Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.2022 முதல் 8.10.2023 வரை

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

21.3.2022 முதல் 8.10.2023 வரை

Published:Updated:
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம் - 54%: பரந்து விரிந்த பொது அறிவு கொண்டவர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்து காரியத்தடைகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வருவதால் தடுமாறிக்கொண்டிருந்த செயல்கள் இனி முழுமை அடையும். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து போகும். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காகச் சிலவற்றை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் அதிக முதலீடுகளைத் தவிர்த்து, இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் தடைப் பட்ட உரிமைகளும் சலுகைகளும் உடனே கிடைக்கும். உங்களின் திறமைகளும் வெளிப்படும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, புதிய பாதைக்கு உங்களை அழைத்துச் செல்வதாக அமையும்.

ரிஷபம் - 91%: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தவர்களே... இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பிரச்னைகளில் சிக்கவைத்த ராகு பகவான், இப்போது ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டுக்குள் வந்து அமர்வதால் இழுபறியாக இருந்த பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையே சண்டையையும் உடல்நலக்குறைவையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் கூடும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சொந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட முயற்சியால் பணிகளை முடிப்பீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

மிதுனம் - 78%: மனித நேயத்தின் மறு உருவமாய் விளங்குபவர்களே... இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்காகப் பல பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். கணவர் உங்களை ஆதரித்துப் பேசுவார். திடீர் பணவரவும் உண்டு. இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வருகிறார். பிள்ளைகளால் சிறு சிறு அலைச்சலும் செலவும் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சேமித்துவைத்த பணத்தில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உள் மனத்தில் இருந்த ஒருவித தயக்கமும் தடுமாற்றமும் நீங்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களைப் பரபரப்பாக்குவதுடன் பண வரவையும் தருவதாக அமையும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடகம் - 63%: எதையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களே... இதுவரை உங்களின் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி, ஷேர் வகையில் லாபம் எனத் தந்த ராகு பகவான், இனி உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்து அமர்வதால் குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்கும் அளவுக்குப் பணவரவு உண்டு. இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, சொந்தங்களிடையே கருத்து மோதல் எனப் பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்து அமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. பழைய சரக்குகளை அதிரடி சலுகைகளால் விற்பனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். இந்த ராகு - கேது பெயர்ச்சி, இடையூறுகளுடன் ஏற்றத்தையும் வசதியையும் வழங்குவதாக அமையும்.

சிம்மம் 93%: மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே... இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை எந்த வேலையையும் முழுமையாகப் பார்க்கவிடாமல் தடுத்த ராகு பகவான், இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்து அமர்கிறார். முடியாது என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். பதுங்கியிருந்த நீங்கள், இனி வெளிச்சத்துக்கு வருவீர்கள். கணவன் மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதங்களிலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான், இப்போது மூன்றாவது வீட்டிலே அமர்கிறார். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம்காட்டுவார்கள். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். மாமியார் நாத்தனாருடன் மனத்தாங்கல் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் புது யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் வளைந்துகொடுத்துப் போவார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் வெகுநாள் கனவான பதவி உயர்வு இனி உண்டு. வேலைச்சுமை குறையும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களை சுகபோக வாழ்வுக்கு அழைத்துச் செல்வதுடன் எதிலும் எளிதாக வெற்றி பெறவும் வைக்கும்.

கன்னி - 65%: கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுப்பவர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்துகொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான், இப்போது எட்டில் சென்று மறைகிறார். தடைப்பட்ட காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றிபெறுவார்கள். கணவருடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உடல்நலம் சீராகும். சொத்தில் இருந்த சிக்கல் தீரும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன் பதவியும் உயரும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, வெற்றியுடன் சிறு சிறு ஏமாற்றங்களையும் தருவதாக அமையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துலாம் - 53%: பத்து விரல்களையே மூலதனமாக நினைப்பவர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து, காரியத்தடைகளையும் மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப்போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் குறையும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு என்றாலும், களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் கணவருடன் சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து விலகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். திடீர்ப் பயணங்களுக்குக் குறைவிருக்காது. இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் நின்று கொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் இனி சமயோஜித புத்தியுடன் பேச வைப்பார். புண்ணியத்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்புக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, சற்றே கவனத்துடனும் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட்டால் முன்னேற்றம் அளிப்பதாக அமையும்.

விருச்சிகம் - 87%: சமூக அவலங்களைத் தட்டிக்கேட்க தயங்காதவர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப்போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள். சந்தேகத்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். கணவரின் ஆரோக்கியம் கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கடன் பிரச்னைகளில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத்தடைகள் தந்த கேது பகவான், இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பால்ய தோழிகளுடன் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். இந்த ராகு - கேது பெயர்ச்சி, இதுவரை ஏற்பட்ட தடைகள் விலகி முன்னேற்றங்களைத் தருவதாகவே அமையும்.

தனுசு - 75%: தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு பகவான் ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள் தந்தவர், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், முன்கோபம் குறையும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு விலகும். இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளையும் அலைச்சலையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்து அமர்கிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வீடு கட்டும் பணியை முழுமையாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாகக் கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக்கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், மன நிம்மதியையும் வசதியையும் அதிகரிக்கும்.

மகரம் - 61%: தன் பலம் பலவீனம் அறிந்து உங்களைத் தயார்படுத்திக்கொள்பவர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து பாடாய்ப்படுத்திய ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்து அமர்வதால் இனி மன நிம்மதியைத் தருவார். தாம்பத்யம் இனிக்கும். உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியவர்களை ஒதுக்கித்தள்ளுவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். நாத்தனார் உங்களின் தியாகத்தைப் புரிந்துகொள்வார். இதுவரை உங்களின் ராசிக்குப் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களைத் தந்த கேது பகவான், இப்போது பத்தாவது வீட்டில் வந்து அமர்வதால் தொட்ட காரியத்தை விரைந்து முடிக்க வைப்பார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களின் அறிவை வளர்க்க புதிய முயற்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சக ஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். இந்த ராகு - கேது பெயர்ச்சி, கவலைகளை விரட்டியடிப்பதுடன் மகிழ்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

கும்பம் - 92%: உள்ளத்தில் அழுதாலும், உதட்டால் சிரிப்பவர்களே... இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துகொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடிய ராகு பகவான், இப்போது ராசிக்கு மூன்றாம் வீட்டுக்கு வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். குடும்பத்தினர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த பிரச்னைகள் விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது பகவான், இப்போது ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் வந்து அமர்கிறார். குடும்பத்தில் நிலவிவந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தோழிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்தவர்கள் இனி மதிப்பார்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். இந்த ராகு - கேது பெயர்ச்சி, ஒதுங்கியிருந்த உங்களை வாழ்வின் உயரத்துக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

மீனம் - 66%: அருகிலிருப்பவர்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் கொடுத்து வந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொருபக்கம் அதற்குத் தகுந்தாற்போல கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தோழிகள், உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளைத் தந்த கேது பகவான், இப்போது எட்டில் அமர்வதால் வெளி வட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். ஆனால், எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாட்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மோதல் போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக் கண்டு புதிய பதவி தருவார். இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களுக்கு அனுபவ அறிவையும் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism