பிரீமியம் ஸ்டோரி

ந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு. இதில் பிறந்தவர்களைக் குறித்து, `மெத்தென நடையனாகும் வெகுளியஞ் சொல்ல வல்லன் முத்தொடு மணியும் பொன்னுமுறமையாய் அணிய வல்லன்’ என்கிறது நட்சத்திர மாலை.அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் மெல்லிய நடை உடையவர்கள்; வெகுளி; விலையுயர்ந்த ஆபரணங்களை அணிபவர் என்று பொருள்.

`உங்கள்மீது குற்றம் சுமத்துபவரை சகித்துக்கொள்ளாதவர்; வழக்குகளை நியாயமாகத் தீர்ப்பவர்; பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி உண்பவர்; பெண்களுக்காக வீண் செலவு செய்யாதவர்; கல்வி உடையவர்; மூக்கு சற்றே உயர்ந்தவர்’ என்கிறது ஜாதக அலங்காரம்.

யோகங்கள் நிறைந்த பூரட்டாதி!

யவன ஜாதகம், `நீங்கள் சற்றே விசனம் உடையவர்; பிறரைக் குறை கூறுபவர்; வாழ்வில் சௌகரியம் உடையவர்’ என்கிறது. பிருகத் ஜாதகம், `நீங்கள் கவலையும் பயமும் உள்ளவர்; தனவந்தர்; சாதுர்யமாகப் பேசிப் பொருள் திரட்டுபவர்’ என்கிறது.

`இந்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு, மனதில் எப்போதும் பெரிய சிந்தனைகள் பிறக்கும். தொலைநோக்குச் சிந்தனை அதிகம் உண்டு. நீங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள்; மற்றவர்களையும் நீங்கள் விமர்சிப்பீர்கள்; பிழைக்கத் தெரியாதவர்; அப்பாவி’ என்று சந்திரசேகர காவியம் என்ற நூல் விளம்புகிறது.

`பனி, புயல், வெயில், மழை ஆகியவற்றைப் பார்க்காமல் கடுந்தவம் புரியும் சித்தர்களைப் போல சுற்றுப்புறச் சூழ்நிலையால் நீங்கள் பாதிக்கப்படாதவர். தன் நிலை தவறாதவர். உணர்ச்சிகளை ஆறாம் அறிவால் அடக்கி, பதற்றமில்லாமல் பக்குவமாக வெளிப்படுத்தும் முதிர்ச்சி உங்களிடம் உண்டு. அனைத்தையும் அறிந்திருந்தும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். மாற்றார் கருத்துக்கும் மதிப்பளிப்பவர். நீங்கள் மற்றவர்களைப் பற்றி யோசிப்பவராகவும் அவர்கள் நலனில் அக்கறை கொள்பவராகவும் இருப்பீர்கள். முன்கோபி; இருந்தாலும் குணவான்’ என்று காக்கேயர் நாடி என்ற நூல் கூறுகிறது.

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நீங்கள் பண்டிதர் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. நீங்கள் உண்டு, உங்கள் வேலையுண்டு என்றிருப்பீர்கள்; சமூக ஆர்வலராக இருப்பீர்கள்; அனைத்துத் துறையையும் அறிந்து வைத்திருக்கும் வல்லமை பெற்றவர்; குடும்பத்தில் குறைவான ஈடுபாடுள்ளவர்; துறவறம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர் என்று சிற்றம்பல சேகரம் என்ற நூல் கூறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலத்துக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளாதவர். கொள்கை, கோட்பாடுகளிலிருந்து பிறழ மாட்டீர்கள். ஆறாவது அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் செய்வீர்கள். மற்றவர்களுடைய நிர்ப்பந்தத்துக்கு உடன்படாதவர். உங்கள் சொத்தை யாருக்கும் கொடுக்கமாட்டீர்கள். பிறருடைய சொத்துக்கும் ஆசைப்படமாட்டீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்ந்து கொண்டிருப்பவராக, சித்தர்களாக, மகான்களாக உங்களில் அநேகர் இருப்பீர்கள். கல்வியாளர், அறிவியல் அறிஞர், பேராசிரியர், ஆசிரியர் ஆகியோராகவும் இருப்பீர்கள். உங்களில் பலர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை நடத்துபவராக இருப்பீர்கள்.

27 வயது முதல் உங்களுக்கு யோக பலன்கள் அதிகரிக்கும். சிறு வயதிலேயே பல பெரிய அனுபவங் களையும் கசப்பு உணர்வுகளையும் சந்திப்பீர்கள். அதிகமாக யோசிப்பீர்கள்; யாருக்கும் தொந்தரவு தர மாட்டீர்கள்; சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவீர்கள்.

முதல் பாதம்

(குரு + சனி + செவ்வாய்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் பெரியவர், சிறியவர் யாரென்றாலும் மதிப்பு, மரியாதை தரக்கூடியவர்கள். பரந்த மனதும் இரக்க குணமும் எப்போதும் உண்டு. சண்டைக்கு வருவோரிடமும் சமாதானமாகப் பேசிச் சரிசெய்வார்கள். தாய், தந்தைக்கு உகந்த மகனாகவும் உடன்பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாகவும் விளங்குவார்கள். மனைவி, பிள்ளைகளை மதிப்பார்கள். எலெக்ட்ரிகல், மூலிகை, உணவகம், திரையரங்கு, உரத் தயாரிப்பு ஆகியவை தொடர்பாக வியாபாரம் செய்வார்கள். சிலர் அறக்கட்டளையின் மூலம் கல்விக் கூடங்கள் நடத்துபவர்களாகவும் இருப்பார்கள்.

காடு, மலை, அருவி போன்ற இயற்கை வளங்களைக் கண்டால், அன்ன ஆகாரமில்லாமல் அப்படியே அமர்ந்துவிடுவார்கள். சரியோ, தவறோ வெளிப்படையாக இவர்கள் பேசுவதை ஒரு சிலர் எதிர்த்தாலும் பலர் மதிப்பார்கள். போராட்டம் இல்லாத வாழ்வை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் கொண்டவர்கள். நம்பி வந்தவர்களுக்காக உயிரையும் தருவார்கள். யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டார்கள். அதேநேரம் ஏமாற்றுபவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். 25 வயதிலிருந்து அனுபவப் பாடத்தால் முன்னேறுவார்கள். 45 வயது முதல் பெரிய அந்தஸ்தைப் பெறுவார்கள்.

பரிகாரம் : திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வரரை வணங்குதல் நலம்.

இரண்டாம் பாதம்

(குரு + சனி + சுக்கிரன்)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் நாலும் தெரிந்தவர்கள். தயாள குணம் கொண்டவர்கள். பிரதிபலன் பாராமல் உதவுவார்கள். சுகபோக வாழ்க்கையில் நாட்டமுடையவர்கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்பவர்கள். எந்த முடிவையும் சுயமாக எடுக்காமல் பெரியோரின் ஆலோசனையை ஏற்று நடப்பவர்கள். ஏரோநாட்டிகல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிகல்- எலெக்ட்ரானிக்ஸ், கணினி போன்ற பாடப் பிரிவுகளில் சிறந்து விளங்குவார்கள். கல்யாண மண்டபம், திரையரங்கம், டிராவல்ஸ், டிடெக்டிவ் ஏஜன்ஸி, கேளிக்கை விடுதி போன்றவற்றை நடத்துவார்கள்.

யோகங்கள் நிறைந்த பூரட்டாதி!

கூட்டுக்குடும்பமாக வாழ ஆசைப்படுவார்கள். உறவினர் களைக் காட்டிலும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். இனிப்பு, கார உணவுகளை ரசித்து, ருசித்து உண்பார்கள். படிப்பில் கெட்டிக்காரர்கள். பொது அறிவு விஷயங்களையும் நன்கு தெரிந்துவைத்திருப்பார்கள்.

இவர்களில் பலரும் வங்கித் துறையில் பெரிய பதவிகள் வகிப்பார்கள். கட்டுமானப் பொருள், கிரானைட், மார்பிள்ஸ் போன்றவற்றை மொத்த வியாபாரம் செய்வார்கள். 28 வயது முதல் சாதித்துக்காட்டுவார்கள்.

பரிகாரம் : ஆனைமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீமாசானி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்வு சிறக்கும்.

மூன்றாம் பாதம்

(குரு + சனி + புதன்)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் பேச்சுத் திறமை உள்ளவர்கள். அனைவராலும் மதிக்கப்படுவார்கள். வாழ்க்கைப் போராட்டங்களைக் கடந்து வெற்றி பெறுவார்கள். சொல்லும் விஷயம் நன்மையாக இருந்தால், அப்படியே எடுத்துக்கொள்வார்கள். ஒருவேளை சொல்லப்படுவது கெட்டதாக இருந்தால், சொன்னவரைக் குறைகூறாமல் சொல்லப்பட்டதை ஒதுக்கிவிடும் அருமையான குணம் இவர்களிடம் உண்டு.

குடும்பமே உலகம் என்று வாழும் இவர்கள், பெற்றோர் மீது அதிகப் பாசமும் நேசமும் கொண்டு விளங்குவார்கள்.உறவினர், நண்பர்களைக் காட்டிலும் தான் ஒரு படி உயர்ந்திருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள்.

கல்வியில் ஆர்வமுடைய இவர்களுக்கு உடல் நலக் குறைவால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாமல் போகும். இருந்தாலும் கடின உழைப்பால் பட்டம் பெறுவார்கள். சமூகத்தைத் திருத்தவேண்டும், தாங்கள் சாதாரண மக்களுக்கும் பயன்படவேண்டுமென்று நினைப்பார்கள். செல்வத்துக்குக் குறைவிருக்காது. பலர் அரசாங்க அதிகாரப் பதவியில் இருப்பார்கள்.

தலைமைச் செயலகம், காவல் துறை, ரிசர்வ் வங்கி போன்றவற்றில் வேலை செய்வார்கள். வாழ்க்கைத் துணைவருக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல நண்பராக இருப்பார்கள். 25 வயது முதல் ஓரளவு வெற்றியும் 32 வயது முதல் எதிர்பாராத வளர்ச்சியும் அமையும்.

பரிகாரம் : கோவைக்கு அருகிலுள்ள பேரூரில் அருள் புரியும் ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்; எதிர்காலம் நலமாகும்.

நான்காம் பாதம்

(குரு + குரு + சந்திரன்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள், அனைவரும் புகழும் அளவுக்கு குணவான்களாகவும் இரக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள், இறுதி வரை நெஞ்சுறுதியுடன் சொன்ன சொல்லை நிறைவேற்றுவார்கள். பரபரப்பானவர்கள். கல்வியிலும் கெட்டிக்காரர்கள். பெற்றோரையும் உடன்பிறந்தோரையும் உயிரெனக் கருதுபவர்கள்.நட்புக்கு இலக்கணம் வகுப்பவர்கள். இளமையில் கஷ்டப்பட்டபோது உடன் இருந்தவர்களை, வசதி வாய்ப்புகள் வந்த பிறகும் மறவாமல் இருப்பவர்கள்.

பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் மறவாதவர்கள். கலை நயம் மிக்க பொருள்களை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கிவிடுவார்கள். பாலால் ஆன இனிப்பு வகைகள் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை.

இவர்களுடைய அன்பான பேச்சும் ஆக்கபூர்வமான செயலும் அனைவரையும் வியக்க வைக்கும். அதிகாரத்துக்கு அடிபணியாதவர்கள்; அன்புக்கு அடிபணிவார்கள். சில விஷயங்களில் வெளி வேஷம் போடத் தெரியாமல் தோற்பார்கள்.

வாழ்க்கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளை அன்பாக நடத்துவார்கள். அவர்களின் கருத்துக்குச் செவிமடுத்தும் அவர்களிடம் ஆலோசனை செய்தும் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாத விஷயத்தை, தமது தன்னம்பிக்கையால் இவர்கள் சாதித்துக்காட்டுவார்கள்.

இவர்களில் பலரும் அகழ்வாராய்ச்சி யாளராகவும், வானியல் ஆராய்ச்சியாளராகவும், வேதியியல் விஞ்ஞானியாகவும் திகழ்வார்கள். இன்னும் சிலர் கணினித் துறை, மருத்துவம் ஆகிய துறைகளில் மிளிர்வார்கள். 29 வயது முதல் இவர்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரும். சமூக அந்தஸ்தைப் பெறுவார்கள்.

பரிகாரம் : பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கி வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் சகல கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் பெருகும்.

பூரட்டாதி!

நட்சத்திர தேவதை : அஜைகபாதன். 11 ருத்ரர்களில் ஒருவர்.

வடிவம் : சதுர வடிவில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுப்பு.

எழுத்துகள் : ஸே, ஸோ, தா, தீ.

ஆளும் உறுப்புகள் : 1, 2, 3-ம் பாதங்கள் - கணுக்கால்கள். 4-ம் பாதம் - கால், முன்னங்கால்.

பார்வை : கீழ்நோக்கு.

பாகை : 320.00 - 333.20

நிறம் : கருமை.

இருப்பிடம் : பட்டினம்.

கணம் : மனுஷ கணம்.

குணம் : உக்கிரம்.

பறவை : உள்ளான்.

மிருகம் : ஆண் சிங்கம்.

மரம் : பாலுள்ள மாமரம்.

மலர் : எருக்கம் பூ.

நாடி : தட்சிண பார்சுவ நாடி.

ஆகுதி : பூசணித் துண்டு.

பஞ்சபூதம் : ஆகாயம்.

நைவேத்யம்: தயிர், நெய் சாதம்.

தெய்வம் : ஸ்ரீ லக்ஷ்மி குபேரன்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் யக்ஷ£ய குபேராய

வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே |

தனதான்ய ஸம்ருத்திம் மே தேஹிதாபய ஸ்வாஹா |

அதிர்ஷ்ட எண்கள் : 2, 3, 7.

அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, கிரீம்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வியாழன், சனி.

அதிர்ஷ்ட ரத்தினம் : மார்கா (மஞ்சள்).

அதிர்ஷ்ட உலோகம் : வெண்கலம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

குபேரன், கின்னரன், ராமகிருஷ்ண பரமஹம்சர்,நாராயண குரு, மறைமலையடிகள், காமராசர், கலிலியோ.

பூரட்டாதி நட்சத்திரத்தில்...

ந்திரம் ஜபித்தல், மந்திரோபதேசம் பெறுதல், விக்கிரகப் பிரதிஷ்டை, வாகனம் வாங்குதல், கடன் பைசல் செய்தல், நோயுற்றோர் குளித்தல், கிணறு வெட்டுதல், மரக் கன்று நடுதல், செங்கல் சூளை பிரித்தல் ஆகியவற்றைச் செய்தால் நன்மையும் வெற்றியும் கிடைக்கும்.

பரிகார ஹோம மந்திரம்

அஜ ஏகபாதுததாத் புரஸ்தாத்

விச்வா பூதானி ப்ரதிமோதமான:

தஸ்ய தேவா: ப்ரஸவம் யந்தி ஸர்வே

ப்ரோஷ்ட்ட பதாஸோ அம்ருதஸ்ய கோபா:

விப்ப்ராஜமான: ஸமிதாந உக்ர:

ஆஅந்தரிக்ஷ மருஹதகந்த்யாம்

தஹும் ஸுர்யந் தேவ-மஜமேகபாதம்

ப்ரோஷ்ட்ட பதாஸோ அனுயந்தி ஸர்வே

ஸ்ரீராகு கவசம்!

ஜாதகத்தில் ராகு நீசனாகவோ, புத்திர ஸ்தானம் முதலானவற்றில் தோஷம் உள்ளவராகவோ, கோசார ரீதியாக 4, 9 ஆகிய இடங்களில், கெடு பலன்களுக்குக் காரணமாகும் நிலையிலோ இருந்தால்... அத்தகைய கெடு பலன்களும் தோஷங்களும் வலு குறைந்து, ராகுவின் அருளைப் பெற, இந்த ஸ்தோத்திரம் உதவும். அதன் தியானப் பகுதி இங்கே உங்களுக்காக...

ப்ரணமாமி ஸதா ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம்

ஸைம்ஹிகேயம் கராளாஸ்யாம் பக்தானாமபய ப்ரதம்

ராஹும் சதுர்புஜம் சர்மஸூலகட்கவராங்கிதம்

க்ருஷ்ணமால்யாம்பரதரம் க்ருஷ்ணகந்தானுலேபனம்

கோமேதகவிபூஷம் ச விசித்ர மகுடாந்விதம்

க்ருஷ்ணஸிம்ஹரதம் மேரும் யாந்தம் சைவாஸ ப்ரதக்ஷிணம்

கருத்து: ஸ்ரீகிரீடத்தைத் தரிப்பவரும், சர்ப்பத்தின் ஆக்ருதியைக் கொண்டவரும், ஸிம்ஹிகையின் புத்திரரும், பயங்கரமான முகத்தைக் கொண்டவரும், பக்தர்களுக்குப் பயமின்மையை அளிப்பவரும், கேடயம், சூலம், கத்தி, வரம் ஆகியவற்றைக் கொண்ட நான்கு கரங்களுடன் திகழ்பவரும், கறுப்பு வண்ண மாலைகள், வஸ்திரம் ஆகியவற்றைத் தரித்திருப்பவரும், சந்தனம் பூசியவரும், கோமேதகத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், ஆச்சர்யமான மகுடத்தோடு கூடியவரும், கறுமையான சிம்ம ரதத்தைக் கொண்டவரும், மேரு மலையை இடமாகச் சுற்றி வருபவருமான ஸ்ரீராகுவை வணங்குகிறேன்.

- குமார், சென்னை-4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு