
பஞ்சாங்குலி சாஸ்திரம் - ஜோதிடர் டி.எஸ்.என்
பஞ்சாங்குலி சாஸ்திரம் நம் நாட்டில் வெகுகாலமாக புழக்கத்தில் உள்ள ஒன்று. இதையே கைரேகை சாஸ்திரம் அல்லது ஹஸ்த சாஸ்திரம் என்கிறோம். இது ஒருவரின் கையிலுள்ள ரேகைகளை வைத்து அவரது குணாதிசயங்கள், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விவரங்களைச் சொல்வதாகும்.

பஞ்சாங்குலி எனும் தேவி இந்த ஹஸ்த சாஸ்திரத்தின் அதிதேவதை என்பதால், இதனைப் ‘பஞ்சாங்குலி சாஸ்திரம்’ என்று சொல்கிறார்கள்.
இதன்படி கையின் அமைப்பை வைத்தும் ஒருவருடைய குண இயல்புகளைக் கூற இயலும். பெருவிரல் நுனி முதல் மணிக்கட்டு வரை உள்ள இடைவெளி, உள்ளங்கை நீளம் ஆகும். கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரையிலும் உள்ள இடைவெளி, உள்ளங்கையின் அகலத்தைக் குறிக்கும். இந்த நீள - அகல அளவைக் கொண்டு கை அமைப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

மிக அகலமான உள்ளங்கை: நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியையும் அபவாதத்தையும் ஏற்கும் நிலை ஏற்படும்.
அகலமான கை: உள்ளங்கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையைப் பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். இவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
குறுகலான கை: மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். சுயநலம் மிக்கவர்கள். எல்லோரையும் சந்தேகிப்பவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது. தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள்.