நவரத்தினக் கற்கள் பதித்த ஆபரணங்களை அணியும் வழக்கம் நம் தேசத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. வலன் என்ற அசுரன், தான் பெற்ற வரத்தின்படி நவரத்தினக் கற்களாக மாறினான் என்பது புராணம் சொல்லும் கதை. திருவிளையாடல் புராணத்திலும் நவரத்தினங்கள் பற்றிய தகவல் உண்டு. `நவரத்தினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்புடன் பலன் தரும்; அவற்றில் வெளிப்படும் ஒளிக்கதிர்கள் தேக ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும்’ என்பது நம்பிக்கை.

முன்னோர்கள், நவரத்தினம் பதிக்கப்பட்ட ஆபரணங்களைத் தெய்வங்களுக்கு முதலில் சூட்டி மகிழ்ந்து, பின்னர் தாங்கள் அணிந்துகொண்டனர் என்ற தகவல் உண்டு. நவரத்தினங்கள் குறித்து விவரிக்கும் நூல்கள் சில, குறிப்பிட்ட கற்கள் குறிப்பிட்ட நபருக்கு அதீத அதிர்ஷ்டம் அளிக்க வல்லவையாகத் திகழும் என்கின்றன.
ஜோதிட சாஸ்திரப்படி நவரத்தினக் கற்களுக்கும் விண்ணிலே சுழலும் கிரகங்களுக்கும், ஒளிரும் நட்சத்திரங் களுக்கும் தொடர்பு உண்டு என்பார்கள்.
நட்சத்திரங்கள் - 27; கிரகங்கள் -9. இவற்றில் மூன்று நட்சத்திரங்களுக்கு ஒரு கிரகம் எனும்படி, 27 நட்சத்திரங் களும் ஒன்பது கிரகங்களுக்கு உரியவை என்று விவரிப்பார்கள்.
ஆக, ஒருவரது ஜன்ம நட்சத்திரம் மற்றும் அதுசார்ந்த கிரகத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட நவரத்தினக் கல்லை, அந்த ஜாதகருக்குப் பரிந்துரைக்கின்றன ஜோதிட நூல்கள். இந்த வகையில் உங்களின் ஜன்ம நட்சத்திரத்துக்கு ஏற்ப, உங்களுக்கான அதிர்ஷ்டக் கல்லை கீழ்க்காணும் விவரப்படி அறியலாம்.
நட்சத்திரம் - உரிய கிரகம் - அதிர்ஷ்டக்கல்
அசுவினி, மகம், மூலம் - கேது: வைடூரியம்
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன்: வைரம்
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் மாணிக்கம்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்- சந்திரன் முத்து
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்: பவழம்
திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு: கோமேதகம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு: மஞ்சள் புஷ்பராகம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி: நீலம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - மரகதப்பச்சை
சரி, ஒருவருக்கு ஜனன ஜாதகம் கணிக்கப்படவில்லை. ஜன்ம நட்சத்திரம் முதலான விவரங்கள் தெரியவில்லை... என்ன செய்யலாம். எண்கணித சாஸ்திர முறையில், பிறவி எண் அடிப்படையில் அருகிலுள்ள விவரப்படி அதிர்ஷ்டக் கல்லைத் தெரிந்துகொள்ளலாம். உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே பிறவி எண். (ஒருவரின் பிறந்ததேதி 27 எனில், பிறவி எண் 9; பிறந்த தேதி 6 எனில் பிறவி எண் 6 ஆகும்.)

பிறவி எண் - கிரகம் - அதிர்ஷ்டக்கல்
1. சூரியன் மாணிக்கம்
2. சந்திரன் முத்து
3 . குரு மஞ்சள் புஷ்பராகம்
4. ராகு கோமேதகம்
5. புதன் பச்சை மரகதம்
6. சுக்கிரன் வைரம்
7. கேது வைடூரியம்
8. சனி நீல,
9. செவ்வாய் பவழம்