சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருவெம்பாவைப் பெருவிழாக் கழகம் சார்பில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெறும். அதனடிப்படையில் இந்த வருடம் 20வது ஆண்டு 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது.
முன்னதாக சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், பால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ருத்ர பாராயணமும் சிறப்புயாகமும் நடைபெற்றதை தொடர்ந்து, வலம்புரி விநாயகர் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகள் செய்யப்பட்டன. பின்னர் மாலையில் சுகவனேஸ்வரர்- சொர்ணாம்பிகை ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நந்தி வாகனப் பல்லக்கில் எழுந்தருளினர்.
அதைத் தொடர்ந்து திருமூலர் புத்தகத்திற்குப் பூஜை செய்யப்பட்ட பின்னர் சேக்கிழார் சிறு தொண்டர் நாயனார், திருமூலர், திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், ஸ்ரீசடைய நாயனார், ஸ்ரீ நீலகண்ட யாழ்ப்பாணர், பூசலார் நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்குப் பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி பல்லக்கில் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க சிவாசார்யர் அர்ச்சனை செய்த பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களும் திருவீதி உலா கண்டருளினர். சுகவனேஸ்வரர் கோயிலில் தொடங்கி சின்னக் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி கோயில் வழியாக மீண்டும் சுகவனேஸ்வரர் ஆலயத்தை அடைந்தது ஊர்வலம். இந்தத் திருவீதி உலாவைக் காண அப்பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர். திருவீதி உலா வைபவத்தின் ஏற்பாட்டினை திருவெம்பாவைப் பெருவிழாக் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.