Published:Updated:

`மேஷ ராசி அன்பர்கள் இப்படித்தான்!'

மேஷ ராசியும் குணாதிசயங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
மேஷ ராசியும் குணாதிசயங்களும்!

- மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் -

`மேஷ ராசி அன்பர்கள் இப்படித்தான்!'

- மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் -

Published:Updated:
மேஷ ராசியும் குணாதிசயங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
மேஷ ராசியும் குணாதிசயங்களும்!

360 பிரிவுகளை உள்ளடக்கிய ராசிச் சக்கரத்தில் முதல் முப்பது பிரிவு மேஷ ராசி. ராசிச் சக்கரத்தில் முதல் மாதத்தை மேஷ மாதம் எனலாம். மேஷ ராசியை விளக்கும் அடையாளங்கள், வேண்டிய தகவலை அளிக்கின்றன.

`மேஷ ராசி அன்பர்கள் இப்படித்தான்!'

மேஷத்துக்கு அதிபதி செவ்வாய். சூரியனுக்கு அது உச்ச வீடு. இந்த இருவரது இயல்புகளும் மேஷத்தில் பிறந்தவனிடம் தென்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் ஒன்றுக்கொன்று முக்கோணத்தில் அமைந்திருக்கும். முக்கோண ராசிகளுக்கு லக்னத்தின் பெருமை இருக்கும்.

5-வது ராசி முன்ஜன்ம கர்மவினையை வரையறுக்கும் பகுதி. ஐந்தினுடைய ஐந்து அதாவது ஒன்பதாம் இடம் செழிப்பின் அளவைக் குறிப்பது. 9-வது வீட்டை ‘பாக்கியம்’, ‘அதிர்ஷ்டம்’ என்று குறிப்பிடுவது உண்டு. இந்த இரு சொற்களும் கண்ணுக்குப் புலப்படாத கர்மவினையைச் சுட்டிக்காட்டும். ஆக, அடிப்படைத் தகுதியான கர்ம வினை, அதன் செழிப்பு, அதைப் பெற்று உணர்பவன் ஆகிய மூன்றும் ஜாதகத்தின் கரு. இவை குறைவை அல்லது நிறைவை சந்தித்தால், வாழ்நாள் முழுதும் அதன் தாக்கம் இருக்கும்.

சூரியனின் ஸத்வ குணம், செவ்வாயின் ரஜோ குணம்... இன்ப- துன்பங்களில் பதறாத மனம் ஸத்வம்; ஆராயாமல் சடுதியில் செயல்பட நினைப்பது ரஜஸ். இந்த இரண்டும் கலந்த இயல்பு மேஷ ராசிக்காரர்களிடம் தென்படும். இவ்விருவரும் மேஷ ராசி முழுவதும் பரவி ஆட்கொள்பவர்கள். மற்ற கிரகங்களின் பகை, நட்பு, பார்வை, சேர்க்கை, நவாம்சம், த்ரிம்சாம்சம் - போன்ற பாகுபாட்டில் மாறுபட்ட பலனும் உணரப்படும்.

சிலநேரம், வாழ்க்கையில் சறுக்கி விழுந்து சங்கடத்தைச் சந்திக்க வைக்கும். துயரத்தைச் சந்தித்த பிறகு `ஆராயாமல் இறங்கி விட்டோமோ’ என்று, பச்சாதாபப்படுவதும் உண்டு. உடல் வலிமை குன்றாமல் இருக்கும். இலக்கணத்துக்கு ஏற்ற உடல்பாங்கு, செயல்படுவதில் இயல்பாகவே வளைந்து கொடுக்கும். ஊனமில்லாத உடல் வளம் பெறுவர். செயலில் உத்வேகம் மேலோங்கியிருக்கும்.

அதேநேரம் இந்த ராசிக்காரர்களுக்குத் தனிமையில் வெகுநேரம் இருக்க இயலாது. பொறுமை குன்றியிருக்கும். சிந்தனைகள் தாவித் தாவி மாறிக் கொண்டிருக்கும். கேசபாசங்களின் நிறம் மங்கலாக மாறலாம். சுயநலத்தில் ஈடுபாடு இருக்கும். அகங்காரமும் அடாவடித் தனமும் முகபாவத்தில் பளிச்சிடும். செயலில் ஆரம்பத்தில் காணப்படும் சுறுசுறுப்பு போகப் போகத் தேய்ந்து மறைந்துவிடும்.

`மேஷ ராசி அன்பர்கள் இப்படித்தான்!'

பிறர் உதவியை எதிர்பார்க்காமல் செயலில் சிறப்படையும் ஆர்வம் இருக்கும். கவனக்குறைவால் அடிபட்டு, மருத்துவமனையில் தங்கும் அவசியம் இருக்கும். முதுமையில் மனம் சார்ந்த பிணிகள் தோன்றும். பொதுச் சேவைகளில் தன்னை முன்வைத்து, தனது பெருமையை வளர்க்கும் இயல்பு இருக்கும். தனது பதவிக்குப் பெருமையைத் தேடும். தலைவன், செயலாளன், பொருளாளன், தொண்டன்... இதில் எதை ஏற்றாலும் அதில் தனக்கு அதிகாரம் இருக்கவேண்டும் என்று எண்ணும்.

தருணம் கிடைத்தால் தகுதியை வெளிப்படுத்தி வெற்றி பெறுவர். தன்னம்பிக்கை இருப்பதால் தளராத உழைப்பு தொடரும். எதிர்ப்புகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில் ஆர்வம் இருக்கும். கைவிடப்பட்ட செயல்களில் வெற்றி பெற்று, தற்பெருமையை வளர்த்துக்கொள்ளும் முனைப்பு இருக்கும். பிறரது நல்லுரைகள், சிந்தனைகள் இவர்களது சிந்தனையை மாற்றிவிடாது.

இவர்களுக்கு ஜாதகத்தில் செவ்வாயும், சூரியனும், குருவும் ஆறு வழிகளில் (ஷட்பலம்) பலம் பெற்றிருந்தால் சீரான வாழ்க்கையில் அமைதி பெறுவர்; விபரீதமானால், சங்கடங்களில் சிக்கித் தவிப்பார்கள். சங்கடங்கள் முளைக்காதவாறு சிந்தனை திருப்பிவிடப்பட்டால், அமைதி திரும்பும்.

மேஷம்- கிராம ராசி. கிராமியச் சூழல்- நடைமுறையில் ஆர்வம் இருக்கும். கிராமத்தில் வாழ்வது ஆடு. அதன் இயல்பும் பளிச்சிடும். பல் துலக்காமல், முகம் கழுவாமல் பானம் அருந்தும் பழக்கம் இவர்களில் சிலரிடம் தென்படும். ஆராயாமல் பிறரைப் பின்பற்றும் போக்கு இருக்கும். ஆடு, அதைக் காப்பவன் கூப்பிட்டால் வராது. கசாப்புக் கடைக்காரன் அழைத்தால் இசைந்துவிடும். பயணிக்கும் ஆடுகளில் ஒன்று பள்ளத்தில் விழுந்தால், அதைப் பின்தொடரும் ஆடும் அதே பள்ளத்தில் விழும். பள்ளத்தைப் பார்த்து திசை திரும்பாது. இலைகள், சருகுகள் ஆகியவற்றை உண்ணும். உஷ்ணமான உடலோடு உலாவும்.

கல்வி போதிக்கும் முயற்சிகளில் மேஷ ராசியைத் தவிர்ப்பர். மேஷத்தில் மந்திரோபதேசம் செய்வதில்லை.

ஆட்டின் பால், பல பிணிகளை அகற்றும் மருந்தாக செயல்படும். அதன் ரோமங்கள் குளிரிலிருந்து பாதுகாக்கும். இதை அடையாளமாகக் கொண்ட மேஷ ராசியினருக்கு, தன் உடமைகளை கொடை வழங்கி உதவுவதில் ஆர்வம் இருக்கும். இயற்கையின் சட்டதிட்டத்துக்கு உட்படுவதால், நீண்ட ஆயுள் இருக்கும். அதேநேரம் பிறரது சுய நலத்துக்கு இரையாகவும் வாய்ப்பு உண்டு.

மெதுவான போக்கு, பரபரப்பில்லாத செயல்பாடு சில நேரம் விபரீத விளைவுகளுக்கு வழிகோலும். இணைந்து செயல்படும் பாங்கு குறைவு. இல்லாத தகுதியை இருப்பதாக சித்திரிப்பதில் தயக்கம் இருக்காது. பதவிப் பெருமையை தனது பெருமையாக பறைசாற்றுவதில் ஆர்வம் இருக்கும். புகழைத் தக்கவைக்க, எத்தகைய செயல்களிலும் ஈடுபட மனம் தயங்காது. பூர்வஜன்ம வினை தலைதூக்கும்போது, சரிவைச் சந்திப்பதும் உண்டு.

`மேஷ ராசி அன்பர்கள் இப்படித்தான்!'
RomoloTavani

மேஷம் சர ராசி என்பதால் அசையும் பொருளில் ஆர்வம் இருக்கும். வாழ்வில் மாறுபட்ட சூழலை உருவாக்கிக் கொண்டிருப்பான். செவ்வாய்க்கு குஜன் என்ற பெயர் உண்டு. பூமியின் புதல்வன் என்று சொல்லலாம். இந்தக் கிரகத்தின் ஆளுமை தென்படும் ஆதலால், மேஷ ராசியினருக்குப் பூமியில் விளையும் பொருள்களில் பற்று, அதில் பொருளை ஈட்டும் ஆர்வம் இருக்கும். எதிர்வாதத்தை பொறுக்க இயலாமல் நிம்மதி இழப்பதும் உண்டு.

சூரியனின் தொடர்பு, இவர்களைச் செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றும். செவ்வாயும் சூரியனும் பாப கிரகங்கள். ஆனாலும் மேஷ ராசிக்கு அவ்விருவரும் நல்லதை மட்டும் வெளியிட்டு, கெடுதலை தலைதூக்கவிட மாட்டார்கள்.

விலங்கின ராசி இது. ஆடு- மாடுகளைப் பராமரித்தல், விலங்கின ஆராய்ச்சியில் தேர்ச்சி, அதன் வணிகத்தில் பொருளீட்டுதல், அதன் மருத்துவத்தில் இணைதல், இயற்கையோடு இணைந்து வாழ்தல், செல்லப் பிராணிகளை கவனித்தல் போன்றவையும் தென்படும். இணைந்து வாழ்வதற்காக, கசப்பான பல அனுபவங்களை பொறுத்துக்கொள்ளும் தன்மை இருக்கும்.

ஒருவருக்கு, பூர்வ ஜன்ம கர்மவினையின் தரத்துக்கு இணங்க, அவர் பிறக்கும் வேளையில் தென்படும் ராசி அமையும். ராசியை ஆராய்ந்தால் அவரது கர்மவினையின் வரைபடத்தை அறியலாம்.

லக்னத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகம், அதன் அதிபதி, அதிபதி நின்ற ராசி நாதன், அம்சகநாதன்... இவர்களுடன் லக்னம் இணையும்போது, பலனில் மாறுபாடு இருக்கும். கிரகங்களின் இயல்பு எதுவானாலும் ராசியுடன் இணையும்போது ஏற்படும் மாற்றம் நடைமுறைக்கு வரும். இப்படியும் சொல்லலாம்... கிரகங்கள் தன்னிச்சையாக பலன் அளிக்காமல், ராசியின் தொடர்பில் பலனை இறுதி செய்யும். அந்த அளவுக்கு ராசிக்குச் சிறந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேஷ ராசியைப் பொறுத்தவரையிலும் இந்த ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியான செவ்வாயும், கர்ம வினையைச் சுட்டிக் காட்டும் சூரியனும் வழிபட வேண்டியவர்கள். ராசியை வழிபடும் போது இருவரும் மகிழ்வர். ‘மேம் மேஷாய நம:’ என்று வழிபடும்போது, ராசியில் அடங்கும் அத்தனை கிரகங்களும் அருள்பாலிப்பார்கள்.

மூக்கில் மச்சம் இருக்கிறதா?

மூக்கில் மச்சம் இருந்தால் முன்கோபம் அதிகம் வரும் என்கிறது சாமுத்ரிகா லட்சண விளக்கம். இத்தகைய அன்பர்கள் எப்போதும் கெடுபிடியாக நடந்து கொள்வார்களாம். அதேநேரம், பெண்களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், சேவா மனப்பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகளில் விருப்பம் இருக்காது.

சரி, உதடுகளில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா? அது, பெருஞ் செல்வத்தைக் குறிக்கும். தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும்.


-கே. கதிர், மதுரை-2