Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - கும்பம்

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் கும்ப ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - கும்பம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் கும்ப ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

கும்பம்: மற்றவர்கள் சுதந்திரத்தில் அநாவசியமாக தலையிடாத நீங்கள், தாராள மனசு உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 7&ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுக்ரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பித்துக் கட்டுவார்கள். மனஸ்தாபங்களால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். படித்து, பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலையில்லாமல் திண்டாடினீர்களே! புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரையச் சனியாகத் தொடர்வதாலும், வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு முதுகு தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்துச் செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். இளைய சகோதரங்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

9-ம் வீட்டில் கேது அமர்வதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். பிதுர் வழி சொத்துக்களை பெறுவதில் பிரச்சனைகள் வந்து நீங்கும். ஆனால் ராகுபகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் வந்தமர்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும், புது வீடு மாறுவீர்கள். பழைய வண்டியை மாற்றி விட்டு புது வண்டி வாங்குவீர்கள். விழாக்களில் முதல்மரியாதை கிடைக்கும்.

கும்பம்
கும்பம்

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்:

7.8.2022 முதல் 1.9.2022 வரை சுக்ரன் 6ல் மறைவதால் அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பழுதாகும். கணவன்&மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். ஈகோப் பிரச்னையை தவிர்க்கப்பாருங்கள். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.

வியாபாரிகளுக்கு...

வியாபாரிகளே, தொழிலில் ஒரு ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புது திட்டம் தீட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போக வேண்டியது இருக்கும். முன்பின் அறியாதவர்கள், புது நிறுவனங்களிடம் கவனம் தேவை. வேலையாட்களை நீங்கள் பாகுபாடு பார்க்காமல் சரிசமமாக நடத்துபவர்கள் தான். ஆனால் அதுவே சில நேரங்களில் தர்ம சங்கடமாகும். தேங்கிக் கிடந்த சரக்குகளை சித்திரை மாதத்தில் விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். கெமிக்கல், மருந்து, இரும்பு, உணவு வகைகளால் லாபம் கிடைக்கும். போட்டிகள் அதிகமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்தியோகஸ்தர்களே, வேலைச்சுமை கூடும். மூத்த அதிகாரிகளின் மனசைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. சித்திரை மாதத்தில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். ஐப்பசி மாதத்தில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சாதித்துக் காட்டுவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் ஓரளவு முன்னேற்றத்தையும், மையப்பகுதியில் பணவரவையும், இறுதி பகுதியில் அலைச்சலுடன், உடல்நலக்குறவைத் தந்தாலும் வெற்றி பெற வைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism