ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

மீன ராசி அன்பர்களே நீங்கள் இப்படித்தான்

குரு பகவான்
பிரீமியம் ஸ்டோரி
News
குரு பகவான்

தர்ம சிரேஷ்டர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மீனம் - ராசிச் சக்கரத்தில் முதல் ராசியை இணைக்கும் கடைசிக் கண்ணி; ராசிச் சக்கரத்தின் கடைசி 30 ஆரங்கள் இணைந்திருக்கும் பகுதி. 330 முதல் 360 வரையிலான பாகைகள் இதில் அடக்கம். மீன ராசிக்கு அதிபதி குரு. தனுசுக்கும் குருவே அதிபதி. ராசி புருஷனின் பாக்கியத்தையும் இழப்பையும் நிர்ணயிக்கும் பொறுப்பில் குருவுக்குப் பங்கு உண்டு. இந்த ராசியில் சுக்கிரன் உச்சன்; புதன் நீசன்.

மீன ராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்

அறிவும் ஆற்றலும் பின்தள்ளப்பட்டாலும், செல்வச் செழிப்பானது வாழ்வின் இழப்பை நிரப்பிவிடும். சுக்கிரனும் புதனும் மீனத்தில் அமர்ந்து நீசபங்கம் வந்துவிட்டால், சிந்தனை வளமும் செல்வச் செழிப்பும் நிறைவாகி மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம் இரண்டு மீன்கள் ஒன்றுக்கொன்று இணைந்த ராசி. ஜலராசி, உபயராசி, பெண் ராசி, ஜீவ ராசி, ஸம்ஹார ராசி (முடிவைக் குறிக்கும் ராசி), பகல் ராசி, குட்டையான ராசி, கர்ப ராசி- இப்படிப் பல மாற்றங்கள் உண்டு.

ஆன்மிக விஷயத்தில் நாட்டம், ஈவு இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, கிடைத்ததைப் பகிர்ந்தளிக்கும் பாங்கு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை, பொது நன்மைக்கு அர்ப்பணிப்பு ஆகிய அத்தனையும் இந்த ராசிக்காரர்களிடம் தென்படும்.

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் வலுப்பெற்று இருந்தால், பெயரும் புகழும் தேடி வரும். உலகளாவிய அங்கீகாரமும் தேடி வரும். சிந்தனை வளம் பெற்று தலைவ னாகவும் தென்படுவர். புதன், சுக்கிரன், சனி வலுப்பெற்றால், குடத்தில் வைத்த விளக்கு போல் பெயரும் புகழும் பரவாமல் மறைந்துவிடும்; முயற்சிகள் தோல்வியுற்று தன்னையே நொந்துகொள்ளும் நிலை ஏற்படும். பணி செய்ய மனம் இருந்தும் செயல்பட முடியாமலும், செயல்படவிடாமலும் இருக்கும் சூழலைச் சந்தித்து துயருறுவார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உலக வழிகாட்டியாகவும் உயர்வை அடைவர். மதத் தலைவனாகவும், அரசர்களின் அதாவது அமைச்சர்களின் ஆலோசகனாகவும் திகழ்வர். தரம் தாழ்ந்த சிந்தனை இவர்களிடம் இருக்காது. மானத்தைத் தக்கவைக்க உயிரை இழக்கவும் தயங்கமாட்டார்கள். நல்லவர்களை மதிப்பதில் ஆர்வம் இருக்கும். பாட்டு, வாத்தியம், நாட்டியம், கலைகள் அத்தனையிலும் விருப்பம் இருக்கும். இவற்றை வளர்ப்பதிலும், கற்றறிந்து மகிழ்வதிலும் மிகுந்த விருப்பம் இருக்கும்.

மீன ராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்

லக்னாதிபதி நீசம் பெற்று, வ்யயாதிபதி வலுப்பெற்று, சந்திரனும் பலமிழந்து காணப் பட்டால், மறைமுகமாக பலரை எதிர்த்து, கெட்டபெயரைச் சம்பாதித்து, அரசாங்க தண்டனையில் சிக்கித் தவித்து வாழ்வை அவலமாக்க நேரிடலாம்.

முதல் அம்சகம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம்) குரு தசை இருக்கும். அடுத்த நான்கு அம்சகங்கள் (உத்திரட்டாதி 1, 2, 3, 4) சனி தசையில் முடிவடையும். கடைசி நான்கு அம்சகங்கள் (ரேவதி 1, 2, 3, 4) புதன் தசையைத் தழுவும். கடகத்துக்கும் விருச்சிகத்துக்கும் இதே தசா வரிசைகள் இருந்தாலும் ராசியின் தன்மையில் பலன் மாறுபட்டிருக்கும்.

சனி வலுப்பெற்று இருந்தால், 20 வயதுக்குள் கல்வியை முழுமையாகப் பெற்று வாழ்வின் அடித்தளம் திடமாகும். புதன் தசையில் தாம்பத்திய வாழ்விலும் பணம் ஈட்டுவதிலும் வெற்றி பெற்று விளங்குவர். 37 வயதுக்குப் பிறகு சந்திக்கும் கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய அத்தனைபேரும் அறிவுத்திறனை வளர்த்து, பிறப்பின் இலக்கை எட்டவைப்பார்கள்.

5-க்கு உடைய சந்திரனும், 9-க்கு உடைய செவ்வாயும் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத் தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். மனம் (சந்திரன்) சுறுசுறுப்போடு (செவ்வாய்) இயங்கும் தறுவாயில், நேரான சிந்தனைகள் (குரு) இணையும்போது, மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வர்.

மீன ராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்

‘கும் குரவே நம: சம் சந்திராய நம: கும்குஜாய நம:’ என்று சொல்லி மூவரையும் வழிபடலாம். ரஜோ குணம் செயல்படும்போது, அதை அளவோடு காப்பாற்ற குருவின் ஒத்துழைப்பு தேவை. அதை வெற்றிபெறச் செய்வதற்கான மனத் தெளிவு பெற சந்திரனின் இணைப்பு அவசியம்.

‘பிரஹஸ்பதே’ ‘ஆப்யாயஸ்வ’ ‘அக்னிர் மூர்த்தா’ - என்ற மந்திரங்களைச் சொல்லியும் வழிபடலாம். ‘குஜம் பிரஹஸ்பதிம் சந்திரம் ஸர்வா பீஷ்டப்ரதாயகம், நமாமி ப்ரயா பக்த்யா மன: ஸந்துஷ்டிஹேதவே’ - என்ற செய்யுளைச் சொல்லி, கைகளால் புஷ்பத்தை அள்ளி அளித்து வணங்கலாம்.

எல்லா கிரகங்களுடைய ஒட்டுமொத்த இணைப்பே பலனின் இறுதி முடிவை எட்ட வைக்கிறது. ஆகவே, கிரகங்களை தனித் தனியாகப் பிரித்து பார்க்காமல் சேர்த்து வழிபடுவது சிறப்பு. நவகிரக ஆராதனை, நவக்கிரக ப்ரீதி, நவக்ரஹ யக்ஞம்- இப்படித்தான் தர்மசாஸ்திரம் சேர்த்துச் சொல்லும்.

நாமும் தினமும் காலையில் எழுந்ததும் நவகிரகங்களை வணங்கினால், எதிரிடையான பலன்கள் தலைதூக்காது. தேவைகள் இரட்டிப்பாக நம்மை வந்து அடையும்; மகிழ்ச்சி யான வாழ்வைச் சுவைக்கலாம்.