Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - கன்னி

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் கன்னி ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - கன்னி

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் கன்னி ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

கன்னி: மன்னிப்போம், மறப்போம் என்றிருக்கும் நீங்கள், நல்ல நகைச்சுவையாளர்கள். குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும்.

குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன்-மனைவிக்குள் காரண காரியம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டீர்களே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மனைவியின் ஆரோக்யம் சீராகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள்.

முக்கிய கிரகங்கள் 8-ம் வீட்டில் மறைந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சல், மனஉளைச்சல், வீண் கவலைகள் வந்துச் செல்லும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் வரும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 5-ல் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவருடன் கருத்து மோதல்களும் வந்துச் செல்லும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.

வருடம் முடியும் வரை ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அலர்ஜி வந்து நீங்கும். சொந்த பந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டு பேசாதீர்கள். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும். நல்லதை எடுத்துச் சொல்லப் போய் சிலசமயங்களில் மனக்கசப்பில் போய் முடியும்.

கன்னி
கன்னி

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்...

14.04.2022 முதல் 28.04.2022 வரை மற்றும் 23.1.2023 முதல் 16.02.2023 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும்.

26.06.2022 முதல் 10.08.2022 வரை செவ்வாய் 8-ல் மறைவதால் இக்காலக்கட்டத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் நலக்குறைவு வந்து நீங்கும். சகோதர வகையிலும் சங்கடங்கள் வரும். வேனல் கட்டி, பைல்ஸ் வந்து நீங்கும்.

வியாபாரிகளுக்கு...

வியாபாரிகளே, ஆனி, ஆடி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தை பெருக்க நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பணியாட்களை மாற்றியமைப்பீர்கள். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகள் விற்று தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இரும்பு, கெமிக்கல், எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். ஆவணி, புரட்டாசி மாதங்கள் போராட்டமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். மாசி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்யோகஸ்தர்களே, சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் வேலைச்சுமை அதிகரிக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு ஆனி, மாசி மாதங்களில் கிடைக்கும். உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். வடநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் கிடைக்கும். கணினி துறையினர்களுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களாலும் உங்களை அலைகழித்தாலும், பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூச்சமத்தைக் கற்றுக்கொடுக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism