Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - மீனம்

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் மீன ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - மீனம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் மீன ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

மீனம்: மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடும் நீங்கள் மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்கள்! உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்த சுபகிருது ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.

கனிவான பேச்சு வேலைக்காகாது, இனி கறாராக தான் பேச வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும், கையைப் பிடிப்பதுமாக இருந்தவர்களையெல்லாம் ஒத்துக்கித்தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்பெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்துச் செல்லும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிப்புகுவீர்கள். அனுபவப்பூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்சனைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுயத்தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

வருடம் முடியும் வரை கேது 8-லும், ராகு 2-லும் வந்தமர்வதால் சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள். நீங்கள் சில சமயம் சாதாரணமாகப் பேசுவது கூட சண்டையில் போய் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப்பபோது கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள்.

மீனம்
மீனம்

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்:

1.9.2022 முதல் 25.9.2022 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால் அந்த காலக்கட்டத்தில் கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது.

வியாபாரிகளுக்கு...

வியாபாரிகளே, கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத்தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். அயல்நாட்டுத்தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். யாராக இருந்தாலும் கையில காசு வாயில தோசைன்னு சொல்லிவிடுங்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தப் போராடுவீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஹோட்டல், ஏற்றுமதி, இறக்குமதி, கட்டிட சாமான்கள், துணி வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். பிரச்னை தந்த வேலையாட்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமிப்பது நல்லது. அரசாங்கக் கெடுபிடிகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்தியோகஸ்தர்களே, வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். என்றாலும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வார்கள். கவலைப்படாதீர்கள், கடமையை செய்யுங்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு. மார்கழி, தை மாதங்களில் புது நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு சின்ன சின்ன இடையூறுகளைத் தந்தாலும், பக்குவப்படுத்தி வருடமுடிவில் வசதியாக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism