Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு கும்பம் ராசிபலன்கள்

கும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பம்

2022 புத்தாண்டு ராசிபலன்கள் கும்பம்

அமைதியாக எதையும் சாதிக்க வல்லவர் நீங்கள். உங்களுக்குப் பத்தாவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பதவி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு நல்ல வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு
கும்பம் ராசிபலன்கள்

சுக்கிரன் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகளைப் பெருக்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய இடத்தை விற்றுவிட்டு, புது சொத்து வாங்குவீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால், சமயோசிதமாக செயல்பட்டுச் சாதிப்பீர்கள். சொந்தபந்தங்கள் மனக்குறைகளை மறந்து இணைவார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். செவ்வாய் வலுவாக இருப்பதால் ரியல் எஸ்டேட், கமிஷன் வகைகளால் பணம் வரும். அரசியலில் செல்வாக்கு கூடும்.

20.3.2022 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால், அடுக்கடுக்கான வேலை களால் அவதிக்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பளப் பிரச்னை, மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். தாயாருக்கு முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும்.

மார்ச் 21-ம் தேதி முதல் வருடம் முடியும் வரை, ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால், பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டுவலி வந்து செல்லும். ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். சிலருக்கு மஞ்சள்காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும்.

14.4.2022 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு குரு விலகி 2-ம் வீட்டில் தொடர்வதால், பண வரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். சிலருக்குப் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர்களும் நண்பர்களும் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவர். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து, ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரயச் சனியாகத் தொடர்கிறார். ஆகவே, வருங் காலத்தைப் பற்றியும் கடன் குறித்தும் பயம் வந்து நீங்கும். பணவரவு ஓரளவு இருக்கும். நல்லது செய்தும் கெட்டப் பெயரே மிஞ்சும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசு அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

வியாபாரிகளே! மே, ஜூன் மாதங்களில் லாபம் உயரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில், பங்குதாரர் களை அனுசரித்துச் செல்லவும். ஹோட்டல், கட்டட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தாக இடமாற்றம் உண்டு. மே, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அலைச்சல் - செலவினங்களைத் தந்தாலும், வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றி உங்களை மகிழ வைப்பதாக அமையும்.

பரிகாரம்: துவாதசி திதி நாளில், நாச்சியார் கோவிலில் அருளும் ஶ்ரீநிவாஸப் பெருமாளை வழிபட்டு வாருங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வீட்டில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும்.