

ஆனந்தாழ்வார்
ஆனந்தாழ்வார்

பொதுவாக, டிசம்பர் மாதம் சென்னைக்கு ஆகாது. சில இயற்கைப் பேரிடர்கள் இந்த மாதத்தில் நடந்திருக்கின்றன. ஆனால், கடுமையான மழை பாதிப்புகள் இருக்கும், பூமி பிளக்கும், தமிழகம் மிதக்கும், மக்களைச் சுருட்டிவிடும். 548 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். மைனஸும் மைனஸும் சேர்ந்தால் ப்ளஸ் என்பதுபோல் இந்தக் கிரக சேர்க்கையால் பெரிய பாதிப்புகள் நிகழாது என்பதுதான் உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோதிடர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்:

தனுசு ராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கையால் எந்தவித மாற்றமும் பாதிப்பும் இருக்காது என்று அடித்துச் சொல்லலாம். பொதுவாக, தனுசு ராசியில் மூன்று நட்சத்திரங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மூன்று, நான்கு பாதங்கள்.

சூரியனும் சந்திரனும் மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் நான்காம் பாதத்தில் இருக்கிறார்கள். கேது பகவான், பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்துக்கு வந்துவிடுகிறார். சூரியன், குரு, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் மூலம் நட்சத்திர நான்காம் பாதத்தில் இருக்கிறார்கள். சந்திரன், பூராடம் முதல் பாதத்துக்கு வருகிறார்.

Astro Krishnan
Astro Krishnan

டிசம்பர் 26-ம் தேதி கிரகணத்தன்று குரு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் மூலம் நான்காம் பாதத்தில் சேர்கிறார்கள். ஏற்கெனவே கேது, மூலம் நான்காம் பாதத்தில் இருந்து பூராடம் முதல் பாகத்துக்குச் சென்றுவிடுகிறார். அதற்கு முன்னதாக சூரியன் குரு சந்திரன் மூவர் மட்டும்தான் மூலம் நான்காம் பாகத்தில் இருக்கிறார்கள். கேது பூராட நட்சத்திரம் முதல் பாதத்துக்கு வரும்போது சனி பூராடம் நான்காம் பாதத்துக்குச் சென்று மகர ராசியில் பிரவேசிக்கிறார். சேர்க்கை என்று பார்த்தால், புதன் மூலம் முதல் பாதத்தில் இருக்கிறார். உண்மையில் குரு, சூரியன், சந்திரன் ஆகிய மூவரும்தான் கேதுவுடன் சேருவார்கள். இதை நான்கு கிரக சேர்க்கை என்றுதான் சொல்ல வேண்டும். ஆறுகிரக கூட்டணி என்றே சொல்லக் கூடாது.

இவர்களில் சந்திரன் ஒரே நாளில் அடுத்த ராசிக்குக் கிளம்பிப் போய்விடுவார். சூரியனும் ஒரு நாளைக்கு ஒரு டிகிரி என்பதால் அவரும் மாறிவிடுவார். இதில் பெரிய மாற்றம் என்றெல்லாம் எதுவும் நடக்காது.

குரு, கேது சேர்க்கை என்பது ஆன்மிகத்திலிருக்கும் மடாதிபதிகளுக்குப் பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும். ஏற்கெனவே குரு மகாசந்நிதானம் அவர்கள் அமரராகிவிட்டார். நித்யானந்தா நாடு நாடாகச் சென்று அலைந்து கொண்டிருக்கிறார்.

ஜனவரியில் சூரியன், சனி சேர்க்கை நடைபெறும்போதுதான் மழை அதிகமாகப் பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்த ஆறு கிரகக் கூட்டணியால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்பதே ஜோதிட ரீதியான உண்மை.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்:

வானிலை ஆய்வு மையம் தட்பவெப்ப நிலை, புயல், மழை அளவு, வெயில் அளவு ஆகியவற்றைக் கடல், காற்று, ஆகாயம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தகவல்களையும் ஆதாரங்களையும் வைத்து அவ்வப்போது வானிலை நிலவரத்தை வெளியிட்டு வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றுக்கான வானிலை நிலவரத்தை வெளியிட்டு வருகிறோம்.

அகில இந்திய அளவில் கிடைக்கும் வானிலைத் தகவல்களைக் கொண்டும் இவற்றை நாங்கள் அறிவிக்கிறோம். ஐந்து நாள்களுக்கு வானிலையின் போக்கு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி ஓரளவு அறிவிக்க முடியும்.

எந்தப் பகுதியில் எந்த அளவு மழை இருக்கும், கனமழையா, மிதமான மழையா என்பதையெல்லாம் ஆய்வு செய்து சொல்லுவது வழக்கம். இதில் சிலவேளைகளில் ஐந்து நாள்களுக்குள்ளாகவே வானிலையில் மாற்றங்கள் நிகழ்வதும் உண்டு. கணிப்புகளை மீறி இயற்கையின் செயல்பாடுகள் இருப்பதுண்டு.

பத்து பதினைந்து நாள்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பதைச் சொல்வதற்கு வேறுவிதமான ஆய்வுகள் இருக்கின்றன. இவை எல்லாமே அறிவியல்பூர்வமானவை. இவை தவிர ஒருமாத அளவுக்குப் பெய்யக்கூடிய மழை, காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை, இவற்றையெல்லாம் சொல்வதற்கு வேறு மாதிரியான ஆய்வு நிலை இருக்கிறது. இதற்கான அறிவியல்பூர்வமான உபகரணங்களும் கருவிகளும் இந்தியா முழுவதும் உள்ள வானிலை ஆய்வு மையங்களில் இருக்கின்றன. இவற்றை அவ்வப்போது நாங்கள் பரஸ்பரம் எங்களுக்குள் பரிமாறிக் கொள்வதுடன் பொதுமக்களுக்கும் தேவையான தகவல்களையும் அறிவித்து வருகிறோம்.

அடுத்த ஆண்டு மழை, எந்த அளவு இருக்கும் என்பதற்கு ஒரு வகையான அறிவியல் பயன்படுத்தப்படுகிறது. சிலவேளைகளில் இந்தக் கணிப்புகள் தவறிப்போய் விடுவதும் உண்டு. உதாரணமாக, கடந்த 2018-ம் ஆண்டு சராசரி மழை அளவைவிடக் கூடுதலான மழை இருக்கும் என்று கணித்து வைத்திருந்தோம். ஆனால், மழை பெய்த அளவோ சராசரி அளவைவிட மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்த ஆண்டு சராசரி மழையளவு கண்டிப்பாக இருக்கும் என்று கூறியிருந்தோம். அதேபோல் சராசரி மழை அளவு பெய்திருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி இன்னும் மழை ஓரளவு இருக்கும் என்கிற அளவில் மழை பெய்து வருகிறது. அதனால் ஓராண்டு குறிப்புகள், 15 நாள்களுக்கான கணிப்புகள், ஐந்து நாள்கள் உரிய கணிப்புகள் என்று பல வகையில் திட்டமிட்டு இந்தக் கணிப்புகளைத் தருகிறோம். ஆனால், இவை மாறக்கூடியவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வாட்ஸ் அப்பில் வருகின்ற தகவல்கள் `தனுசு ராசியில் கிரகங்களின் சேர்க்கையால் பெரிய மழை பாதிப்புகள் இருக்கும். அழிவுகள் ஏற்படும். தமிழகம் மிதக்கும்' என்று கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது. இவற்றுக்கு எந்தவித அறிவியல் தொடர்பும் கிடையாது. உலகின் எந்த வானிலை மையமும் கிரகங்களின் போக்குகளை வைத்தெல்லாம் வானிலை அறிவிப்புகளை வெளியிடுவது இல்லை. இது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானது. அதனால் இவற்றையெல்லாம் மக்கள் நம்பத் தேவையில்லை.

Planets
Planets

ஆதாரங்களையும் தகவல்களையும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து வெளியிடும் அறிவிப்புகளே மாறிவிடும்போது, யூகமாகச் சொல்லக்கூடிய இதுபோன்ற செய்திகளை வதந்திகள் என்றுதான் கூறமுடியும். இவற்றை மக்கள் மத்தியில் பரப்பி, ஒரு பீதியை உண்டாக்குவது தவறு.

அடுத்த ஒரு மாதத்துக்குள் இயற்கைப் பேரிடர்கள் இருக்கும் என்பதற்கோ பெருமழை பெய்து பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கோ எந்தவித அடிப்படை ஆதாரமும் சான்றுகளும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே, இந்த வாட்ஸ் அப் தகவல் குறித்துப் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்பதையே வானிலை அறிவையும் கேட்டுக்கொள்கிறது.

வருகிற 15-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு ஓரளவு மழை இருக்கும் என்பதுதான், இதுவரை வானிலை மையத்துக்குக் கிடைத்துள்ள தகவல். எனவே, பொது மக்கள் இந்த வாட்ஸ்அப் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை'' என்று பயம் போக்குகிறார் புவியரசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism