Published:Updated:

ராஜயோக ராசிகள்!

ராசிப்படி ராஜயோக அமைப்புகள் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி

ராஜ யோகம் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். அப்படி ஏதேனும் ராஜயோகம் நம் ராசிக்கு உள்ளது என்றால், அந்த ராஜ யோகம் எப்படி அமையும், அதை எந்த கிரக மூர்த்தி அருள்பாலிப்பார், எப்போது அந்த யோகம் வேலை செய்யும் எனும் கேள்விகள் நமக்குள் எழும். அவற்றுக்கான விளக்கங்களை நாம் அறிவது அவசியம்.

ராஜயோக ராசிகள்!

முதலில் நாம் `ராஜ யோகம் என்றால் என்ன?’ என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

`காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்...’

என்று பாடி வேண்டுகிறார் மகாகவி பாரதி.

காணி நிலம் வேண்டுமாம். வெறும் நிலம் மட்டும் தந்தால் போதுமா..? அங்கு நல்ல தூண்களெல்லாம் இட்டு நல்ல வண்ணத்தில் ஒரு மாளிகை வேண்டும் என்கிறார் மகாகவி. அதுமட்டுமா?

மாளிகையைச் சுற்றிலும் மரங்கள், ஒரு கிணறு, கிணற்றங் கரையில் தென்னங்கீற்றுகளையும் இளநீரையும் சுமக்கும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் நிற்கவேண்டும்.

இரவு வேளையில் முற்றத்தில் முத்துச் சுடரொளி பரப்பியவாறு குளிர்நிலவு எட்டிப் பார்த்துச் சிரிக்க வேண்டும். அதிகாலையிலேயே குயில்களின் ஓசை செவிகளைக் குளிர்விக்க வேண்டும். மனம் இன்பம் கொள்ள தென்றல் காற்று மெள்ள வந்து காதோடு கவிபேச வேண்டும்.

இவ்வளவு அழகான இடத்தில் இல்லாளும் உடனிருக்க மகிழ்வுடன் வாழவேண்டும். அப்படியான வாழ்க்கைக்குப் பராசக்தி பாதுகாவலாக இருந்து காத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் பாரதியார். மிக அற்புதமான விருப்பமும் வேண்டுதலும்தான்.

ஜாதகத்தில் ராஜயோகம் அமையப்பெற்ற அன்பர்களுக்கு இப்படியான வரம் மிகுந்த வாழ்க்கை அமையும்.

ராஜயோக ராசிகள்!

வீடு, மாடு, காடு, நிலம், காற்று, தண்ணீர், அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த உறவுகள், தேக ஆரோக்கியம் அனைத்தும் வாய்க்கும். இயல், இசை, நாடகம் என்று நம் பொழுது இனிதே கழியும். இப்படியான இனிய வாழ்வைத் தரும் அமைப்பை ராஜ யோகம் எனலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசியினருக்கும் ஒவ்வொரு விதமாக மேற்காணும் ராஜயோகம் அமைய வாய்ப்பு உண்டு. 12 ராசிகளும் 9 கிரகங்களுக்குச் சொந்தமானவை.

அதேநேரம் ஒருசில கிரகங்கள் ஒருசில ராசிகளில் உச்சம் அடைந்தும் நீசம் அடைந்தும் தங்களின் அதிகார ஆளுமையை, அந்த ராசிக்காரர்களிடம் செலுத்துகிறார்கள். அதேபோல், குறிப்பிட்ட சில ராசிகளில் உச்சமோ, நீசமோ அடையாமல் சாதாரண நிலையிலேயே செயல்படுகிறார்கள்.

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் கிரகங்கள் ஆட்சி, உச்சம், நீசம் பெற்று ராஜயோகத்தைத் தருகிறார்கள். இப்படியான நிலையே நேரடி ராஜயோகம், நீசபங்க ராஜ யோகம் என்ற பெயர்களில் விளங்குகிறது.

மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்ப ராசியில் எந்த கிரகங்களும் உச்சம் அல்லது நீசம் பெறாத நிலை உள்ளது. ராகு-கேதுக்கள் ரிஷப ராசியில் நீசம் அடைந்து, விருச்சிக ராசியில் உச்சம் பெறுவதாக ஒரு ஜோதிடக் கூற்று உண்டு. அதன்படி இரண்டுகிரகங்களும் இந்த ராசிகளில் ராஜயோகத்தைக் கொடுக்கிறார்கள் எனலாம்.

இனி, எந்தெந்த ராசியில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் அல்லது நீசம் அடைகிறார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.

மேஷம்: இந்த ராசி செவ்வாய் பகவானின் ஆட்சி வீடாகவும், சூரிய பகவான் உச்சம் பெறக்கூடிய ராசியாகவும் திகழ்கிறது. ஆனால் சனி பகவான் நீசம் பெறக்கூடிய ராசியாக மேஷம் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, மேஷ ராசிக்கு செவ்வாய், சூரியன் மற்றும் சனி பகவானின் பலன்கள் நல்லபடியாக வாய்க்கும்போது இந்த ராசிக்காரர்கள் ராஜ யோகத்தைப் பெறுவார்கள்.

ரிஷபம்: சுக்கிர பகவான் ஆட்சி செய்யும் ராசி இது. சந்திர பகவான் இந்த ராசியில் உச்சம் பெறுவார். இங்கே ராகு - கேதுக்கள் நீசம் பெறுவதாக ஜோதிடத் தகவல் உண்டு. இங்ஙனம் ரிஷப ராசிக்கு சுக்கிரன், சந்திரன் மற்றும் ராகு கேதுக்களின் அமர்வு நல்லபடியான நிலையில் இருந்தால் அற்புதமான ராஜ யோக வாழ்வு கிட்டும்.

மிதுனம்: புதன் பகவான் ஆட்சி செய்யக்கூடிய ராசி. ஏனைய கிரகங்கள் எதுவும் உச்சம் மற்றும் நீசம் பெறாத நிலையில் இருக்கக் கூடிய ஒரு ராசி. மிதுன ராசிக்காரர்களுக்குப் புதன் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தால், நிச்சயம் அவர்களுக்கு ராஜ யோகம்தான்.

கடகம்: சந்திர பகவானின் ஆட்சி வீடு. குருபகவான் இந்த ராசியில் உச்சம் பெறுவார். செவ்வாய் நீசம் பெறும் ராசி. இந்த மூன்று கிரக மூர்த்திகளும் நல்லபடியான நிலையில் இருந்தால், இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் உண்டு.

சிம்மம்: இது, சூரிய பகவானின் ஆட்சி வீடாகும். அங்கே வேறு எந்த கிரகமும் உச்சம் மற்றும் நீசம் அடையாத நிலையில், அவரே ராஜ யோகத்தைக் கொடுப்பார். சிம்ம ராசி அன்பர்களுக்கு, ஜாதகத்தில் சூரிய பகவானின் நிலைப்பாட்டை பொறுத்தே ராஜ யோகம் அமையப்பெறும்.

கன்னி: புத பகவான் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று இருக்கக்கூடிய ராசி இது. சுக்கிரன் இங்கே நீசம் பெறுவார். இப்படியான நிலையில் ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் நல்லபடியான நிலையில் இருந்தால் கன்னி ராசிக் காரர்கள் ராஜயோக வாழ்வைப் பெறுவார்கள்.

துலாம்: எதையும் சமத்துவத்துடன் அணுகும் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள். துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற, சனி உச்சம் பெறுவார். சூரிய பகவான் இந்த ராசியில் நீசம் அடைந்துவிடுவார். ஆக, இந்த மூன்று கிரக மூர்த்திகள் நல்ல வலுவான நிலையில் அமர்ந்தால், இந்த ராசிக்காரர்களுக்குச் சுகபோக வாழ்க்கை அமையும்.

விருச்சிகம்: இந்த ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுவார். இதில் ராகு-கேதுக்கள் உச்சம் பெற்று அமையும் என்கின்றன ஜோதிடக் கூற்றுகள். இந்தக் கிரகங்களில் நிலைப்பாட்டினால், விருச்சிக ராசிக் காரர்களுக்கு ராஜயோக அமைப்பு உண்டாகும்.

தனுசு: இந்த ராசியில் குரு பகவான் ஆட்சி பெறுவார். இந்த ராசியில் மற்ற கிரகங்கள் எதுவும் உச்சம் அல்லது நீசம் பெறாத நிலைதான். ஆக, குருவருள் சிறப்பாக இருந்தால், தனுசு ராசிக் காரர்களுக்கு யோக வாழ்க்கை அமையும்.

மகரம்: இந்த ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வார். செவ்வாய் பகவான் உச்சம் அடைவார். இந்த ராசியில் குரு பகவான் நீசம் பெற்று விடுகிறார். ஆக, உரிய நிலைகளில் இந்த மூன்று கிரகங்கள் அமையப்பெற்றால் மகர ராசியினருக்கு யோக பலன்கள் கிடைக்கும்.

கும்பம்: இந்த ராசியிலும் சனி பகவான் ஆட்சி பெற்று விடுகிறார். ஏனைய கிரகங்கள் எதுவும் உச்சம் அல்லது நீசம் பெறாத நிலையில் கும்பராசி அமைந்துள்ளது. சனியின் திருவருள் யோக பலன்களைத் தர வாய்ப்பு உண்டு.

மீனம்: குரு பகவான் ஆட்சி பெற்று விடுகிறார். இங்கே சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளார். புதன் பகவான் நீசம் பெறக்கூடிய ராசி இது. ஜன்ம ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் ஆகியோரின் அமர்வு இந்த ராசிக்கு நல்லபடியாக அமைந்தால், யோகம் உண்டாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்கள் அந்தந்த ராசியில் அமர்ந்து இருந்தாலும் சரி அல்லது லக்னத்திற்கு 1, 4, 7, 11 ஆகிய இடங்களில் இருக்கும் நிலை என்றாலும் அந்த ஜாதகர்கள் ராஜயோகத்தை நேரடியாகவும் அல்லது நீசபங்கம் மூலமாகவும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இந்த அமைப்பு ஒரு லக்னத்திற்கு 3, 6, 8 மற்றும் 12 என்று வரும் பொழுது அவர்களே விபரீத ராஜயோகத்தை அனுபவிப்பதற்கான அமைப்பில் உள்ளவர்கள். மேலும் அந்தந்த கிரகங்களின் தசாபுத்திகள் வரும்காலத்தில் அந்த ராஜ யோகத்தை அந்த ராசிக்காரர்கள் அந்த முறையிலேயே அனுபவிக்க முடியும்.

கனவில் மணியோசை!

பெரிய மணியோசையைக் கேட்பது போன்று கனவு வந்தால், ஒரு பெரும் துன்பத்திலிருந்து விடுபடப் போகிறோம் என்று அர்த்தம். அதேநேரம், அந்தத் துன்பத்தை ஏற்படுத்திய செயலை மீண்டும் செய்யக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையும் கூட.

அதேபோல் கனவில் பயமுறுத்தும் உருவங்களைக் கண்டால் கவலைப்பட வேண்டாம். இப்படியான கனவு ஏற்பட்டால், இதுவரையிலும் இருந்த பிரச்னைகள் விலகும் என்று அர்த்தம். அதேபோல் கனவில் நட்சத்திரங்களைக் கண்டால் புகழ் கூடும்; சந்திரனைக் கண்டால் நிம்மதி பிறக்கும்; மீன்களைக் கண்டால் தனம் சேரும். நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து உதிர்வது போல் கனவு காணக் கூடாது.

- எம்.முருகன், கடலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு