Published:Updated:

வியாபார விருத்திக்கு புதன் அருள் வேண்டும்!

- ஜோதிடஸ்ரீ முருகப்ரியன்

பிரீமியம் ஸ்டோரி

ஜாதகத்தில் வியாபார காரகனான புதன் இருக்கும் இடத்துக்கு, தேவகுருவும் தனகாரகனுமான வியாழனின் பார்வை பரிபூரணமாக இருந்தால், வியாபாரம் செழித் தோங்கும்; தொழிலில் எதிர்பாராத வரவுகளால் எதிர்காலம் சிறக்கும்.

ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருக்கும் அன்பர், வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவார்.

ராசியில் புதன் இருக்கும் வீடு கன்னியாகி, நவாம்சத்திலும் கன்னியா ராசியில் புதன் இருப்பார் எனில், அவர் வர்க்கோத்தமம் பெறுவார். இதனாலும், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் ஈடுபட்டு பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும். இந்த புதன் ராசியில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கதம் ஆகாமல் இருக்கவேண்டும் என்பது விதி.

தனம் மற்றும் லாபாதிபதிகள் 1, 4, 7, 10 அல்லது 5, 9 ஆகிய இடங்களில் உச்சமாகவோ, ஆட்சி யாகவோ வலுத்திருக்க, புதன் பலமும் கூடியிருக்குமானால், குறிப்பிட்ட அமைப்புள்ள ஜாதகருக்கு வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் கிடைக்கும்.

புதன் பகவான்
புதன் பகவான்

அஷ்ட வர்க்கப்படி புதாஷ்டக வர்க்கத்தில், புதன் இருக்கும் இடத்தில் அதிக பரல்கள் இருக்கும் என்றால், புதன் வலுத்திருக்கிறார் எனச் சொல்லலாம். இப்படி, அதிக பரல்கள் பெற்றிருக்கும் புதன், குறிப்பிட்ட ஜாதகருக்கு வியாபார ரீதியாக அதிக லாபத்தைத் தருவார்.

புதனுக்கு மிதுனமும் கன்னியும் பலம் மிகுந்த வீடுகளாகும். இந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் புதன் இருக்க, புதனுக்குச் சுபக்கிரகச் சேர்க்கையோ பார்வையோ ஏற்படும்போது, ஜாதகருக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியவரும். அதன்மூலம் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பார்.

தொழில் ஸ்தானம் என்பது 10-ஆம் இடம் ஆகும். லக்னத்துக்கோ, சந்திர ராசிக்கோ, சூரிய ராசிக்கோ 10-ல் புதன் இருந்தால், மனத்தில் வியாபார சிந்தனை உருவாகும். 10-ல் புதன் வலுப்பெற்றிருந்தால், வியாபாரம் பிடித்த தொழிலாக அமையும். அதன் மூலம் அதிக லாபமும் பெறமுடியும்.

இப்படியான கணிப்பில் லக்னத்துக்கே முதலிடம் தரப்பட வேண்டும். அடுத்து சந்திர ராசி. அதன் பிறகு சூரிய ராசி. லக்னம் வலுத்திருந்தால் லக்னப்படி பார்ப்பதே சிறப்பாகும். சில ஜாதகத்தில் லக்னத்தைவிட சந்திர லக்னம் அதிக பலம் பெற்றிருக்கும். அப்போது சந்திர லக்னத்தை வைத்துப் பார்க்கவேண்டும்.

தராசு என்ற துலா லக்னத்தில் பிறந்து, பாக்கியாதிபதி புதன் லக்னத்திலோ, 9 அல்லது 10-ல் பலம் பெற்றிருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுவார். தான் பெற்ற லாபத்தை அறப்பணிகளுக்காகவும் செலவிடுவார். காரணம், இங்கு பாக்கியாதிபதியே விரயாதிபதியாகவும் ஆகிறார்.

தனுசு லக்னத்தில் பிறந்து, தொழில் ஸ்தானாதிபதியான புதன் 10-ல் வலுத்திருந்து, லக்னாதிபதி குருவின் பார்வையைப் பெற்றால், வியாபாரத் தில் பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர் களுக்கு லக்னாதி பதியான புதன் பகவானே தொழில் ஸ்தானாதிபதியும் ஆவார். அவர் அஸ்தங்கதம், நீச நிலை, பாபக் கிரகச் சேர்க்கை பெறாமல், கன்னி அல்லது மிதுனத்தில் இருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் திறம்பட ஈடுபட்டு அதிக லாபம் பெறுவார்.

2 அல்லது 11-ம் வீட்டு அதிபதியுடன் புதன் கூடி, தனகாரகனான குரு பகவான் வலுத்து, புதனைப் பார்க்கும் நிலை அமையுமானால், ஜாதகர் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்.

புதன் 5-ல் பலம் பெற்றிருக்க, குருவின் தொடர்பும் 10-ம் வீட்டோனின் தொடர்பும் ஏற்படுமானால், அந்த ஜாதகர் பரம்பரை யாகச் செய்து வரும் வியாபாரத்தில் ஈடுபட்டு, பன்மடங்கு லாபம் பெறுவார்.

குறிப்பாக வியாபார காரகனான புதனுக்குச் சுப ஆதிபத்தியம் ஏற்பட்டு, சுபக் கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்று, தொழில் ஸ்தானத்தோடும் (10-ம் வீடு), தொழில் ஸ்தானாதிபதியோடும் (10-ம் வீட்டோன்) தொடர்பு கொண்டு, பலம் பெற்றிருந்தால், வியாபாரத்தில் ஈடுபட்டு, பன்மடங்கு லாபம் பெற இயற்கையாகவே வாய்ப்பு உண்டாகும்.

புதன் பலம் இல்லாதவர்கள் வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அப்படி ஈடுபட்டால் நஷ்டம் அடைய நேரிடும். புதன் பலம் உள்ளவர்கள் புதனுக்கு அதிதேவதையான திருமாலை புதன்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் வியாபாரத்தில் அதிவேகமாக முன்னேறலாம். அதிக லாபமும் பெறலாம்.

எப்போது தொழில் தொடங்கலாம்?

கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் தொழில் தொடங்குவது விசேஷமாகும்.

மிர்த யோகம் உள்ள நாள் விசேஷம். அடுத்தபடியாக சித்தயோகம். மரணயோகமும், பிரபாலாரிஷ்ட யோகமும் நிச்சயம் விலக்கப்பட வேண்டும்.


தொழில் தொடங்கும் நாள் சுப முகூர்த்த நாளாக அமைவது சிறப்பு. தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் பலமாக உள்ள லக்னத்தைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட லக்னம் அமையும் பஞ்சக சுத்தம் உள்ள (திதி, வார, நட்சத்திரம், லக்னம், துருவம்) நேரத்தில் தொழில் ஆரம்பிப்பது நல்லது.

பணம் பெருக வாஸ்து வழிகாட்டல்
பணம் பெருக வாஸ்து வழிகாட்டல்

பணம் பெருக வாஸ்து சொல்லும் வழிகாட்டல்கள்...

வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் இருக்க வேண்டும்.

தென்மேற்கு திசையில் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது. பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும்.

பீரோவைத் திறக்கும்போது, நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் ‘தேக்கு மரம்’ என்று பெயர் வந்தது.

உங்களுக்கு வருகிற பணத்தைச் சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.

பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு