Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: மிதுனம் - லாபம் அதிகரிக்கும்! | கே.பி. வித்யாதரன்

மிதுனம்  ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
மிதுனம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சுக்கிரபகவான் உங்களுக்கு சாதகமான ராசிகளில் சஞ்சரிப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவினர்கள் தேடிவந்து அன்பைப் பொழிவார்கள். பழைய வாகனத்தைச் சரி செய்வீர்கள்.

கடந்த ஆண்டில், அஷ்டம சனி, அஷ்டம குரு என்று படாத பாடுபட்டு எப்போது இதிலிருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும் என ஏங்கியிருந்த மிதுன ராசி அன்பர்களே... கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்த குருப்பெயர்ச்சி தங்களுக்கு சாதகமாகி குருவின் பார்வையைப் பெற்று அஷ்டமசனியின் தாக்கத்திலிருந்து தற்போதுதான் கொஞ்சம் இளைப்பாறியிருக்கிறீர்கள். இந்நிலையில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களைத் தரப்போகிறது.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் பிறப்பதால் மனதில் இருந்த மனக்கவலைகள், பயம் தடுமாற்றம் ஆகியன நீங்கும். நம்பிக்கையோடு செயல்படத் தொடங்குவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு பிறக்கும்.

2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சுக்கிரபகவான் உங்களுக்கு சாதகமான ராசிகளில் சஞ்சரிப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவினர்கள் தேடிவந்து அன்பைப் பொழிவார்கள். பழைய வாகனத்தைச் சரி செய்வீர்கள். வீடுகட்டும் பணியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் ராசி அதிபதியான புதபகவான் மறைவு ஸ்தானமான எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இந்தப் புதுவருடம் பிறப்பதால் மிகுந்த நற்பலன்கள் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் பேர் புகழ் அதிகரிக்கும். நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

செவ்வாய் பகவான், இந்த ஆண்டு பிறக்கும் போது ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தடைகள் நீங்கும். பல முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். நிலம் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சொந்த வீடு மனை வாங்கும் கனவு நனவாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குருபகவான் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து பலன் தருகிறார். இதனால் பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளும் பணவரவும் உண்டாகும். குடும்பத்தினரின் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதிய வாகன யோகம் உண்டாகும்.

14.4.2022 முதல் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் குருபகவான் சஞ்சரிக்க இருப்பதால் அதிக பொறுப்புடன் நடந்துகொள்வது நல்லது. முன்யோசனை அவசியம். அலுவலக வட்டாரங்களில் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். ஆடம்பரம், பெருமை ஆகியவற்றுக்காகச் செலவு செய்வதைக் கட்டுப்படுத்துங்கள். யாருக்கும் உத்திரவாதம் கொடுக்க வேண்டாம். குழந்தைகளின் மீது உங்களின் பார்வை இருக்கட்டும்.

குருபகவான்
குருபகவான்

முக்கியமான வேலைகளை நீங்களே செய்துவிடுங்கள். அடுத்தவரிடம் ஒப்படைத்துப் பின் அது நிகழாமல் போய் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம். இருக்கும் வேலையை விடுவதற்கு முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசனை செய்யுங்கள்.

சனிபகவான் எட்டாம் இடத்திலேயே தொடர்வதால் அனைத்திலும் அதிக எச்சரிக்கை அவசியம். தேவையற்ற சிக்கல்கள், பிரச்னைகள், பிரிவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

ராகு பகவான் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டிலேயே சஞ்சரிக்கிறார் என்பதால் அனைத்திலும் ஒரு மறைமுக லாபம் இருக்கும். என்றாலும் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றிய வண்ணம் இருக்கும். திடீர் பயணங்கள் ஏற்பட்டு உடல் அசதியும் உண்டாகும். யாரையும் நம்பிப் பணம் கொடுக்கவோ பொருள்களைக் கொடுக்கவோ வேண்டாம். பேச்சிலும் அதிக கவனம் தேவை. கேதுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். புதிய பெரிய வீட்டுக்குக் குடிபோவீர்கள். அயல்நாட்டு யோகம் வாய்க்கும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஆனால் 21.3.2022 முதல் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் ராகுவும், 5-ல் கேதுவும் நுழைவதால் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பல நற்பலன்கள் உண்டாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள்: லாபம் உயரும். பணியாளர்களால் சிறு தொல்லை ஏற்பட்ட வண்ணம் இருக்கும். என்றாலும் அவர்களை அனுசரித்துப் போங்கள். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நீங்கள் வேறு வேலைகளைப் பார்க்க வேண்டாம்.

தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். புது வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பீர்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கலாம். எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றும். ஆனாலும் உங்களுக்குத் தொந்தரவு தந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புதிய வேலை வாய்ப்புகளும் தேடிவரும். ஜூன், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் இந்த 2022ஆம் ஆண்டு உங்களைத் திடப்படுத்தி நல்ல முடிவுகளை நோக்கி நகர்த்தும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கிப் பணப்புழக்கம் அதிகமாகும்.

பரிகாரம்: சுவாமிமலை முருகப் பெருமானை சஷ்டி திதியில் சென்று வணங்குங்கள்.