திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

பிணியின் தாக்கம் தணியுமா? ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது...

ஜோதிட சாஸ்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிட சாஸ்திரம்

இரா.சுப்ரமணியன்

மனித சமுதாயம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நவகிரகங்களும் தத்தம் நீள்வட்ட சுற்றுப்பாதையில் ஒரு விநாடிகூடப் பிசகாமல் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கின்றன.

அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் - மின்காந்த அலைகள் இந்தப் பூவுலகின் பரப்பில் விழுந்து ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன்படி கிரகங்கள் சுற்றிச் சுழலும்போது, குறிப்பிட்ட சில கிரகங்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் காலத்தில், அவற்றின் பாதிப்பால் பூமியில் உயிர்களுக்குக் கெடுபலன்களோ அல்லது நல்ல விளைவுகளோ உண்டாகும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

இத்தருணத்தில் மறைந்த மேலைநாட்டு ஜோதிடமேதை ஷீரோ தனது ஜோதிட நூலில் கூறியுள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கவை. `கிரகங்களான செவ்வாய், சனி, ராகு,கேது ஆகியவை சுழற்சியில் நெருங்கிவரும் காலக்கட்டம் மனித சமுதாயத்துக்கு எல்லாவகையிலும் கெடுதல்கள் தரவல்லது’ என்கிறார் அவர். இதே கருத்தை மறைந்த ஜோதிட மாமேதை பெங்களூரு வெங்கட்ராமனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கிரகங்களின் நிகழ்கால சுழற்சி அமைப்பைக் கோசாரம் என்று குறிப்பிடுவர். அதன் அடிப்படையில், பஞ்சாங்கங்களில் விளக்கியுள்ளபடி மாசி மற்றும் பங்குனி மாதங்களுக்கான கிரக கோசார அமைப்பைக் காண்போம் (கிரக நிலைகள் ராசிக்கட்டங்களில் தரப்பட்டுள்ளன. நாள் சஞ்சார அடிப்படையிலானது என்பதால் சந்திரனின் நிலையைக் குறிப்பிட வில்லை).

ஜோதிட சாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரம்

செவ்வாய், சனி, கேது கிரகங்கள் அருகருகே (நெருங்கிய பாதையில்) சேர்ந்து இருப்பதையும் ராகு கிரக தொடர்பு பெறுவதையும் காண முடிகிறது. முன்பின் வீடுகளையும் கணக்கில் கொண்டால் மேற்கூறிய கிரகங்களின் பாதிப்பு காலக்கட்டங்களை பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எனக் கணக்கிடலாம். ஜோதிட மாமேதைகள் ஷீரோ மற்றும் ராமன் உணர்த்தியபடி இந்த காலக்கட்டங்களில் பூமியில் வாழும் மனிதர்களுக்கு எல்லாவித கெடுதல்களும் அழிவுகளும் ஏற்படும் எனலாம்.

அதற்கேற்ப, இந்தக் காலக்கட்டத்தில் கொரானோ என்ற வைரஸ் தொற்றுநோய் பரவி மிகவும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. அனைத்துலக அரசாங்கங்களும் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொற்று நோய் அதிகம் பரவாமலிருக்க மருத்துவ ஆலோசனைகள் மற்றும் அரசாங்க உத்தரவுப்படி அனைவரும் தத்தம் வீடுகளிலேயே தனித்து இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மக்களும் அவற்றை முழுமனதுடன் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த வைரஸ் நோயின் தாக்க வீரியம் ஏப்ரல் மாதத்துக்குப் பின் படிப்படியாகக் குறையும் என்றே எதிர்பார்க்கலாம். கிரகங்களின் கோசார அமைப்பும் இதையே கூறுகிறது.

ஜோதிட சாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரம்

செவ்வாய் கிரகம் தனது சுழற்சியின் காரணமாக சனி கிரகத்தித்தை விட்டு வெகு தூரம் விலகிவிடும் என்பதால் (15-20 டிகிரி) நோயின் வீரியம் குறையும் என்றே கருதலாம்.

இத்தருணங்களில் தனி மனிதனுக்கு மிக அவசியமானதும் தேவைப்படுவதும் மன தைரியமும் மன வலிமையையும்தான் என்றால் மிகையாகாது. இந்த மன திடத்தைத் தருவது தெய்வ வழிபாடு எனலாம். சாஸ்திரங்களின் அறிவுரைப்படி அனைவரும் தங்களின் குலதெய்வங்களை அனுதினமும் மானசீகமாக வழிபடவேண்டும். அத்துடன், கீழ்க்காணும் விவரப்பட்டி உரிய தெய்வங்களை வணங்கி வழிபட்டு நலம்பெறலாம்.

ஜோதிட சாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரம்

ஜன்ம ராசி - வணங்கவேண்டிய தெய்வங்கள்

மேஷம், விருச்சிகம் - ஶ்ரீமுருகப்பெருமான், ஶ்ரீஐயப்பன்

ரிஷபம், துலாம் - ஶ்ரீமகாலட்சுமி, அம்மன்

மிதுனம், கன்னி - ஶ்ரீமகாவிஷ்ணு

கடகம் - ஶ்ரீபார்வதி

சிம்மம் - ஶ்ரீசிவபெருமான்

மகரம், கும்பம் - ஶ்ரீவேங்கடேசப்பெருமான்

தனுசு, மீனம் - ஶ்ரீஆஞ்சநேயர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி

இதுதவிர 12 ராசிகளும் பஞ்சபூதத் தத்துவப்படி பின்வருமாறு அறியப்படுகின்றன.

மேஷம், சிம்மம், தனுசு - நெருப்பு (அக்னி)

ரிஷபம், கன்னி, மகரம் - நிலம் (பூமி)

மிதுனம், துலாம், கும்பம் - காற்று (வாயு)

கடகம், விருச்சிகம், மீனம் - நீர் (ஜலம்)

நீர் ராசி அன்பர்கள் தினம் அபிஷேகம் ஆராதனைகள் செய்யலாம். நெருப்பு ராசி அன்பர்கள் தினம் தூப, தீபம் ஏற்றி வழிபடலாம். வாயு ராசி அன்பர்கள் தினம் தியானம், பிராணாயாமம் செய்யலாம். நில ராசி அன்பர்கள் வீடுகளில் தெய்வங்களுக்கு அலங்காரம் செய்து வழிபடலாம்.

அவரவர் ராசிக்குரிய தேவதைகளை முழு மனதுடன் வழிபட்டு பிரார்த்தனை செய்வதன் மூலம் கிரக பீடைகள் அகன்று நலம் பெறலாம் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் அனைவரும் ஶ்ரீதன்வந்திரி பகவான், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத ஸ்வாமி ஆகிய தெய்வங்கள் குறித்த துதிப்பாடல்களைப் பாடி வழிபட்டால், விளைவுகள் யாவும் நலமாகும்.