Published:Updated:

இறைவனை வணங்கிப் புத்துணர்வோடு வரவேற்க வேண்டிய பிலவப் புத்தாண்டு... சிறப்புகள் என்னென்ன?

தமிழ்ப் புத்தாண்டு

இன்று அதிகாலை 2.33 மணிக்கு மீன ராசியிலிருந்து பெயர்ந்து மேஷ ராசியை அடைந்தார் சூரிய பகவான். இனிய பிலவப் புத்தாண்டு பிறந்தது.

இறைவனை வணங்கிப் புத்துணர்வோடு வரவேற்க வேண்டிய பிலவப் புத்தாண்டு... சிறப்புகள் என்னென்ன?

இன்று அதிகாலை 2.33 மணிக்கு மீன ராசியிலிருந்து பெயர்ந்து மேஷ ராசியை அடைந்தார் சூரிய பகவான். இனிய பிலவப் புத்தாண்டு பிறந்தது.

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறக்கிறது. சூரியனை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணக்கிடப்படும் ஆண்டுக்கணக்கே தமிழ்ப்புத்தாண்டு. கால புருஷ தத்துவத்தின் படியும் ஜோதிட சாஸ்திரங்களின் படியும் 12 ராசிகளில் முதல் ராசி மேஷம். மேஷ ராசியில் சூரியன் நுழைவதிலிருந்து அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள ஒருமாத காலமே சித்திரை மாதம் எனப்படுகிறது. இதுவே தமிழ்ப்புத்தாண்டின் முதல் மாதம். பிலவ வருடம் 60 தமிழ் ஆண்டுகளில் 35-வது தமிழ் ஆண்டாக மலர்கிறது.

இன்று அதிகாலை 2.33 மணிக்கு மீன ராசியிலிருந்து பெயர்ந்து மேஷ ராசியை அடைந்தார் சூரிய பகவான். இந்தப் புண்ணிய காலத்தை ‘சைத்ர விஷூ புண்ணிய காலம்’ என்பர். இந்தத் தமிழ் புத்தாண்டு ‘வசந்த ருது’ என்று வசந்த காலமாகவும் கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவான்
சூரிய பகவான்
இந்த நாளைக் கேரள மக்கள் 'விஷு' என்றும், அசாம் மக்கள் 'பிஹு' என்றும், பஞ்சாப் மக்கள் 'வைஷாகி' என்றும், மேற்கு வங்க மக்கள் 'பொஹெலா பொய்ஷாக்' என்றும் அவரவர்களின் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தில் நெடுநல்வாடை, அகத்தியர் பன்னீராயிரம், புட்பவிதி, மலைபடுகடாம், பழமொழி நானூறு போன்ற தமிழ் நூல்கள் இளவேனில் தொடக்க காலமான சித்திரையே அந்த ஆண்டின் தலைநாளாக மலர்ந்தது என்று சான்று பகர்கின்றன. சித்திரை முதல் நாளன்று தமிழர்கள் அதிகாலையில் நீராடிக் கோலமிட்டு, தூப தீபமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவுகளோடு கலந்து விளையாடி மகிழ்வதும் விருந்து உண்பதுவும் நடைபெறும். புதிதாக பூக்கும் வேப்பம்பூ, மாம்பூ கலந்த வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி அன்றைய உணவில் கட்டாயம் இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நாளில் மிக முக்கியமாய் வீட்டின் பெரியவர்கள் பஞ்சாங்கம் படிப்பதும் முக்கியமாகக் கருதப்படும். வீடுகளில் மட்டுமல்ல, கோயில்களிலும் பஞ்சாங்கம் படிப்பார்கள். இந்த வைபவத்துக்கு ‘பஞ்சாங்க படனம்’ என்பர். அந்த ஆண்டில் நடைபெற இருக்கும் நன்மை தீமைகளை கலந்து ஆலோசித்து அதற்கு ஏற்ப பரிகாரங்களையும் முன்னேற்பாடுகளையும் பெரியோர்கள் செய்வார்கள்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டு புண்ணியக் காலத்தில், கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான மருந்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை பெரியவர்கள் இளையவர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிப்பர். இந்த மூலிகை நீர் மஞ்சள், வில்வம், தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிரந்தி, செங்கழுநீர், ஆடாதோடை, அறுகு, பீர்க்கு, கோசலம், கோமயம், கோரோசனை, சந்தனம், திப்பிலி, சுக்கு போன்ற அற்புதமான அபூர்வ மூலிகைகள் கொண்ட கலவை. இதில் நீராடினால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என்பது நம்பிக்கை.

 தமிழ்ப் புத்தாண்டு!
தமிழ்ப் புத்தாண்டு!
நீராடி தெய்வ வழிபாடுகள் முடித்த பின்னர் இளையவர்கள் பெரியவர்களிடம் கைவிசேடம் எனும் அன்பளிப்பு பணத்தைப் பெறுவர். பணியாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் கைவிசேடம் பெறுவர். பெண்கள் தங்கள் தந்தை, சகோதரர்கள், கணவனிடம் பெற்றுக் கொள்வார்கள். மேலும் இந்திரதேவ குமாரனின் வருகையைக் கொண்டாடும் விதமாகவே சித்திரை புத்தாண்டை சிங்கள பெளத்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

மேலும் கிராமப் புறங்களில் தமிழ் புத்தாண்டு நாளில் போர்த் தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், பானை உடைத்தல், வசந்தனாட்டம், தெருக்கூத்து, மகிடிக் கூத்து போன்ற பாரம்பர்யக் கலை விளையாட்டுகள் நடந்ததுண்டு.

சதுர் மஹாயுகம் தொடங்கியது சித்திரை முதல் தேதியன்றுதான் என்கின்றன சாஸ்திர நூல்கள். கிருத யுகம் சித்திரை வளர்பிறை துவிதியையிலும், கூர்ம கல்பம் வளர்பிறைப் பஞ்சமியிலும், சித்திரை வளர்பிறை சப்தமியில் கங்கையும் பிறந்ததாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. மேலும் சித்திரை வளர்பிறை திரயோதசியில் மச்ச அவதாரம் நடந்தது என்றும், சித்திரை தேய்பிறைப் பஞ்சமியில் வராக அவதாரமும் நடந்தன என்றும் சொல்கின்றன புராணங்கள்.

அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள்
சென்னை - திருவல்லிக்கேணி
அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் சென்னை - திருவல்லிக்கேணி

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட சித்திரைத் திங்கள் நாள் இன்று பிறக்கிறது. கடந்த ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமையவில்லை. இந்த ஆண்டும் பல சவால்கள் கொண்ட ஆண்டாக அமையலாம். நாம் வேண்டுவதெல்லாம் அனைத்து சவால்களையும் எதிர்நோக்கும் வலிமையை நமக்கு அந்த இறைவனே வழங்க வேண்டும் என்பதுதான். அதற்கான பிரார்த்தனையை முன்னெடுக்கும் நாளாக இந்த நாள் அமையட்டும்.

ஆரோக்கியமும், செல்வ வளமும் அனைவருக்கும் பெருகட்டும். நோய்களும் வறுமையும் விலகி ஓடட்டும் என்னும் பிரார்த்தனையோடு இந்த நாளை நாம் தொடங்குவோம்.

அனைவருக்கும் இந்தப் பிலவப் புத்தாண்டு மிகவும் மங்கலகரமான ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்!