லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
ஹெல்த்
Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

1.9.2020 முதல் 21.3.2022 வரை

மேஷம்

ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுப்பது நல்லது.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு வீண் செலவுகளைத் தந்த கேது பகவான் இப்போது 8-ல் அமர்வதால் வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். 8-ல் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார்.

வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாட்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மோதல் போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக்கண்டு உயர்பதவிக்கு சிபாரிசு செய்வார்.

அசுர வளர்ச்சியையும் பணவரவையும் வெற்றியையும் தருவதாக அமையும் இந்த ராகு - கேது மாற்றம்.

ரிஷபம்

ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 2-ம் வீட்டில் உட்கார்ந்துகொண்டு காரியத்தடைகளையும் மன உளைச்சலையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனத்தில்கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் உட்கார்ந்துகொண்டு பல தொந்தரவுகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த கேது இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். அவர், உங்களின் தோற்றப்பொலிவைக் கூட்டுவதுடன் அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் அதிக முதலீடுகளைத் தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் தடைபட்ட உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கப் போராட வேண்டியிருக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

சவால்களில் வெற்றியையும் அடிப்படை வசதி வாய்ப்புகளையும் அளிக்கும் இந்த ராகு - கேது மாற்றம்.

மிதுனம்

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பிரச்னைகளில் சிக்கவைத்து புலம்ப வைத்த ராகு பகவான் இப்போது ராசிக்கு 12-ம் வீட்டுக்கு வந்தமர்வதால் அனைத்து பிரச்னைகளும் தீரும். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குண்டு.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பிரச்னையையும் உடல்நலக்குறைவையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். பழைய கடனை அடைக்கும் அளவுக்கு வருமானம் கூடும். சொந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். உயர் பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட முயற்சியால் வேலைகளை முடிப்பீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

பிரச்னைகளிலிருந்து விடுபட்டு ஆதாயத்தைத் தருவதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

கடகம்

ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 12-ல் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்கான பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசியின் லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பழைய கடனை அடைத்து முடிப்பீர்கள். கணவர் உங்களை ஆதரித்துப் பேசுவார். திடீர்ப் பணவரவு உண்டு.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சேமித்து வைத்த பணத்தில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

புதிய தொடர்புகளையும் வசதி வாய்ப்பையும் அதிகப்படுத்துவதாக அமையும் இந்த ராகு - கேது மாற்றம்.

சிம்மம்

ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி, ஷேர் வகையில் லாபம் எனத் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் வந்து அமர்கிறார். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனை அடைக்கும் அளவுக்குப் பணவரவு உண்டு. ஆடம்பரமான பொருள்கள் வீடு வந்து சேரும். வெளிவட்டாரத்தில் வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, சொந்தங்களிடையே கருத்து மோதல் எனப் பல கசப்பான அனுபவங்களைத் தந்த கேது, இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்து அமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகள் உங்களின் விருப்பங்களுக்கேற்ப நடந்துகொள்வார்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகளை அதிரடி சலுகைகளால் விற்பனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தருவதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

கன்னி

ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாகப் பார்க்கவிடாமல் தடுத்த ராகு பகவான் இப்போது 9-ல் வந்தமர்கிறார். முடியாது என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பலவிதங்களிலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான், இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம்காட்டுவார்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து மோதல் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு கூடும். உயர் பதவிகள் கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் அமையும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை புதிய யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாட்கள் வளைந்து கொடுத்துப்போவார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் வெகுநாள் கனவான பதவி உயர்வு உண்டு. வேலைச்சுமை குறையும்.

நிம்மதியையும் செல்வ வளத்தையும் தருவதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

துலாம்

ராகுவின் பலன்கள்: ராசிக்கு 9-ல் அமர்ந்துகொண்டு கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான், இப்போது 8-ல் சென்று மறைகிறார். தடைபட்ட காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலை சீராகும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல் தீரும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்களைக்கண்டு இனி வருந்த வேண்டாம். குடும்ப சூழ்நிலையைப் புரிந்து அவர்கள் நடந்துகொள்வார்கள். மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைவார். புது வீடு மாறுவீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்துவந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2-ம் வீட்டில் நுழைகிறார். சாதுரியமான பேச்சால் அனைத்தையும் சாதிப்பீர்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கணவருடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் கூடாது. அனைவரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். உத்தியோகத்தில் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன் பதவியும் உயரும்.

தனித்து நின்றே வெற்றி பெற வைக்கும் சக்தியைத் தருவதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

விருச்சிகம்

ராகுவின் பலன்கள்: ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து காரியத்தடைகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களுக்குள் மறைந்துகிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் குறையும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. ஆனால், களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் அமர்வதால் கணவருடன் சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து விலகும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கப்பாருங்கள். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். திடீர்ப் பயணங்களுக்கு வாய்ப்புண்டு.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் நின்றுகொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்து அமுர்வதால் இனி சமயோஜித புத்தியுடன் பேச வைப்பார். தியானம், யோகாவில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவதால் தெய்வபலம் கூடும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும்.

அனைத்திலும் முதலிடம் பிடிக்கவைப்பதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

தனுசு

ராகுவின் பலன்கள்: ராசிக்கு 7-ம் வீட்டில் நின்றுகொண்டு உங்களைத் திசையறியாது திணற வைத்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ஆற்றலுடன் வந்து அமர்கிறார். உங்களை எதிரியைப்போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். கணவருக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கடன் பிரச்னைகளில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத்தடைகள், உடல் உபாதைகளைத் தந்த கேது இப்போது 12-ல் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சித் தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பால்ய தோழிகளின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வி.ஐ.பி-க்கள் நட்பு மேம்படும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்துவந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

திடீர் யோகங்களையும் எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

மகரம்

ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 6-ல் நின்ற ராகு ஒருபுறம் நல்லதை செய்து மறுபுறம் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகளைத் தந்தார். இப்போது அவர் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்சன், அலைச்சல், முன்கோபம் குறையும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தங்களிடையே இருந்த மனக்கசப்பு விலகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும் வீண் அலைச்சலையும், தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் வந்து அமர்கிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை வங்கிக் கடன் உதவியால் முழுமையாக முடிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாகக் கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக்கிடந்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

திறமைகளை வெளிக்கொணர்வதுடன் கௌரவம் புகழையும் தரும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

கும்பம்

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் அமர்ந்து பாடாய்படுத்திய ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்து அமர்வதால் இனி மன நிம்மதியைத் தருவார். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை ஒதுக்கித்தள்ளுவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும் மனக்கசப்பும் வந்து நீங்கும். மாமியார் உங்களின் தியாகத்தைப் புரிந்துகொள்வார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களைத் தந்த கேது பகவான், இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் தொட்ட காரியத்தை விரைந்து முடிக்க வைப்பார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களின் அறிவை வளர்க்க புது முயற்சி எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சக ஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள்.

உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்வதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.

மீனம்

ராகுவின் பலன்கள்: ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து உங்களை நாலாபுறமும் பந்தாடிய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டில் வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். கடன் தொல்லைகளை பைசல் செய்வீர்கள். குடும்பத்தினர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரையில் உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது இப்போது ராசிக்கு 9-ல் வந்து அமர்கிறார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தோழிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி இனி மதிப்பார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

வாழ்வின் புது அத்தியாயத்தைத் தொடங்குவதாக அமையும் இந்த ராகு - கேது பெயர்ச்சி.