Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு மீனம் ராசிபலன்கள்

மீனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனம்

2022 புத்தாண்டு ராசிபலன்கள் மீனம்

மற்றவர்களின் துன்பங்களை ஏற்று, அவர்களுக்கு உதவும் சுமைதாங்கி நீங்கள்.உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் 2022 புத்தாண்டு பிறப்பதால், நீங்கள் விஸ்வரூபம் எடுப்பீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மரியாதை கூடும்.

ஆங்கிலப் புத்தாண்டு மீனம் ராசிபலன்கள்

ங்களுக்கு லாப வீட்டில் சுக்கிரனும், புதனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பழைய நகைகளை விற்று புது ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.

20.3.2022 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம், உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். 13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங் களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை ஏற்படும்.

14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக அமர்வதால், ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். விலையுயர்ந்த தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். இனந்தெரியாத கவலைகள் வந்து போகும்.

சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். காரியங்கள் தடையில்லாமல் முடியும். புது சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்வுகளில் முதல் மரியாதை கிடைக்கும். சொத்து வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். பழைய சொந்த-பந்தங்கள், நண்பர்கள் மதிப்பார்கள்.

வியாபாரிகளே! ஜனவரி மாதத்தில் திடீர் லாபம் உண்டு. வியாபாரத்தைப் பெருக்க விளம்பரம் செய்வீர்கள். மே, ஜூன் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடையை விரிவு படுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வங்கிக்குக் கட்ட வேண்டிய கடனை முறையாகச் செலுத்துவீர்கள். புரோக்கரேஜ், என்டர்பிரைஸ், செங்கல், பேக்கரி, வாகன உதிரிபாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். டிசம்பர் மாதத்தில், பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! வேலைச் சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவான பேச்சால் நிம்மதி அடைவீர்கள். இடமாற்றம் இருந்தாலும் மீண்டும் விரும்பிய இடத்தில் வந்தமர்வீர்கள். ஜனவரி மாதத்தில் தகுதி உயரும். ஜூன் மாதத்தில் புது வாய்ப்புகளும், பதவிகளும் அமையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, சிற்சில கஷ்டங்களைக் கொடுத்தாலும் நிறைவில் கடின உழைப்பால் சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில், திருவானைக் காவல் கோயிலில் அருளும் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரியை வணங்கி வழிபட்டு வாருங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்; வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்கும்.