
- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் -
இரவு வானைக் கவனித்தீர்களா? மேகங்கள் சுழ் நிலவைக் கண்டுகளிப்பதுடன், ஆகாயப் பரப்பை மேலும் உன்னிப்பாக ஆராய்ந்தீர்கள் எனில், குருவையும் சுக்கிரனையும் வெறும் கண்களால் நீங்கள் தெளிவாக தரிசிக்க முடியும். ஆம், மார்ச் 12-ம் தேதி வரையிலும் இந்த நிலை நீடிக்கும் என்கிறார்கள். வானில் தரிசிப்பதுடன், ஜாதகத்தில் சுக்கிரனின் நிலைகளையும் பலன்களையும் அறிந்துகொள்வோமா?

செழிப்பும், புகழும், செல்வமும், நல்ல பெயரும் நல்லோர் சேர்க்கையும் திடீர் அதிர்ஷ்டமும் ஒருவருக்கு உண்டானால், அவருக்கு சுக்கிர தசை அடிக்கிறது என்கிறோம். ஆம், ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் சகல சுகபோகங்களையும் அள்ளித் தருவார். சந்தோஷமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, குழந்தைகளால் கிடைக்கும் மன நிம்மதி, நல்ல பெயர், புகழ், வாகனங்கள் வாங்கும் பாக்கியம், தொழில் மேம்பாடு என அனைத் தையும் கொடுப்பவர் சுக்கிரன். அவரே வலுவிழந்து இருந்தால், பொருளாதாரம் சுகபோக நிலைகளில் சிரம நிலையும் ஏற்படலாம்!
பூமியில் இருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடு பாதையும், பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் எனும் வரிசையில் ஓடுபாதைகளும் இருக்கும். ராசிச் சக்கரத்திலும், சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில், புதனும் செவ்வாயும் தென்படுவர்.
புதன்- விவேகத்துடனும், மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய்- சுறுசுறுப்புடனும் இயங்க வைப்பார்கள். புதனது சேர்க்கையால் விவேகமும் கலப்பதால், செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வாயுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலைதூக்கும்; மெத்தனம் வெளிப்படும்.

சுக்கிர தசையும் பலன்களும்!
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை என்பது இருபது ஆண்டுகளுக்கு நடக்கும். மற்ற நேரத்தில் வாழ்க்கை எப்படி இருந்தாலும், இந்த இருபது ஆண்டுகளில், ஆசைப்படும் அனைத்தையும் கொடுத்துச் சந்தோஷப்படுத்துவார் சுக்கிரன். சுக்கிர தசை நடக்கும்போது சுக்கிரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அந்தத் தருணத்தில் கிடைக்கும் பலன்கள் மாறுபடும் என்கிறது ஜோதிடம்.
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், எந்தச் செயலை எடுத்தாலும் அதில் வெற்றி கிட்டும். நல்ல அரசாங்க வேலை கிடைக்கும். படிப்பு, சுகமான வாழ்வு என எல்லாமே நிறைவாக அமையும்.
இரண்டாவது இடத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு இலக்கியத்தில் ஆர்வம் கூடும். பேச்சுத் திறன், அடுத்தவர்களுக்கு உதவும் தயாள குணம், ருசியாகச் சாப்பிடுவதில் ஆசை உண்டாகும். நிறைய வழிகளில் பண வரவு இருக்கும்.
சுக்கிரன் மூன்றாம் இடத்தில் இருந்தால், அவர் தைரிய சாலியாகவும் எப்போதும் உற்சாகத்துடனும் இருப்பார். வாகன யோகம் உண்டு.
நான்காம் இடத்தில் இருந்தால், ராஜபோக வாழ்க்கைத்தான்! அரசியல் செல்வாக்கு கூடும். காரியவெற்றி கைகூடும்.
ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், கல்வி மற்றும் கலைகளில் திறமைசாலியாக இருப்பார். பெரிய பதவி கிடைக்கும். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பார்.
ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் பண விஷயமாக பயமும், பொருள் நாசமும் ஏற்படும்.
ஏழாம் இடத்தில் இருந்தால், குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். உடல்நிலையில் அசெளகரியம் உண்டாகும்.
எட்டாம் இடத்தில் இருக்கும்போது, இஷ்டமில்லாத காரியங்கள் நடக்கும். ஆனால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. மற்ற கிரகங்கள் எட்டில் இருக்கும்போது, அதிக உபத்திரவங்கள் தரும். அந்த அளவுக்கு சுக்கிரன் மோசமில்லை.
ஒன்பதாம் இடத்தில் இருந்தால், பெயரும் புகழும் கிடைக்கும். நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் பணம் வரும்.
பத்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், அவர்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். உயர்ந்த அரசாங்கப் பதவிகள் கிடைக்கும்.
பதினோராவது இடத்தில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் அதிகமான சுகத்தை அனுபவிப்பார்கள். கலைகளில் ஆர்வம் காட்டும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
பன்னிரண்டாவது இடத்தில் இருந்து நல்லது செய்யும் கிரகம் சுக்கிரன். உடல்நலம் மேம்படும். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். பண வரவு நிறைய இருக்கும்.

சுக்கிரனால் பாதிப்புகள் ஏற்படுமா?
களத்திர காரகனாகவும் விவாக காரகனாகவும் செயல்படுபவர் சுக்கிர பகவான். ஜாதகத்தில் அவரின் நிலை வலுவற்று இருக்கும் போது சில பாதிப்புகளும் உண்டாக வாய்ப்பு உண்டு.
சுக்கிரன் கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்னத்திலிருந்து களத்திர ஸ்தானமாக அமைந்தால், பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பார். அஷ்டமத்தில் வீற்றிருந் தால், தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பார்; காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பார்.
இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமையை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்திய சுகத்தைத் தந்து, விரக்தியில் தள்ளுவார்.
சுக்கிரனுக்கு, 4-லும் 8-லும் பாப கிரகம் இருக்க... ‘சதுரச்ர’ தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷ பலன்களைத் தருவார்.
விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். ‘காரகன்’ என்றால், நடைமுறைப்படுத்தவேண்டியவர் என்று அர்த்தம். அவர் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில், தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பார். லக்னத்தில் இருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தைப் பலவீனமாக்குவார்.
7-ஆம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவார்.
சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டி விடுவார். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிர பகவான், தனது இயல்பை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பார்.
மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன். துலாம் 10-ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும்; சிம்ம லக்னம், ரிஷபத்தில் சுக்கிரன். ரிஷபம் 10-ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக் குறையை உண்டுபண்ணுவார்.
ஜாதகத்தில் சுப கிரகங்களோடும்- அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்ப மயமாக வாழலாம்.
சுக்கிர பகவானை வழிபடுவோம்!
சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. ‘சுக்கிர சாந்தி’ என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவரை வழிபட உகந்த நாள். ‘சும் சுக்ராயநம:’ என்று சொன்னால் அது மந்திர மாக மாறிவிடும் என `மந்திர மஹோததி’ சொல்கிறது.
இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை ‘சும் சுக்ராய நம:’ எனும் மந்திரத்தால், 16 உபசாரங் களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.
சுக்கிர சாந்தி அவசியமா?
சுக்கிர தசை காலத்தில் சந்திர புக்தி, செவ்வாய் புக்தி, கேது புக்தி நடைபெறும் தருணங்களில் சிற்சில சிரமங்கள் உண்டாகலாம். இது போன்ற பிரச்னைகளிலிருந்து மீள்வதற்காக சாந்தி செய்வார்கள். சுக்கிர சாந்தியை வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் செய்யலாம். இரண்டும் இணைந்து வரும் நாளாக இருந்தால் ரொம்ப விசேஷம்.
சுக்கிர சாந்தி செய்யும்போது மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது. ‘நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகா லட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக் கிழமைகள் படித்து, மகாலட்சுமியை வணங்கி வந்தால் சுக்கிர சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.