Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

நம்பி வந்தவர்களைக் கைவிடாது நேசக்கரம் நீட்டுபவர் நீங்கள். கடலளவு அன்பு கொண்டவரான நீங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துடிப்புடன் செயல்படக் கூடியவர்கள்.

பிரீமியம் ஸ்டோரி
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

துலாம்

நம்பி வந்தவர்களைக் கைவிடாது நேசக்கரம் நீட்டுபவர் நீங்கள். கடலளவு அன்பு கொண்டவரான நீங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துடிப்புடன் செயல்படக் கூடியவர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 9- ம் வீட்டில் அமர்ந்து சேமிப்புகளைக் கரைத்ததுடன், உங்களுக்கும் தந்தையாருக்கும் ஓர் இடைவெளியை ஏற்படுத்திய ராகு பகவான், இப்போது 8-ம் வீட்டில் சென்று மறைகிறார். சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். பாகப் பிரிவினைப் பிரச்னை சுமூகமாக முடியும்.

8-ல் ராகு அமர்வதால் பயணங்கள் அதிகமாகும். இடமாற்றமும் இருக்கும். அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். குடும்பத்தில், கணவன் - மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். வாகனத்துக்கான ஆவணங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் இருக்கும்.

திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்து போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரை சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர வேண்டாம்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். புது வேலை கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் தன, சப்தமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பணத் தட்டுப்பாடு, எதிலும் பிடிப்பற்ற போக்கு, சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்து செல்லும்.

வாழ்க்கைத் துணைவருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோதர வகையில் மன வருத்தம் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை, ஜீவனாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

13.09.2021 முதல் 21.03.2022 வரை ராகுபகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், அரசால் நெருக்கடிகள், முன்கோபம், வீண் டென்ஷன் வந்து செல்லும். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்பச் செயல்படுங்கள். பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாள்களின் குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டி அன்பாகத் திருத்துங்கள்.

தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாகப் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். ரியல் எஸ்டேட், ரசாயனம், இரும்பு, எலெக்ட்ரிக்கல்ஸ், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்து கொண்டு உதவுவார்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. சம்பள பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்கும் துணிச்சலையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைகிறார்.

இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப் பாருங்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூடச் சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்திலும் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்தப்பாருங்கள். பல் வலி, காது வலி வந்து போகும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். போலி புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். தொலைந்து போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வருமானம் உயரும். பாகப் பிரிவினை சாதகமாக முடியும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சொந்த பந்தங்கள் உங்கள் வளர்ச்சி யைக் கண்டு வலிய வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். புதிதாக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... அதற்கு நல்ல பதில் வரும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் சுக, பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத் தில் கேது செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும்.

17.01.2022 முதல் 21.03.2022 வரை கேதுபகவான் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்கிறார்.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம்.

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள்.

வேலையாள்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி - வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். சில சலுகைத் திட்டங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் மத்தியில் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி செலவுகளையும் திடீர் பயணங்களையும் தருவதுடன், அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டுப் பேச வைப்பதாக அமையும்!

பரிகாரம்: திருப்பதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்குச் சென்று, ஸ்ரீகாளத்திநாதரையும், ஸ்ரீஞானப்பூங்கோதை அம்பாளையும் வழிபட்டு வாருங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம்

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சமமான மரியாதையைத் தரக்கூடிய நீங்கள், இனிய பேச்சுக்குச் சொந்தக்காரர். ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படுவீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் வல்லவர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களைப் பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட ராகு பகவான் இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் வந்து அமர்வதால், பலம்- பலவீனத்தை உணருவீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாகப் பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைப் பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும்.

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன் - மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணைவருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சை, தைராய்டு பிரச்னை வந்து போகும். பூர்விகச் சொத்துக்கான வரியைச் செலுத்திச் சரியாகப் பராமரியுங்கள். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள்.

தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்துவிட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மறதியால் விலை உயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை, உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வ தால் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் தொடங் குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வழக்கு சாதகமாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை பாக்கியாதி பதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும்.

மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மோதல் விலகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

13.09.2021 முதல் 21.03.2022 வரை ராகுபகவான் உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் சவாலான காரியங் களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.

அரைகுறையாக நின்ற கட்டட வேலைகளைத் துரிதப்படுத்துவீர்கள். சிலர் புது வீட்டிற்குக் குடிபுகு வீர்கள். சங்கம், இயக்கம் ஆகியவற்றில் கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கைக்கு வரும். சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டி வரும். லாபம் மந்தமாக இருக்கும். புள்ளி விவரங்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாள்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம்.

அயல்நாட்டில் இருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி புதுத் தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

கூட்டுத் தொழிலை முடிந்தவரைத் தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களைப் பதிவு செய்வது நல்லது.

கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். வெகுளித் தனமாகப் பேசி விமர்சனத்திற்கு ஆளாகாதீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத் திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். அதன் மூலம் சில பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைகூட போராடிப் பெற வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் நின்று கொண்டு, பேச்சில் வாக்கில் பிரச்னைகளை ஏற்படுத்திய கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் இதமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.

மற்றவர்களின் மனத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேது ராசிக்குள் அமர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, முடி உதிர்தல், காய்ச்சல், கெட்ட கனவுகள் ஆகியவை வந்து செல்லும்.

ரத்த அழுத்தம் அதிகமாகும். இரும்புச் சத்து குறைவு, ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கியாரண்டி கையெழுத்திட வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் அஷ்டமாதிபதியும் லாபாதி பதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் கை, கால் அசதி, சோர்வு, தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து நீங்கும்.

மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று செய்வது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கியாரண்டி கையெழுத்து போட வேண்டாம். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் சேவகாதிபதியும், சுகாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்துப் பார்த்துத் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஒரு சொத்தை விற்றுச் சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். இளைய சகோதர வகையில் விவாதங்கள் வந்தாலும் பாசம் குறையாது. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவருக்கு மூச்சுத் திணறல், மூட்டு வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் தன பூர்வ புண்ணியாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்கிறார். ஆகவே, புதிய முயற்சிகள் பலிதமாகும். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். சொந்த பந்தங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். சின்னச் சின்ன நஷ்டங்கள், ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். வாடிக்கை யாளர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள். வேலையாள்கள் குறித்து மனத் தாங்கல் இருக்கும். உத்தி யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது மாற்றம் குடும்பத்தில் சலசலப்பையும், ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும் உங்களை ஆன்மிக பலத்தால் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்:

பாதாளத்திலிருந்து தோன்றி ஆதிசேஷன் வழிபட்ட தலம் பாமணி. மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத் தலத்தில், சுயம்பு லிங்கமாக அருளும் ஸ்ரீநாகநாதரையும் ஸ்ரீஅமிர்தநாயகியையும் தரிசியுங்கள். தாயை இழந்தவர்களுக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனுசு

நெருக்கடிகள் வந்தாலும் நேர்வழியில் செல்லும் நீங்கள் பணம், பட்டம், பதவிக்கெல்லாம் பணியமாட்டீர்கள். மற்றவர்கள் ஏளனமாகப் பேசினாலும், எரிச்சல் அடையாமல் யதார்த்தமாக இருப்பீர்கள். மனசாட்சி அதிகமுள்ள நீங்கள், பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் முழுமையாக நேசிப்பவர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 7- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே... திறமை இருந்தும் வெளி உலகில் ஓர் அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கினாரே... தாழ்வு மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே... இப்படி உங்களைப் பாடாய்ப்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

உங்களை எதிரியைப்போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்கியம் சீராகும். அவர் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும்.

ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கங் களிலிருந்து மீள்வீர்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களால் சமூக அந்தஸ்து உயரும்.

உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை அஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், சில நேரங்களில் தனிமைப்படுத்தப்பட்டதைபோல் உணர்வீர்கள். மன அழுத்தம், டென்ஷன், கழுத்து வலி, தொண்டை வலி, சைனஸ் - தலை வலி வந்து நீங்கும். சிலர் உங்களைத் தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகுபகவான் உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், பிதுர்வழிச் சொத்து பிரச்னை தீரும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

தந்தைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் உதவிகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அனுபவமிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கட்டட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார்.

உத்தியோகத்தில் அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்து கொள்வார்கள். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு, சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து கொண்டு பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சுறுத்தலையும், அவ்வப்போது படபடப்பையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்து கொண்டிருக்கும் கேது, ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும்.

வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். நோய்கள் குணமாகும். ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்களின் பலவீனங்களை ஒவ்வொன்றாகச் சரி செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் பேசத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட 500 ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாள்கள் தூக்கம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்து போகும். வேற்று மொழியினர், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதைய கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வி.ஐ.பிகளின் நட்பால் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் சப்தமாதிபதியும் தசமாதி பதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேது பகவான் செல்கிரார். ஆகவே ஒருவித மனோபயம், முன்கோபம், வீண் டென்ஷன், அலர்ஜி, நரம்புச் சுளுக்கு, தோலில் நமைச்சல் வந்து போகும்.

வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரக்கூடும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் தன சேவகாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தள்ளிப் போன சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம் கூடி வரும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை, கேதுபகவான் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அழகு, அறிவு, ஆரோக்கியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்குக் கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். என்றாலும், சுடுதல் நேரம் ஒதுக்கிப் பணி புரிய வேண்டிய நிலை ஏற்படும். சக ஊழியர்களுக்காக வாதாடிச் சாதித்துக் காட்டுவீர்கள். நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது மாற்றம், உங்களுக்கு அழகு, ஆரோக்கியத்தையும் பணம், பதவியையும் பெற்றுத் தந்து உங்களை மகிழ்விப்பதாக அமையும்.

பரிகாரம்:

கும்பகோணம் நகரத் தின் மையத்தில் அமைந்துள்ள - ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ் வரர் கோயிலில் அருளும் ஸ்ரீநாகேஸ் வரரையும் ஸ்ரீபெரியநாயகியையும் வழிபட்டு வாருங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்; வாழ்வில் வெற்றி கிட்டும்.

மகரம்

மனிதர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்களே, துவண்டு வருவோருக்குத் தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே... புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்க வைக்கும் மூடச் சிந்தனைகளை தூக்கி எறிவீர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 6- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக அந்தஸ்தையும், வசதி வாய்ப்பு களையும், வருமானத்தையும் தந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 5-ம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல. எனினும் சுக்கிரனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களைக் குறைத்து நல்லதையே செய்வார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

குடும்பத்திலிருந்த சச்சரவு குறையும். கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் முன்கோபம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிலர் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று காணிக்கையைச் செலுத்துவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். அக்கம் - பக்கம் வீட்டாருடன் பிரச்னைகள் வேண்டாம்.வழக்கில் அலட்சியம் வேண்டாம். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். முன்யோசனையில்லாமல் அவசர முடிவுகள் எடுத்து, பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் சுகாதிபதி யும் லாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்கிறார்.

வேலைச்சுமை, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், களைப்பு, ஒருவித வெறுப்பு உணர்வு வந்து செல்லும். உங்களின் தாயார் கோபத்தில் ஏதோ சொன்னாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீட்டில் கழிவு நீர்க் குழாய், குடிநீர்க் குழாய் பழுது, மின் கசிவுகள் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. பழைய கடன், பகையை நினைத்துக் கலங்குவீர்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை சப்தமாதி பதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.

உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பாதியில் நின்ற கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை, ராகு பகவான் உங்களின் அஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். தூக்கம் குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு என்றாலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப் படாதீர்கள். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.

வேலையாள்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். ஹோட்டல், துணி, பெட்ரோ கெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்து கொடுக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் மூத்த அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். சக ஊழியர்களில், உங்களுக்கு எதிராகச் செயல் பட்டவர்களின் மனசு மாறும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உங்களின் செல்வாக்கு ஓங்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து பயணங்களால் அலைச்சல்களையும், சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்களையும், மன இறுக்கத்தையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான 11 - ல் வந்தமருகிறார்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வழக்கு சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

புதுப் பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். வீரியத்தை விடக் காரியம்தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் பாக்கியாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விருந்தினர் வருகை, சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். பூர்விகச் சொத்தை புதுப்பிப் பீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதற்கேற்ப, கடுமையாக உழைத்து முன்னேற்றம் காண்பீர்கள்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் ராசிநாதனும் தனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

குடும்பத்தில் நல்லது நடக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடிவடையும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேது பகவான் திருதியாதிபதியும் விரையாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும்.

சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். யாரும் நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று புலம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள்.

வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளைக் கடக்கும் போதும் நிதானம் அவசியம். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றவீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் உயர் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளைச் சரி செய்வீர்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது மாற்றத்தில், ராகுவால் மனநிம்மதி இல்லாத போக்கு ஏற்பட்டாலும் கேதுவால் திடீர் யோகமும், வசதி, வாய்ப்பும் உண்டாகும். புது அனுபவ பாடங்களைப் பெற்றுத் தருவாதாகவும் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி அமையும்.

பரிகாரம்:

நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற ஊர், நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள நாகூர். இங்கே கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீநாகவல்லி சமேத ஸ்ரீநாகநாதரை வழிபடுங்கள். ஏழை நோயாளிகளுக்கு உதவுங்கள்; தொட்டது துலங்கும்.

கும்பம்

வாய்மையே வெல்லும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர் நீங்கள். நாட்டுநலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உலக விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் நீங்கள், எப்போதும் தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்கள். மற்றவர்களின் ஆளுமைக் குக் கட்டுப்பட்டுச் செயல்பட மாட்டீர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு திசைக்கொரு பக்கமாகப் பிரச்னைகளைக் கொடுத்து நாலாவிதத்திலும் பாடாய்படுத்தினார் ராகு. உங்களை மனஉளைச்சலுக்கு ஆக்கினார். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவித்தீர்கள். இப்போது ராகுபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்து அமர்வதால் இனி எல்லாவற்றையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைத் தருவார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

5-ம் வீட்டை விட்டு ராகு விலகியதால், பல முறை சிகிச்சை பெற்றும் குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்க்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணமும், பொறுப்பற்ற போக்கும் மாறும். இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பூர்விகச் சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்தவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய உறவினர்கள் இப்போது வலிய வந்து பேசுவார். ராகு 4- ம் வீட்டில் அமர்வதால், அரசு அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் திருதியாதி பதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், வேலைச்சுமையால் மனஇறுக்கம் அதிகமாகும். சொத்து வாங்கும் முன் தாய்பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்ப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். வழக்கில் தீர்ப்புத் தாமதமாகும். யாரையும் எதற்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் விரும்பத்தாக இடமாற்றம் வரும். சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை சஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் எதிர்ப்புகள், விமர்சனங்கள் அதிகமாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் அடிக்கடிச் செலவு வைக்கும்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகு பகவான் உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்துகொடுத்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள்.

கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் முன்னிலையில் வாழ்க்கைத் துணையைக் குறைவாகப் பேச வேண்டாம். திருமண முயற்சிகள் சற்றுத் தாமதமாகி முடியும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும்.

வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரங்களைத் தெரிந்து கொண்டு புது முயற்சிகளோ, முடிவுகளோ எடுக்க்கப் பாருங்கள். வேலையாள்கள் குறித்து ஆதங்கப் படுவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் கருத்துக்களை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். இரும்பு, கடல் உணவுகள், மூலிகை, கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர், உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை உயரதிகாரிகள் மத்தியில் பரப்புவார்கள். நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் கூடப் போராடிப் பெற வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு 11 -ம் வீட்டில் அமர்ந்து திடீர் யோகங்களையும், செல்வம், செல்வாக்கையும் தந்த கேது பகவான், இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால், வேலைச்சுமையால் பதற்றம், சோர்வு வந்து போகும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் நீங்களும் மூக்கை நுழைக்காதீர்கள்.

உங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும், வாக்குறுதியும் தர வேண்டாம். பிரபலங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடையும். எதிர்பாராத வகையில் பணம் வந்து சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அனுபவபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

01.09.2020 முதல் 10.05.2021 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. புதிய யோசனைகள் மனத்தில் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் பலன் அடை வீர்கள். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் அழகு, அறிவுக் கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது டிசைனில் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுப்படுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வேலை கிடைக்கும். சிலர், சொந்தமாகப் புதுத்தொழில் தொடங்குவீர்கள்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் தனாதிபதியும் லாபாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வருமானம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.

புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலமாகப் பணம் வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். நீங்கள் விரும்பியது போல் கடையை விரிவுப்படுத்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவர விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைக் காலதாமதமின்றிச் செலுத்திவிடுவது நல்லது; தாமதம் காட்டினால் வீண் பிரச்னைகள் எழக்கூடும்.

பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள்.உத்தியோக ஸ்தானத்தில் கேது அமர்வதால் விரும்பத் தகாத இடமாற்றங்கள், சின்னச் சின்ன அவமானங்கள், வேலையிழப்புகள் வந்து போகும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் நீடிப்போமோ, மாட்டோமோ என்ற சந்தேகம் வீண் பயம் எழுந்து மனத்தை வாட்டும். தெய்வ வழிபாடு துணை இருக்கும். சிலர் உங்களை அவதூறு வழக்குகளில் சிக்க வைப்பார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு - கேது மாற்றம், உங்களின் சேமிப்புகளைக் கரைப்பதுடன் அலைச்சலைத் தந்தாலும், புது ஆதாயங்களைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருவாரூர் - நாகை மார்க்கத்தில் உள்ள கீழ்வேளூரில் இருந்து சுமார் 3 கி.மீ, தொலைவில் உள்ளது திருக்கண்ணங் குடி எனும் ஊர். அங்கு சுயம்பு லிங்கமாக அருளும் ஸ்ரீகாளத்தீஸ் வரரை வணங்கி வாருங்கள். ஏழை தொழிலாளிக்கு உதவுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

மீனம்

பொறுமையும் சகிப்புத்தன்மையும் உடைய நீங்கள், காரணகாரியமில்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், பிறர் உழைப்பில் வாழ மாட்டீர்கள். எங்கும் எதிலும் புதுமையைப் புகுத்தும் நீங்கள், மனசாட்சிக்கு மாறாக நடந்துகொள்ளாதவர்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 4- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் பழியையும், மனத்தில் ஒருவித அச்சத்தையும் உங்களுக்கும் தாயாருக்கும் இடைவெளியையும் ஏற்படுத்திய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3 - ம் வீட்டிற்கு வந்தமர்வதால் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியில் நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி.ஐ.பிகளின் மனத்தில் இடம் பிடிப்பீர்கள். பொதுக் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... நல்ல பதில் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் தன, பாக்கியாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், சகல பிரச்னைகளும் அகலும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் ஆதரவு பெருகும். அவருக்கிருந்த நோய் விலகும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை, பூர்வ புண்ணியாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகுபகவான் உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, ஒற்றைத் தலை வலி வந்து போகும்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அக்கம் பக்கத்த்உ வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சில நேரங்களில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்வீர்கள். வேலையாள்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்.

ரியல் எஸ்டேட், துணி, காய், கனி, ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புதுக் கிளைகள் அல்லது தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த தொந்தரவுகள் விலகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்.

உத்தியோகத்தில், உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்கள், நல்ல பொறுப்பில் அமர வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்து அடுத்தடுத்த வேலைகளால் பதற்றத்தையும், அவமானங்களையும் சந்திக்க வைத்த கேதுபகவான் இப்போது ராசிக்கு 9-ல் வந்து அமர்கிறார்.

தள்ளிப் போன காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள்.

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றிவிடுவீர்கள். புறநகர் பகுதியில் வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். அதற்கான சகல வாய்ப்புகளும் கூடிவரும்.தந்தையாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். அவருக்கு ரத்த அழுத்தம் வந்து போகும். தந்தைவழிச் சொத்துகளைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும்.

ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. கோயில் கும்பாபிஷேகத் திற்கு நன்கொடை வழங்குவீர்கள். அவ்வப்போது, கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் சுக சப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்விகச் சொத்தை மாற்றி, உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருக்கு வேலை கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

தாயாரின் உடல் நலம் சீராகும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்; மனத்தில் தன்னம்பிக்கை பிறக்கும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்கிறார். ஆகவே, பெரிய திட்டங்கள் நிறைவேறும்.

பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்கு வீர்கள். வங்கி லோன் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... அதன் பொருட்டு நல்ல பதில் வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். என்றாலும், எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்; வீண் பிரச்னைகள் எழலாம். சில நாள்கள் தூக்கம் குறையும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை, கேதுபகவான் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். தோற்றப் பொலிவு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலையாள்களிடம் கறாராக இருக்க வேண்டாம்; அன்போடு அவர்களை வழிநடத்துங்கள்.

உத்தியோகத்தில் அவ்வப்போது ஒதுக்கப் பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். அதே நேரம், சக ஊழியர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். ஆகவே, மற்றவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். அலுவலக ரகசியங்களை வெளியே பகிர வேண்டாம். சிலருக்கு, வேறு சில நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் வரும்.

மொத்தத்தில் இந்த ராகு - கேதுப் பெயர்ச்சியில் ராகுவால் திடீர் யோகமும், செல்வாக்கும் கிடைக்கும். எனினும் கேதுவால் அலைச்சலும், செலவினங்களும் வந்து செல்லும்.

பரிகாரம்:

நன்னிலம் அருகில் இருக்கும் தலம் ஸ்ரீவாஞ்சியம். இந்த ஊரில் ராகுவும் கேதுவும் சேர்ந்து காட்சி தரும் அரிய கோலத்தைத் தரிசிக்கலாம். இவ்வூரில் அருளும் சிவனாரை வழிபட்டு வாருங்கள்; ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யுங்கள்; தடைகள் அனைத்தும் உடைபடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு