பிரீமியம் ஸ்டோரி
காலபுருஷ தத்துவப்படி மேஷ லக்னம் ஆரம்பித்து மீன லக்னம் வரையிலும் பன்னிரு பாவங்களுக்குமான சுப-அசுப பலன்களைப் பராசர முனிவர் அருளியிருக்கிறார்.

அவருடைய கருத்துகளையும் இன்னும்பிற ஜோதிட ஆசார்யர்களின் விளக்கங்களையும் ஆராய்ந்து, மந்திரேஸ்வர மாமுனிவர் லக்ன குணாதிசயங்களை விவரித்துள்ளார். அந்த விவரங்கள் இங்கே.

நீங்கள் இப்படித்தான்!

உங்களின் ஜாதகத்தில் லக்னம் குறிப்பிடப்பட்டிருக்கும்; ஜாதகக் கட்டத்தில்... மேஷம் லக்னம் எனில் மேஷத்துக்கான கட்டத்தில் `ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக, உங்கள் லக்னம் எது என்பதை அறிந்து, இங்கு தரப்பட்டிருக்கும் லக்ன (பொது) குணாதிசயங்களைப் படித்தறியலாம்.

மேஷம்: வட்டமான கண்களையும், பலவீனமான முழங்கால்களையும் கொண்டிருப்பார்கள். நீருக்குப் பயப்படுபவராகவும், கொஞ்சமாக உணவு புசிப்பவராகவும், அலைச்சல் மிகுந்தவராகவும், திடமற்ற மனம் கொண்டவராகவும் திகழ்வர். தேவையான இடங்களில் நன்மை பயக்குமெனில் பொய்யுரைக்கவும் தயங்காதவர். உடம்பில் காயங்கள் பல இருக்கும்.

ரிஷபம்: அகன்ற விசாலமான முகம் கொண்டவர். பருத்தத் தொடைகளைக் கொண்டவர். விவசாயம் பிரதானத் தொழிலாக இருக்கும். வாழ்வின் நடுப்பகுதியும், கடைசிப்பகுதியும் மகிழ்ச்சியுடையவர். மன்னிக்கும் மனம் உடையவர். பரிசுகளை வாரி வழங்குவார். துன்பத்தைப் பொறுமையாக எதிர்கொள்பவர். முதுகு மற்றும் முகத்தில் மச்சங்களும் வடுக்களும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லக்னம்
லக்னம்

மிதுனம்: கருமையான விழிகள் உடையவர். நீண்டு புடைத்த மூக்கும் சுருண்ட கேசமும் கொண்டவர். மற்றவர் எண்ணத்தை அறியும் வல்லமை மிக்கவர். இசை மற்றும் ஆடல்பாடலில் விருப்பம் உள்ளவர். எப்போதும் வீட்டில் இருப்பதையே விரும்புவார்கள்.

கடகம்: மனைவியின் அன்புக்குக் கட்டுப்பட்டவர். நீண்ட கழுத்து அமைந்தவர். குள்ளமான உருவம் கொண்டவர். நண்பர்கள் சூழ வாழும் இவர்கள் அதிகமான வீடுகளைக் கொண்டவர்; செல்வந்தர். கருத்துகளில் வன்மம் இருக்கும் என்றாலும் மற்றவர்களிடம் திணிக்கமாட்டார்கள். வேகமான நடையும் நீரில் நீந்தும் விருப்பமும் உடையவர். குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்.

சிம்மம்: சிவந்த கண்கள், அகன்ற முகம், திடமான தாடை உடையவர். சொல்லிலும் செயலிலும் முரட்டுத்தனம் தொனிக்கும். ஆற்றல் மிக்கவர். முன்கோபம் அதிகம் உண்டு. காடு மற்றும் மலைகளில் அலைந்து திரிவதில் அலாதிப் பிரியம் உண்டு. தாயிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.

கன்னி: புஜபலம் மிகுந்தவர்; உறுதியான கைகளைக் கொண்டவர். தோள்கள் சற்று இறங்கியிருப்பது போல் தோன்றும். மற்றவர் செல்வத்தை அனுபவிப்பவர். மற்றவர்களால் வணங்கத்தக்கவர். இனிய சொற்களை உடையவர். இவரது கூச்ச சுபாவத்தைக் கண்டு மற்றவர்கள் இவரை சோம்பல் மிகுந்தவர் என்று எண்ணக்கூடும். சாஸ்திர அறிவு நிரம்பியவர்.

துலாம்: உயரமாகவும் மெலிந்தும் காணப்படு வார். குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகள் அமையும். கடவுளையும் அந்தணர் களையும் விரும்பி வணங்குபவர். இவருக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். அலைச்சல் மிகுந்தவர். வணிகத்தில் தேர்ச்சி பெற்றவர். எதையும் நடுநிலை சிந்தையோடு அணுகுபவர்.

விருச்சிகம்: பலமான முழங்கால்களும் தொடைகளும் அமையப்பெற்றவர். அகன்ற கண்களையும் மார்பையும் உடையவர். சிறு வயதில் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. தாய்-தந்தையையும் நேசத்துக்குரிய குருவையும் பிரிந்து வாழும் நிலை உண்டு. கை-கால்களில் தாமரை போன்ற ரேகைகள் இருக்கும். அரசாங்க வெகுமதிகள் நிறைய கிடைக்கும்.

தனுசு: தீர்க்கமான கண்களையும் முகத்தையும் பெற்றவர். அகலமான காது மற்றும் மூக்கு உடையவர். வேலையில் அதீத கவனமாகச் செயல்படுபவர். உயரம் குறைந்தவர். அரசாங்க வி.ஐ.பிகளுக்கு நெருக்கமானவராக இருப்பார். எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்வார். அண்டியோருக்கு மிகவும் அன்பானவர். வலிமை மிகுந்த இவர்கள், பொருள்களை வாரி வழங்குவதிலும் வல்லவர்கள்.

மகரம்: உடல் வலிமை மிக்கவர். எனினும் கால்களில் பலம் குறைவு. எடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடிப்பவர். அதேநேரம் சோம்பல் மிகுந்தவர். மதம்-வழிபாட்டு விஷயங்களில் இவர் இப்படித்தான் என்று மற்றவர்களால் சரியாகக் கணிக்க முடியாது. வாத ரோகத்தால் பாதிப்புகள் ஏற்படலாம். அலைச்சல் மிகுந்தவர். எனினும் அதிர்ஷ்டசாலி.

கும்பம்: தண்ணீர்க் குடம் போன்று உடலமைப்புப் பெற்றவர். வெளிப்படையாக தவறு செய்ய அஞ்சுபவர். அதிக தூரம் பாதயாத்திரை செய்யவும் தயங்காதவர். வருவாய் வரும் வழி குறைவே. எனினும் தன்னிறைவு பெறுவார். பிறர் செல்வத்தை அனுபவிக்கும் பாக்கியம் உண்டு. ஆசைகள் அதிகம் உண்டு. பூக்களிலும் வாசனைத் திரவியங்களிலும் விருப்பம் கொண்டவர்.

மீனம்: அளவுக்கதிகமாக நீர் அருந்தும் பழக்கம் உடையவர். அழகான உடலமைப்பு கொண்டவர். நீரில் விளையும் முத்து போன்ற பொக்கிஷங்களை விற்று பணம் சம்பாதிக்கும் அமைப்பு உண்டு. கல்வியில் சிறந்தவர். வாழ்க்கைத் துணைவர் மூலம் சகல செளபாக்கியங்களையும் அனுபவிப்பார். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை மிகுந்தவர். அதிர்ஷ்டம் மிகுந்தவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு