Published:Updated:

விருச்சிக லக்னமும் குலதெய்வ வழிபாடும்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஜோதிடர் கே.எம்.முருகேசன்

விருச்சிக லக்னமும் குலதெய்வ வழிபாடும்!

ஜோதிடர் கே.எம்.முருகேசன்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

விருச்சிக லக்னத்துக்குக் குலதெய்வத்துக்கு உரிய 5-ம் இடத்தின் அதிபதி குரு பகவான் ஆவார். இவர் விருச்சிக லக்னத்துக்கு யோகாதிபதி. பெரும்பாலும் இந்த லக்னக்காரர்களுக்குப் பிரசித்திபெற்ற சிவாலயங்களின் ஆண் தெய்வங்கள் குலதெய்வமாகத் திகழும். இனி, பன்னிரு ராசிகளில் 5-ம் இடத்துக்குரிய குரு பகவான் இருக்க, விருச்சிக லக்னக்காரர்களின் குலதெய்வ நிலை எப்படி என்பதை அறிந்து கொள்வோம்.

விருச்சிக லக்னமும் 
குலதெய்வ வழிபாடும்!


விருச்சிகம்: இதில் குரு பகவான் இருந்தால், வாழ்வில் செல்வம் செழிக்கும்; நிலை உயரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். இந்த ஜாதகர்களுக்கு தனம், வாக்கு ஆகியவையும் மேன்மை தரும். விருச்சிக ராசி விசாக நட்சத்திரத்தில் குரு இருந்தால், மேற்காணும் பலன்கள் இன்னும் மேன்மையாகக் கிடைக்கும். அனுஷத்தில் குரு இருந்தால், சகோதரர் மற்றும் உறவினர்களின் உதவி, தொழிலாளர்களால் நன்மை கிடைக்கும். கேட்டையில் குரு பகவான் இருந்தால், குலதெய்வத்தின் உதவி கிடைக்கும். அதேநேரம், குலதெய்வக் கோயிலில் சிற்சில சிக்கல்கள் இருக்க வாய்ப்பு உண்டு.

தனுசு: இந்த ராசியில் குருபகவான் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். செல்வாக்கு, சொல் வாக்கு, கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை இருக்கும். இந்த ராசியில் மூலம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், குலதெய்வத்தின் உதவி கிடைப்பதில் தடைகள் இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், குலதெய்வ வழிபாடு தடைப்பட்டு பின்னர் குலதெய்வத்தை அறிந்து வழிபட்டுச் சிறப்பார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் குரு இருந்தால் தொழிலில் மேன்மை ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்: மகர ராசியில் குரு பகவான் இருந்தால், பங்காளிகளால் பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக இளைய சகோதரரால் பிரச்னைகள் ஏற்பட்டு, குலதெய்வ வழிபாட்டில் தடைகள் உண்டாகலாம்.மகர ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் குரு இருந்தால் சிற்சில சிரமங்கள் ஏற்பட்டாலும் குலதெய்வத்தின் திருவருள் துணை நிற்கும். திருவோணம் நட்சத்திரத்தில் குரு இருந்தால் புத்திர-புத்திரிகள் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். வாக்கு தவறவும், நாணயம் கெடவும் வாய்ப்பு உண்டு. அவிட்டத்தில் குரு இருந்தால் பகைவர் தொல்லை, பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் ஏற்படும்.

கும்பம்: கும்பத்தில் குரு பகவான் இருந்தால் குலதெய்வம் மறைந்து இருக்கும். பூர்வீகச் சொத்தில் விரயங்கள் ஏற்படும். அவிட்டத்தில் குரு இருந்தால், மேற்சொன்ன பலன்களே ஏற்படும். சதய நட்சத்திரத்தில் குரு இருந்தால், எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் குரு இருந்தால், உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். தாயாரின் உதவி கிடைக்கும்.

மீனம்: மீனத்தில் குரு பகவான் ஆட்சியாக இருந்தால், குலதெய்வத்தின் உதவி உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். சிலருக்குப் பூர்வீகச் சொத்தும், செல்வாக்கும், சத் புத்திரப்பேறு கிடைக்கும். இந்த ராசியில் பூரட்டாதியில் குரு இருப்பது நன்மையே. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு இருந்தால் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களால் நன்மை கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் குரு இருந்தால், சிக்கலான காலங்களில் குலதெய்வத்தின் அருளும் துணையும் சிறப்பாக இருக்கும்.

மேஷம்: மேஷத்தில் குரு பகவான் இருந்தால் பூர்வீகச் சொத்து விஷயங்களால் எதிரிகள் உருவாவார்கள். சொத்து தொடர்பாக கடன் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மேஷ ராசி அசுவினியில் குரு இருந்தால், மந்திர தந்திரங்களால் பாதிப்பு ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிலும் தடைகள் உண்டாகலாம். பரணியில் குரு இருந்தால், குடும்பத்தில் பிரச்னைகளும் மருத்துவச் செலவும் அதிகரிக்கும். கார்த்திகையில் குரு இருந்தால் தொழிலில் பிரச்னைகள் ஏற்படும்; கடன் தொல்லையால் தொழிலை இழப்பார்.

ரிஷபம்: ரிஷபத்தில் குரு பகவான் இருந்தால், இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்காது. கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் இருக்காது. இந்த ராசியில் கார்த்திகை 2, 3 மற்றும் 4-ம் பாதங்களில் குரு இருந்தால் சிற்சில சிரமங்கள் ஏற்படலாம். குலதெய்வத்தை விடாமல் பிடித்துக்கொள்வது சிறப்பு. ரோகிணியில் குரு இருப்பது கவலையை ஏற்படுத்தும். மிருகசீரிடத்தில் குரு இருந்தால், தந்தையால் உதவிகள் கிடைக்காமல் போகும். உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: மிதுனத்தில் குருபகவான் இருந்தால் பூர்வீகச் சொத்து தொடர்பாகவும், பிள்ளைகளின் முன்னேற்றத்திலும் வாழ்விலும் பிரச்னைகள் ஏற்படும். குலதெய்வம் மறைந்தோ, மறக்கப்பட்ட்டோ இருக்கும். இந்த ராசியில் திருவாதிரையில் குரு இருந்தால், அமானுஷ்ய சக்திகளால் பாதிப்புகள் ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் குரு இருந்தால்... பிரச்னைகள் இருந்தாலும் எப்படியேனும் குலதெய்வ வழிபாட்டை மீட்டெடுப்பீர்கள்.

கடகம்: கடகத்தில் குரு இருப்பின் தந்தையின் உதவியும் தந்தையால் மேன்மையும் ஏற்படும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டு. குலதெய்வத்தின் உதவி இவர்களுக்கு ஆயுள் முழுவதும் உண்டு. கடக ராசியில் - பூசம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், காரியங்களில் தடைகள் ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், தொழில் முன்னேற்றத் தில் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்: சிம்மத்தில் குரு இருந்தால் வலிமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிம்ம ராசி - மகம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், பிதுர் சாபம் இருக்கும். அதனால் காரியத் தடைகள் ஏற்படலாம். பூரம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், கணவன் மனைவிக்கு இடையே புரிதல் குறையும். உத்திரம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், தொழில் முன்னேற்றத்தில் தடை ஏற்படும்.

கன்னி: கன்னியில் குரு இருந்தால் வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். புத்திர புத்திரிகளால் குடும்ப சுகம் மேன்மைப்படும். கன்னி ராசி - அஸ்தம் நட்சத்திரத்தில் குரு இருந்தால், தந்தை வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் குரு இருந்தால் எதிரிகளாலும் நன்மை உண்டு.

துலாம்: இந்த ராசியில் குரு இருந்தால், இவர்களுக்குக் குலதெய்வம் எது என்பதே தெரியாமல் இருக்கும். வாக்கு கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற இயலாமல் போகும். இந்த ராசியில் சித்திரையில் குரு இருந்தால் வழிபாடுகளில் தடைகள் உண்டாகும். எனினும், பிரயத்தனத்துடன் குலதெய்வ வழிபாடுகளைத் தொடர்ந்தால் நன்மை கிடைக்கும். சுவாதியில் குரு இருந்தால், அமானுஷ்ய சக்திகளால் குடும்பத்தில் உள்ளோர் பாதிக்கப்படுவார்கள். துலாம் ராசி விசாகத்தில் குரு இருப்பது சிறப்புதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism