பிரீமியம் ஸ்டோரி

மீனம் லக்ன அன்பர்களுக்குக் குலதெய்வத்துக்கு உரிய 5-ம் இடத் தின் (கடக ராசி) அதிபதி சந்திரன். இவர் ஜாதகத்தில் எந்த ராசியில், என்ன நட்சத்திரத்தில் இருந்தால், குலதெய்வத்தின் அருள் எப்படி அமையும் என்பதைப் பற்றி விரிவாக அறிவோம்.

மீனம் லக்னமும் 
குலதெய்வ வழிபாடும்!

மீனம்: மீனத்தில் சந்திரன் அமைந்திருந்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்கும். பெரும்பாலும் இவர்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாகவே இருக்கும். இவர்களுடைய புத்திர - புத்திரிகள் மேன்மையான நிலையில் இருப்பார்கள். பெண் தெய்வத்தின் அருட்கடாட்சம் நிறையவே உண்டு.

இந்த ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால், தொழில் மற்றும் உத்தியோக நிலையில் சிறப்பாக இருப்பார்கள். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் புத்திர - புத்திரிகளுக்காக சுபவிரயம் செய்ய வேண்டி இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் மனைவி வழியில் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மேஷம்: சந்திரன் இங்கு இருந்தால் பூர்வீகச் சொத்தால் நல்ல வருமானம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் இருக் கும். சொல்வாக்கு, செல்வாக்கு, கௌரவம் மேன்மை அடையும்.

அசுவினி நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால், மூதாதையரின் அன்பும், தனவரவும் கிடைக்கும். பரணியில் சந்திரன் இருந்தால் மனோ பலம் அதிகமாக இருக்கும். கார்த்திகை முதல் பாதத்தில் சந்திரன் இருந்தால், எதிரிகளை வெல்வதன் மூலம் தனலாபம் கிடைக்கும். கண் சம்பந்தமான பாதிப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: இங்கு சந்திரன் அமைந்து இருப்பது, மனோபலத்தையும் தைரியத்தையும் கொடுக்கும். பிள்ளைகள் உயர்ந்த நிலையை அடைவார்கள். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டு.

கார்த்திகை 2, 3, 4-ம் பாதங்களில் சந்திரன் இருந்தால் எதிரிகளால் மனக் கலக்கம் உண்டாகும். இளைய சகோதரர், தாயார் நோயால் பாதிக்கப்படலாம். பூர்வீகச் சொத்தில் முன்னேற்றம் ஏற்படும். ரோகிணியில் சந்திரன் நின்றால் புகழ் அதிகமாகும். உயர்ந்த பட்டம், பதவிகள் கிடைக்கும். குலதெய்வம் இவர்களுடனேயே இருக்கும். மிருகசீரிடத்தில் சந்திரன் இருந்தால் தன வரவு அதிகமாக இருக்கும்.

மிதுனம்‌: சந்திரன் மிதுனத்தில் இருப்பது நல்லதல்ல. பூர்வீகச் சொத்தில் விரயங்கள் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் சுமூகமான உறவுகள் இருக்காது.

திருவாதிரையில் சந்திரன் நின்றால் மனதில் குழப்பங்கள் அதிகமாகும். சிலருக்கு அமானுஷ்ய சக்திகளால் மனநலம் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் நின்றால், தொழில் ரீதியாக சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதிக பாதிப்புகள் இருக்காது.

கடகம்: இங்கே சந்திரன் இருப்பது மிக மேன்மையான பலன் களைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்து லாபம் தரும். புத்திர - புத்திரிகள் உயர்ந்த நிலையை அடைவார்கள். குடும்பத்திலேயே குலதெய்வம் கொலுவீற்றிருக்கும்.

புனர்பூசத்தில் சந்திரன் இருந்தால் வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மையான பலன்களை அனுபவிக்க முடியும். பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் நின்றால் எதிலும் நல்ல லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால், இவர்களுக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இங்கு சந்திரன் இருப்பது நல்லதல்ல. பூர்வீகச் சொத்துகள் எதிரிகளாலும், கடனாலும், மருத்துவச் செலவுகளாலும் விரயமாக வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் இவர்களுக்குக் குலதெய்வ வழிபாடு தவறிப்போகும்.

மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் அமானுஷ்ய சக்தியால் குடும்பத்தில் பாதிப்புகள் இருக்கும். குலதெய்வம் கட்டப்பட்டு இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால், பெண்களால் எப்போதும் தொல்லைகள் இருக்கும். உத்திரத்தில் சந்திரன் இருந்தால் கடன், எதிரி, நோய் காரணமாக மிகவும் துன்பம் அடைவார்.

கன்னி: இங்கு சந்திரன் இருந்தால் இறைவனின் உதவி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதேநேரம் விதிப்பயனால் பூர்வீகச் சொத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காமல் போகலாம். தெய்வத் துணையைப் பற்றிக்கொள்ளுங்கள்.

கன்னி ராசி - உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால், மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் தாயார் உதவி இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் மனைவியின் மூலம் சில நன்மைகள் கிடைக்கலாம்.

துலாம்: இங்கு சந்திரன் இருப்பது நன்மையைக் கொடுக்காது. பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. புத்திர புத்திரிகளால் பிரச்னைகள் இருக்கும். துலாம் ராசி - சித்திரையில் சந்திரன் இருந்தால் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். குடும்பத்தாருடன் வம்பு வழக்குகள் ஏற்படும். சுவாதியில் சந்திரன் இருந்தால் அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்படுவதுடன், முன்னோர் சாபமும் இருக்கும். விசாகத்தில் சந்திரன் இருந்தால் தொழில், உத்தியோகம் சார்ந்த வம்பு வழக்குகள் இருக்கும்.

விருச்சிகம்: இதில் சந்திரன் இருப்பது நல்லதல்ல. பூர்வீகச் சொத்து நசிந்துபோகும். புத்திர - புத்திரிகளின் சுபகாரியங்களில் தாமதம் ஏற்படும். குலதெய்வம் இவர்களை விட்டு வெகுதூரம் போய்விடும்.

விருச்சிக ராசி - அனுஷத்தில் சந்திரன் நின்றால் வருமானம் இல்லாமல் போகும். கேட்டையில் சந்திரன் நின்றால், வாழ்க்கைத்துணை மற்றும் தாயாருக்குப் பாதிப்புகள் ஏற்படும். வாழ்க்கை சுகப்படாமல் போகும்.

தனுசு: சந்திரன் இங்கே இருப்பது தொழில் சம்பந்தமாக முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆனால் குலதெய்வ வழிபாடு தவறிப் போகும்.

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் அமானுஷ்ய சக்திகளால் சில தொல்லைகள் இருக்கும். பூராடத்தில் சந்திரன் இருப்பது, சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகளையும், வம்பு வழக்குகளையும் ஏற்படுத்தும். உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால், தொழில் சம்பந்தமாக கடனாளியாக வேண்டிய சூழல் உருவாகும்.

மகரம்: இங்கு சந்திரன் இருப்பது சிறப்பான நன்மைகளைக் கொடுக் கும். பூர்வீகச் சொத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகளால் நன்மையும் குடும்பத்துக்கு லாபமும் உண்டு. தொழில் - வியாபாரம் மேன்மை அடைந்து, எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் தந்தை மூலம் நன்மைகள் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் நின்றால் தாயாரால் நன்மை உண்டு. அவிட்டம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் குடும்பம் மேலோங்கும். அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.

கும்பம்: கும்பத்தில் சந்திரன் இருப்பது நன்மையைக் கொடுக்காது. குலதெய்வம் எது என்றே தெரியாமல் போகும். கும்ப ராசி - அவிட்டத்தில் சந்திரன் இருந்தால், குடும்பத்தை விட்டுப் பிரிவார்கள். தந்தையுடன் முரண்பாடு ஏற்படும். சதய நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது மனநலத்தைப் பாதிக்கும்; அமானுஷ்ய சக்தியால் பீடிக்கப்படுவார்கள். முன்னோர் சாபம் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, தொழிலில் பின்னடைவை ஏற்படுத்தும்.

மீனம் லக்னமும் 
குலதெய்வ வழிபாடும்!

சுக்ர பரிகாரம்!

`சுக்கிரம்’ என்ற சொல்லுக்கு ஒளி மிக்கது என்று பொருள் கூறுவர். சுக்ர பகவான் ஒளி மிகுந்த வாழ்வை அருள்பவர். ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியான இவர், ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்திருந்தால் யோக வாழ்வை வரமாகப் பெறலாம்.

சுக்கிரன் மீனத்தில் உச்சமும் கன்னியில் நீச்சமும் பெறுவார். சூரியனுக்கு அருகில் செல்லும்போது அஸ்தங்கம், மெளட்யம், மூடம் எனப்படும் தன்மையை அடைகிறார். இதுபோன்ற அமைப்பில் சுக்கிரன் சஞ்சரிக்கும் நிலையில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துக்கூடாது என்கின்றன ஜோதிட நூல்கள்.

வெள்ளிக் கிழமைகளில் `பனி போன்ற வெண்ணிறம் உடையவரும், பார்க்கவன் என்ற பெயரைப் பெற்றவரும், அசுர குருவும், சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவருமான சுக்கிர பகவானை வணங்கு கிறேன்’ என்று மனதால் தியானித்து வழிபட்டால் சுக்ரபகவானின் பூரண அருளைப் பெறலாம்.

ஜாதகத்தில் இவர் இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும். சுக்ரபகவானின் அருளால் சுகபோக வாழ்வைப் பெற எளிய பரிகாரங்களை ஜோதிட நூல்கள் விளக்குகின்றன. அவை:

1. துர்கை வழிபாடு.

2. ஶ்ரீசூக்தம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற தேவி துதிப்பாடல்களைப் படிப்பது.

3.வெள்ளிக் கிழமை அதிகாலையில் சுக்ர பகவானை தியானித்து வழிபடுவது.

4. பட்டாடை, தயிர், பாலாடைக் கட்டிகள், வாசனைப் பொருள்கள், சர்க்கரை, அரிசி, ஆடைகள் ஆகியவற்றை வெள்ளிக் கிழமை மாலை வேளையில் ஏழைகளுக்குத் தானம் தருவது.

5. வெண்ணிற ஆடைகளை உடுத்துவது.

6. வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது.

7. அம்பாளுக்கு வெள்ளை மலர்களைச் சமர்ப்பித்து வணங்குவது.

- சி.கந்தசாமி, சென்னை-4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு