லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

14.4.2021 முதல் 13.4.2022 வரை

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

மேஷம்: பிலவ வருடத்தில் எதிர்பாராத பணவரவு, புகழ் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். உறவினர்களின் தொந்தரவுகள் குறையும். ராசிக்கு 10-ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் கணவருக்கு அலைச்சல், மருத்துவச் செலவுகள் வந்துசெல்லும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. அரசாங்கக் கெடுபிடிகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களின் நெடுநாள் கனவாக இருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் வைகாசி மாதத்தில் நிறைவேறும். இருந்தாலும் உங்கள் வளர்ச்சியை விரும்பாத சிலர் குறை கூறிக்கொண்டிருப்பார்கள். ஆக மொத்தம், இந்தப் புத்தாண்டு அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும். பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மாற்றுத்திறனுடைய பெண்ணுக்கு உதவுங்கள். 65%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம்: இந்த பிலவ ஆண்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பாராமுகமாக இருந்த கணவர் பாசமழைப் பொழிவார். அவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் நல்ல இடம் கிடைக்கும். மாமனார், மாமியார் மதிப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சொந்தங்கள் மதிக்கும்படி வாழ்க்கைத் தரம் உயரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் ஈட்டுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரவு உயரும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இட மாற்றம் கிடைக்கும். புதிய சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களை வெற்றிக்கனியைச் சுவைக்க வைக்கும். பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை வணங்குங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். 70%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

மிதுனம்: உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். கணவர் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். அடிக்கடி விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வருமானம் உயரும். வீடு, மனை வாங்குவதன் பொருட்டுக் கடன் வாங்குவீர்கள். மாமனார், மாமியார் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ராகு 12-ல் மறைவதால் சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஆர்வம் பிறக்கும். உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியாலும் சகிப்புத்தன்மையாலும் சாதிக்க வைக்கும். பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று அங்கிருக்கும் பைரவரை வணங்குங்கள். கூலித் தொழிலாளிக்கு உதவுங்கள். 58%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

கடகம்: சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் பிலவ வருடம் பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உங்களின் சாதனை தொடரும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். கணவரின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. நகைகளை இரவல் தர வேண்டாம். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும் என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். இந்தப் புத்தாண்டு ஆரோக்கியத்திலும், பண விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாக அமையும். பரிகாரம்: ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். துப்புரவுத் தொழிலாளிக்கு உதவுங்கள். 55 %

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஒதுங்கியிருந்த கணவர் விரும்பி வந்து பேசுவார். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. மாமனார், மாமியார் மதிப்பார்கள். சொத்து வாங்குவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அமைதியாக இருந்து பெரிய விஷயங்களை முடிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை மறந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்கள் மதிப்பார்கள். பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். புதிய வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்தப் புத்தாண்டு குடும்பத்தில் அமைதியையும் வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும். பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று சிவாலயத்துக்குச் சென்று வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். 75%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

கன்னி: வருமானம் உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார். மாமனார், மாமியார் மதிப்பார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், தோழிகள் வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். வி.ஐ.பிக்களின் உதவியுடன் சாதிப்பீர்கள். கோயிலில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். இந்த வருடம் உங்கள் ராசிக்கு எட்டாவது ராசியில் பிறப்பதால் வீண் டென்ஷன், பகை, ஆரோக்கியக் குறைவு, செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. இந்தப் பிலவ வருடம் முற்பகுதியில் வேலைச்சுமையைத் தந்தாலும் மையப் பகுதியிலிருந்து மகிழ்ச்சியைத் தருவதாக அமையும். பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்துக்குச் சென்று வணங்குங்கள். ஏழைகளின் திருமணத்துக்கு உதவுங்கள். 56%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

துலாம்: உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்தாண்டு பிறப்பதால் சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வி.ஐ.பிக்களால் ஆதாயமடைவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்னைகளுக்குப் புதிய வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மகளுக்கு நல்ல வரன் அமைவார். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 4-ம் வீட்டில் சனி தொடர்வதால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். செலவுகள் துரத்தும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு எந்த வேலையையும், கொஞ்சம் அலைய வைத்து முடிக்க வைத்தாலும் முன்னேற்றப் பாதையில் தடையின்றி செல்ல வைக்கும். பரிகாரம்: அருகிலிருக்கும் விஷ்ணு கோயிலுக்குச் செல்லுங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். 63%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கொஞ்சம் வளைந்துகொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இங்கிதமாகப் பேசி, கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். கணவர் தன் தவற்றை உணர்வார். உங்களுக்கும் விட்டுக்கொடுக்கும் மனம் வரும். இந்த ஆண்டு முழுக்க குரு ஓரளவு மட்டுமே சாதகமாக இருப்பதால் காரிய தாமதம், இழப்பு, ஏமாற்றம், விபத்து, தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தடைப்பட்ட அரசு காரியங்கள் முடியும். வீடு மாறுவீர்கள். புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். மாமியார் ஏதேனும் குற்றம் குறை கூறுவார். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். உயரதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். ஆக மொத்தம், இந்த வருடம் திடீர் வெற்றியையும் புகழையும் பணபலத்தையும் தருவதாக அமையும். பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள். விபத்தில் சிக்கிய குடும்பத்துக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். 64%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

தனுசு: உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் உங்கள் கை ஓங்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கணவரின் குற்றம் குறைகளை அடிக்கடி குத்திக் காட்ட வேண்டாம். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். ஆனால், 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆனாலும், இந்த ஆண்டு முழுக்க பாதச்சனி தொடர்வதால் பணம், நகை வாங்கித்தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். நெருங்கிய உறவினர் மற்றும் நீண்டகாலத் தோழியாக இருந்தாலும் அவர்களின் குடும்ப விஷயத்தில் அநாவசியமாக நுழையாதீர்கள். நெடுநாள்களாகத் தடைப்பட்டுக்கொண்டிருந்த குலதெய்வ நேர்த்திக்கடனைச் செய்து முடிப்பீர்கள். 12-ல் கேது நிற்பதால் சில நேரங்களில் அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். வைகாசி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை. இந்தத் தமிழ்ப் புத்தாண்டு சமூகத்தில் அந்தஸ்தையும் நிம்மதியையும் தருவதாக அமையும். பரிகாரம்: அருகிலுள்ள துர்கையம்மன் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள். 52%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

மகரம்: உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றும். பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். கணவரின் கோபம் குறையும். உங்களின் பெருந்தன்மையை இனிமேல் புரிந்துகொள்வார். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். ஆனால், 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு பகவான் ஜன்மகுருவாக இருப்பதால் உடல் உபாதை, வீண் அலைச்சல் வந்து போகும். மாமியார் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார். ஜன்ம சனி தொடர்வதால் சில நேரங்களில் முன்னுக்குப்பின் முரணாக முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னை வரும். கேது லாப வீட்டில் தொடர்வதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உடல் ஆரோக்கியத்தையும் மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும். பரிகாரம்: பிரத்யங்கரா தேவியை நினைத்து வணங்குங்கள். நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுங்கள். 54%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

கும்பம்: உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்தப் பிலவ ஆண்டு பிறப்பதால் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடித்துக்காட்டுவீர்கள். துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவர், மாமனார், மாமியார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். புது வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அவ்வப்போது வீண் விரயம், சுபச் செலவு, அலைச்சலும் வந்துபோகும். ஏழரை சனி தொடர்வதால் விரக்தி, ஏமாற்றம், விபத்து, வீண் சந்தேகம் வந்துபோகும். உறவினர்கள் உங்கள் உண்மை நிலையறியாது உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். சொத்து வாங்குவதற்கு முன் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். ஆவணி, மாசி மாதங்களில் புது வேலை கிடைக்கும். இந்தப் பிலவப் புத்தாண்டு திடீர்ச் செலவுகளில் உங்களை சிக்கவைத்தாலும் வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அமைத்துத் தரும். பரிகாரம்: அருகிலிருக்கும் புற்றுக் கோயிலுக்குச் சென்று வணங்குங்கள். வாய்பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். 51%

பிலவ வருடம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

மீனம்: உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் இரட்டிப்பாகும். துணிச்சலாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிக்களின் உதவியால் சில விஷயங்களை சாதித்துக்காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். எதிர்பாராத செலவுகள், பயணங்களால் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. சனி பகவான் லாப வீட்டில் நிற்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய கொள்முதல் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு மேலதிகாரி அங்கீகாரம் அளிப்பார். நெடுநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்புண்டு. இந்தப் பிலவ வருடம் அடங்கிக்கிடந்த உங்களைப் பொங்கி எழவைப்பதுடன், அடிப்படை வசதிகளை உயர்த்துவதாக அமையும். பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். 82%