Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி 2020: எந்த ராசிக்கு என்ன பலன்? தனுசு முதல் மீனம் வரை!

ராகு - கேது பெயர்ச்சி செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிவிட்டனர். இதனால் தனுசு முதல் மீனம்வரையிலான நான்கு ராசிகளுக்கு என்ன பலன்கள் வாய்க்கும் என்று ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயனிடம் கேட்டோம்.

தனுசு

ஓர் இலக்கைக் குறிவைத்தால் அதை அடையாமல் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் தனுசுராசி நேயர்களே... கடந்த காலத்தில் அடுத்தவர்கள் வாழ்க்கைக்கு நிறைய உதவிவிட்டு தற்போது உங்களுக்கான நல்லது எப்போது நடைபெறும் என்று காத்திருக்கிறீர்கள். அதற்கான நேரத்தை இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு வழங்குகிறது. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் இந்த ஒன்றரை வருடங்களில் போராடி வெற்றிபெறுவீர்கள். உங்கள் கடன்கள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

தனுசு
தனுசு

நிறைய இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். செல்போன், டீவி போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் சேரும் நேரம் இது. பங்குச் சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். புதிய தொழிலில் அதுவும் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவதற்கு உகந்த காலகட்டம் இது. போனமாதம்வரை இருந்த உடல் உபாதைகள் முற்றிலும் இல்லாமல் போகும். மருத்துவச் செலவுகள் குறைந்து டிசம்பர் 5 ம் தேதிக்குப் பின் இல்லாமலே போகும். ஆன்மிகச் சேவையில் மனம் செல்லும். விநாயகப் பெருமானின் அபிஷேகத்துக்குப் பசும்பாலும் தேனும் வாங்கி சமர்ப்பியுங்கள். தனுசு ராசி குருபகவானுக்குரியது என்பதால் பசும்பால் மிகவும் விசேஷம். பசுமாட்டுக்கு உணவுகள் தந்து வணங்குவதன் மூலம் இதுவரையிருந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும். ஏற்றமான வாழ்வு கிடைக்கும்.

மகரம்

எதிலும் எப்போதும் விழிப்போடு இருந்து ஆதாயங்களைத் தேடும் மகரராசி நேயர்களே, இந்த ராகு - கேது பெயர்ச்சி, தை மாதம் 2021 க்கு மேல் இடமாற்றத்தைத் தரும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. தொழில்களில் மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தை விட்டுத் தொலைதூரம் சென்று பணிபுரியும் வாய்ப்பும் ஏற்படலாம். குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. ஓர் அளவுக்கு மேல் அவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தாய்மாமன் மூலம் நல்ல விஷயங்கள், லாபங்கள் வந்து சேரும்.

மகரம்
மகரம்

புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் பாக்கியமும் புனித நீராடும் வாய்ப்பும் தை மாதம் 2021க்கு மேல் ஏற்படும். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவீர்கள் தொழில் மற்றும் வேலை சம்பந்தமாக நிறைய அலைச்சலை மேற்கொள்வீர்கள். அதனைக் குறைத்துக்கொண்டு குடும்பத்தோடு இறைவழிபாட்டில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். தேவையற்ற விவாதங்களில் கலந்துகொண்டு உங்கள் கருத்தை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டிய காலமிது. மனதில் இருக்கும் கஷ்டங்களை வார்த்தையில் காட்ட வேண்டாம். வரும் டிசம்பர் மாதம் நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி மிகவும் பிரமாதமான பலன்களைத் தர இருப்பதால் வீண் செலவுகள் அனைத்தும் நீங்கும். வர வேண்டிய பணவரவும் வாய்க்கும். விநாயகப்பெருமானை வணங்குங்கள். தை மாதத்துக்குப் பின் தொழிலில் மேன்மை உண்டாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கும்பம்

சகோதர உறவுகளிடையே தேவையற்ற சச்சரவுகளை அனுபவித்துவந்த கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு - கேது பெயர்ச்சி சமாதானத்தைக் கொண்டுவரும். சகோதரர்களுக்குள் சண்டைகள் நீங்கி அமைதி பிறக்கும். தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புகளைச் சிறிதாக இருக்கும்போதே செய்துவிடுங்கள். இல்லை என்றால் அதுவே பெரிய தேய்மானமாக மாறிவிடும்.

கும்பம்
கும்பம்

மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு முதலியவற்றை உரிய காலத்தில் புதுப்பிப்பது அவசியம். மாசி மாதம் சிவராத்திரிவரை நிதானமாகச் செயல்படுங்கள். அதன்பின் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தை 2021க்கு மேலாக திருமணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்குத் திருமணமாகும். திருமணச் செலவுகளை நீங்களே ஏற்க வேண்டியிருக்கும். விநாயகப்பெருமான் சிவபெருமானுக்கு பூஜை செய்வது போன்ற படங்களை விக்ரகங்களை வணங்குவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும். விநாயகருக்கு வில்வ அர்ச்சனை மற்றும் திருநீற்று அபிஷேகம் ஆகியன செய்து வழிபட துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாகும்.

மீனம்

எல்லோருக்கும் நல்லதையே செய்துவிட்டு அதன்மூலம் கெட்டபெயரை சம்பாதித்துக்கொள்ளும் மீனராசி அன்பர்களே, பொதுவாகவே மீனராசியில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் யாருக்கும் எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காது. காரணம் சுக்கிரன் உச்சமடையக்கூடிய குருபகவான் பலம் பெறக்கூடிய ராசி,மீன ராசி. தாய்வழி உறவுகளுக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும் காலகட்டம் இது. குழந்தைகள் மூலம் நல்ல இனிமையான அனுபவங்கள் ஏற்படும். அவர்களால் பெருமை உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் கூடிவரும்.

மீனம்
மீனம்

அசையும் அசையா சொத்துகளும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு - கேது பெயர்ச்சியின் மூலம் கிடைக்கும். வரவேண்டிய சீட்டுப் பணம், நகைச் சீட்டு ஆகியவை ஆதாயமாகக் கிடைக்கும். செப்டம்பர் 10 ம் தேதிக்கு மேல் மிக நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். பொருள்சேர்க்கைக்குக் குறைவிருக்காது. திருமண முயற்சிகள் கூடிவரும். மனவலிமை அதிகரிக்கும். நேர்மறையான எண்ணங்களால் நல்ல பலன்கள் அதிகரிக்கும். கேது உச்சமடைவதும் ராகு நீசமடைவதும் சகோதர உறவுகளில் இருந்த பிரச்னைகளைத் தீர்த்துவிடும். ஆனாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் தொடர்பான திட்டங்களை முன்கூட்டியே யாரிடமும் சொல்ல வேண்டாம். விநாயகப் பெருமானை வழிபடுங்கள். ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையாருக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். ஏற்றமும் முன்னேற்றமும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு