தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

அபூர்வ யோகங்கள் அற்புத பலன்கள்!

அபூர்வ யோகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அபூர்வ யோகங்கள்

முருகப்ரியன்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரக அமைப்புகளைப் பொறுத்து பல வகையான யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த யோகங்களில் ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான யோகங்கள் நன்மை தரக் கூடியவையே. இங்கே சில யோகங்களைப் பார்ப்போம்.

வாசி யோகம்: சூரியனுக்கு 12-ம் இடத்தில் சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது வாசி யோகம் ஆகும். இந்த யோகம் பெற்ற ஜாதகர்கள் மற்றவர்களால் பெரிதும் புகழப்படும் வாழ்க்கை வாழ்வார்கள்.

சுப உபயசாரி யோகம்: சூரியனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இருப்பின் இந்த யோகம் ஏற்படும். இதன் மூலம் செல்வச்செழிப்புள்ள வசதியான வாழ்க்கை அமையும்.

வேசி யோகம்: சூரியன் இருக்கும் இடத்துக்கு இரண்டாவது ராசியில் சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங் களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால், வேசி யோகம் ஏற்படும். இதன் மூலம் எப்போதும் பணப்புழக்கம் இருக்கும் அமைப்பு உருவாகும். எதிரிகள் பணிந்து போவார்கள்.

துருதுரா யோகம்: சந்திரனுக்குப் பன்னிரண்டு மற்றும் இரண்டு ஆகிய இடங்களில் சூரியன், ராகு, கேதுவைத் தவிர மற்ற கிரகங்கள் ஏதேனும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்கள் வீடு, வாகனம் உள்ளிட்ட அனைத்துவிதமான வசதிகளுடன் சுகமாக வாழ்வார்கள்.

அபூர்வ யோகங்கள்
அபூர்வ யோகங்கள்

சுநபா யோகம்: சந்திரனுக்கு 2-ல் சூரியன், ராகு, கேதுவைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது சுநபா யோகத்தைக் குறிப்பிடும். இந்த யோகம் பெற்றவர்கள், தங்களின் உழைப்புக்கேற்ற உயர்வையும் வசதிவாய்ப்புகளையும் பெறுவார்கள். அதாவது, உழைப்பு வீண் போகாது.

அநபா யோகம்: சந்திரனுக்கு 12-ல் ராகு, கேதுவைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது அநபா யோகம் ஆகும். இந்த யோகம் பெற்றவர்களுக்கு, தேக ஆரோக்கியத்துடன் பெயரும் புகழும் உண்டாகும்.

கேமத்துரும யோகம்: சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருப்பது கேமத்துரும யோகம் எனப்படும். இந்த யோகம் நல்ல பலன்களைத் தராது. வறுமையும் துன்பமுமே இருக்கும். ஆனால், சந்திரனுடனோ அல்லது சந்திரனுக்கு 4, 7, 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் இந்த யோகத்தினால் ஏற்படும் கெடுபலன்கள் நீங்கிவிடும்.

கஜகேசரி யோகம்: சந்திரனுடனோ அல்லது சந்திரனுக்குக் கேந்திர ஸ்தானங்களான 4, 7, 10 ஆகிய இடங்களிலோ குரு இருப்பின் கஜகேசரி யோகம் ஏற்படும். இதன் மூலம் உடல் ஆரோக்கியம், செல்வவளம் வாய்க்கும்; பெயரும் புகழும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

சந்திரமங்கள யோகம்: சந்திரனும் செவ்வாயும் நல்ல இடத்தில் சேர்க்கை பெற்றிருந்தால் வீடு, மனை, நிலம் ஆகியவற்றுக்குக் குறைவே இருக் காது. ஆனால், அவ்வப்போது மனக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அதி யோகம்: சந்திரனுக்கு 6, 7, 8 ஆகிய இடங்களில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருப்பது அதி யோகம் ஆகும். இந்த யோகம் உள்ள அன்பர்களுக்கு, அரசாங்கத்தில் உயரிய பொறுப்புகளை வகித்து, பெயரும் புகழும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

யோகம்
யோகம்

சகட யோகம்: சந்திரனுக்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தால் சகட யோகம் ஏற்படும். இந்த யோகம் அமையப்பெற்றவர்களின் வாழ்க்கை, வண்டிச் சக்கரம் போல் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கும். வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது, பிற்காலத் துக்கான தேவைக்கேற்ப திட்டமிட்டுச் செயல்பட்டால், நன்மைகள் உண்டாகும்.

அடுத்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஜாதகப்படி நோய் உருவாகும் அமைப்பு உண்டா, அப்படி இருப்பின் அதற்கான பரிகாரம் என்ன என்பதுதான். எத்தனை யோகங்கள் இருந்தாலும் தேக ஆரோக்கியம் இல்லையெனில் அவற்றை அனுபவிக்க வாய்ப்பில்லாமல் போகுமே! ஆக, நோயற்ற வாழ்வு அவசியம். எனவே, ஜாதகப்படி பிணிகளுக்கான கிரக அமைப்புகள் மற்றும் உரிய பரிகாரங்களைத் தெரிந்துகொள்வோம்.

பிணிகள் விலக கிரகப் பரிகாரங்கள்!

ருவருடைய ஆரோக்கியத்தைக் குறிப்பிடும் ஸ்தானம் சுக ஸ்தானம் என்னும் நான்காமிடம் ஆகும். நோய்களைப் பற்றிக் குறிப்பிடும் ஸ்தானம் ஆறாமிடம் என்னும் ரோக ஸ்தானம் ஆகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தான அதிபதியும் லக்னாதிபதியும் வலுக்குன்றி இருந்து, ரோகஸ்தான அதிபதி வலிமையுடன் இருந்தால், அடிக்கடி அந்த ஜாதகருக்கு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படக்கூடும். மேலும் ஆறு மற்றும் எட்டுக்கு உடைய கிரகங்களின் தசா புக்தி காலங்களில் நோய் ஏற்படும். அந்த தசாபுக்தி காலம் முடிந்த பிறகு நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

கிரகப் பரிகாரங்கள்
கிரகப் பரிகாரங்கள்

நாம் இப்போது ஆறாம் இடத்தில் அமைந்திருக்கும் கிரகத்தைப் பொறுத்து ஒருவருக்கு ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

சூரியன்: சூரியன் 6-ல் இருந்து 6-க்கு உடையவனுடன் தொடர்பு பெற்றிருந்தால், சூரியனின் தசா புக்தி காலங்களில் உஷ்ணம் தொடர் பான காய்ச்சல், அம்மை, வயிற்றுப்புண் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும். சூரியனின் தசா புக்தி காலங்களிலும், மற்ற கிரகங்களின் சூரிய புக்தி காலங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து சூரியனை வழிபடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

சந்திரன்: சந்திரன் 6-ல் இருந்து ஆறு அல்லது எட்டுக்கு உரிய கிரகத்துடன் தொடர்பு பெற்றிருந்தால் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய்கள், தண்ணீரில் கண்டம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மனத்தில் அடிக்கடி சஞ்சலங்கள் ஏற்படும். சந்திரனின் தசாபுக்தி காலங்களிலும் மற்ற கிரகங்களின் சந்திர புக்தி காலங்களிலும் திங்கள் கிழமைகளில் விரதமிருந்து அம்பிகையை வழிபடுவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனை தெளிவாகும்.

கிரகப் பரிகாரங்கள்
கிரகப் பரிகாரங்கள்

செவ்வாய்: 6-ல் செவ்வாய் இருப்பின் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், குடல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து, சஷ்டி கவசம் பாராயணம் செய்தால், நோய்களில் இருந்து பூரண நலம் பெறலாம்.

புதன்: புதன் 6-ம் இடத்திலோ அல்லது 6-க்கு உடையவனுடன் தொடர்பு பெற்றிருந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஜீரண உறுப்புகளில் பிரச்னை போன்ற பாதிப்புகள் ஏற்படும். புதன்கிழமை மற்றும் திருவோணம் வரும் நாள்களில் திருமால் வழிபாடும், விஷ்ணுச ஹஸ்ரநாம பாராயணமும் பூரண நிவாரணம் தரும்.

குரு: 6-ம் இடத்தில் குரு இருந்தால், மூளை தொடர்பான நோய்களும், சுவாசம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படலாம்.வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

கிரகப் பரிகாரங்கள்
கிரகப் பரிகாரங்கள்

சுக்கிரன்: சுக்கிரன் 6-ல் இருந்தால், சுக்கிரனின் தசா புக்தி காலங்களில் கண் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும். ஜனனேந்திரியங்களிலும் பிரச்னைகள் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட்டு, லட்சுமி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் நலம் பெறலாம்.

சனி: சனி 6-ல் இருந்தால் விபத்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். சனிக்கிழமைகளில் நவகிரக சனிபகவானுக்கு நீலநிற மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளு சாதம் நைவேத்தியம் செய்வதன் மூலம் ஆரோக்கியம் பெறலாம்.

ராகு: 6-ம் வீட்டில் ராகு இருந்தால் புற்றுநோய் பாதிப்பு, குடல் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும். வெள்ளிக்கிழமைகளில் துர்கைக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதன் மூலம் பாதிப்புகள் விலகும்.

கேது: கேது 6-ல் இருந்தால், மனப் பிரமை, விஷக்காய்ச்சல், விஷக்கடிபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம். வெள்ளிக்கிழமைதோறும் விநாயகப்பெருமானுக்கு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன் விநாயகர் அகவல் பாராயணம் செய்து வந்தால் நிவாரணம் பெறலாம்.