Published:Updated:

ராசியும் லக்னமும்!

ராசியும் லக்னமும்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசியும் லக்னமும்

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி

ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்தை ‘விதி ஸ்தானம்’ என்றும் ராசியை ‘மதி ஸ்தானம்’ சொல்லுவார்கள். இதையொட்டியே ‘விதி கெட்டால் மதியைப் பார்’, ‘விதியை மதியால் வெல்லலாம்’ போன்ற பழமொழிகள் வந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விதி ஸ்தானம் எனப்படும் ஜாதகத்தின் ஆதாரத் தானமான லக்னமும் அதன் லக்னாதிபதியும் வலிமை இல்லாமலிருக்கும்போது, ராசி எனப்படும் சந்திரன் இருக்கும் இடத்தையும் அதன் அதிபதியையும் கணித்துப் பலன் சொல்வது மரபு. ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கிறாரா அல்லது பலவீனமாக இருக்கிறாரா என்று கணிப்பதற்கு, ஒரு ஜோதிடருக்கு அதிக அனுபவமும் கணிப்புத்திறனும் தேவைப்படும்.

மேம்போக்காகப் பார்த்துவிட்டு, ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி நன்றாகவே இருக்கிறார் என்று தோன்றினாலும், நவாம்சம் போன்ற சூட்சும விஷயங்களில் அவர் பலவீனம் அடைந்திருந்தால், லக்னாதிபதியால் ஜாதகரை வழிநடத்த முடியாது.

ராசியும் லக்னமும்
ராசியும் லக்னமும்

இப்படிப்பட்ட நேரங்களில், சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, லக்னம் போலவும் அந்த ராசியின் அதிபதியே லக்னாதிபதி போலவும் செயல்படும். ஆக, ஒருவருக்குப் பலன் சொல்வதற்குமுன் ஜாதகத்தில் ராசி வலுவாக இருக்கிறதா, லக்னம் வலுவாக இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கணித்த பிறகே பலன் சொல்ல வேண்டும்.

தாமதத் திருமணம் மற்றும் தாமதமான புத்திர பாக்கியம் போன்றவற்றைத் தரும், களத்திர மற்றும் புத்திர தோஷ அமைப்புள்ள ஜாதகங்களில் நிச்சயமாக லக்னாதிபதி வலுவிழந்து இருப்பார். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், லக்னாதிபதி வலுவாக இருக்கும் ஜாதகங்களில் எந்தவித தோஷமும் கெடுபலன்களைச் செய்வதில்லை.

வாழ்வின் சகலவிதமான சுகங்களையும் பாக்கியங்களையும், ஒருவர் நேர்மையான முறையில் சரியான பருவத்தில் அனுபவிக்க வேண்டுமெனில், அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருக்க வேண்டும்.

பாப கிரகங்களான சனி, செவ்வாய் சுபர் பார்வையின்றி நேரிடையாக லக்னத்தில் ஆட்சி பெறுவதும் ஜாதகம் வலுவிழந்த நிலையைத்தான் குறிக்கும்.

லக்னாதிபதி வலுவிழக்கும்போதுதான் தோஷங் களால் கெடுபலன்கள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். மட்டுமன்றி கிடைக்கவேண்டிய பாக்கியங்கள் தடைப்படும்.

உதாரணமாக, களத்திர தோஷம் எனப்படும் தார தோஷம் மற்றும் புத்திர தோஷ ஜாதகங்களை எடுத்துக்கொண்டால், கடுமையான தோஷங்கள் இருந்தாலும் லக்னாதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில், ஒருவருக்குச் சரியான பருவத்தில் திருமண வாய்ப்பும் புத்திரபாக்கியமும் கிடைத்து விடும்.

லக்னாதிபதி வலுவாக இல்லாவிட்டால், தாம்பத்திய சுகமும், வாரிசும் தாமதமாகும். இதுபோன்ற நிலையில் லக்னத்தின் பணியை ராசியே எடுத்துச் செய்யும். இதனால்தான் லக்னம், ராசி இரண்டையும் இணைத்தே பலன் சொல்லவேண்டும் என்று நம் ஞானிகள் அறிவுறுத்தினார்கள்.

லக்னம் வலுவில்லாமல் ராசி முன்னின்று செயல்படும் ஜாதகத்தில், லக்னத்துக்கு 7-ம் இடம், 8-ம் இடம் நன்றாக இருந்தும் ஒருவருக்குத் திருமணம் தாமதமானால், ராசிப்படி 7, 8-ம் இடங்கள் பலவீனமாக இருக்கும்.

இதுபோன்ற நிலையில் ராசிக்கு ஏழில் சனி, எட்டில் செவ்வாய் போன்ற அமைப்போ, ராகு- கேதுக்கள் ராசியோடு சம்பந்தப்பட்டோ, ராசிக்கு 2, 8-ம் இட அமைப்பிலோ இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் ராசிக்கு ஏழாமிடத்திலோ, குடும்ப வீட்டிற்கு நேரெதிர் வீடான எட்டாமிடத்திலோ பாப கிரகங்கள் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

எட்டாம் இடத்தில் இருக்கும் பாப கிரகம் குடும்ப பாவமான இரண்டாம் இடத்தைப் பார்வை செய்து பலவீனப்படுத்தும். இதைப் போலவே ராசிக்கு இரண்டாமிடத்தில் ஒரு பாபக் கிரகம் இருந்தாலும், ராசியிலேயே இருந்து ராசிக்கு ஏழாமிடத்தைப் பார்த்தாலும் இது பொருந்தும்.

இந்த தோஷம் ஆணாக இருந்தால் முப்பத்து மூன்று வயது வரையிலும், பெண்ணாக இருந்தால் முப்பது வயது வரையிலும் நீடிக்கும். இந்த வயதுக்கு பிறகே இந்த அமைப்பு உள்ளவர் களுக்குத் திருமணம் நடக்கிறது. அதற்கு முன் திருமணம் நடந்தால், குறைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சில நேரம் இந்த தோஷம் ஆணுக்கு 35, பெண்ணுக்கு 33 வரை நீடிப்பதும் உண்டு.

தொழில் ஸ்தானத்திலும் இது எதிரொலிக்கும்.

ஏழாமிடத்தைப் போலவே லக்னத்துக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தின்படி ஒருவர் தொடர்பே இல்லாத தொழிலைச் செய்து கொண்டிருப்பார்.

அவரின் ஜாதகத்தை நுணுக்கமாக கவனித்தால், லக்னாதிபதி வலுவிழந்து இருக்கும்; ராசிக்குப் பத்தாம் இடத்துக்கான தொழிலை அவர் செய்து கொண்டிருப்பார்.

உதாரணமாக - ஒருவர் டாக்டருக்குப் படிக்க முடியுமா என்ற கேள்விக்கு, லக்னப்படி பத்தாமிடத்துடன் சூரியன், செவ்வாய், குரு ஆகியோரின் தொடர்பு இல்லையெனில், டாக்டருக்குப் படிக்கமுடியாது என்று கணிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் லக்னாதிபதி அந்த ஜாதகத்தில் ராசியை விட வலுவிழந்து, அதாவது லக்னத்தை விட ராசியும், ராசிநாதனும் வலுப்பெற்று ராசிக்குப் பத்தாமிடம் செவ்வாயின் வீடாகி, அங்கே குரு பார்வையுடன் சூரியன் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர் டாக்டருக்குப் படிப்பார்.

ஒருவரின் தொழிலைக் கணிப்பது எப்படி?

லக்னாதிபதி வலுவாக இருப்பவர்கள் வெறும் 10 சதவிகித ஜாதகத்தினரே. இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில், இந்த உலகில் முயற்சியின்றி அதிர்ஷ்டத்தால் எதையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள் வெறும் பத்து சதவிகிதம் பேர்தான்.

மற்றவர்கள் அனைவரும் அனைத்தையும் போராடியே பெற்றாக வேண்டும். அதனால்தான் பலருடைய நிலை, அவர்கள் விரும்பிய தொழில் ஒன்றாகவும் பார்க்கும் தொழில் வேறாகவும் இருக்கும்.

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் வீட்டு மனை எப்படி?

புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டத் துவங்கும் போது, அந்த நிலத்தை அகழ்ந்து ஆராய்ந்து பார்க்காமல், சட்டென்று கட்டடப் பணிகளை ஆரம்பித்துவிடக் கூடாது.

ராசியும் லக்னமும்!

வீடு அமையவிருக்கும் இடத்தில் 6 அங்குல அளவு ஆழம் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, வேறு மண்ணைப் பரப்பி, குறிப்பிட்ட இடத்தில் நவதானிய தாவரங்களை வளர்க்கவேண்டும். அவை வளர்ந்ததும் 7 நாட்கள் தொடர்ந்து பசுவும் கன்றுமாக சேர்த்து மேயவிட வேண்டும். இதன் மூலம் மனையின் குறைகள் நீங்கும்.

அதேபோல், மனையின் தன்மையை அறிந்து ஏற்புடைய மனைகளை மட்டுமே வாங்க வேண்டும். மனையில் திகழும் மண்ணின் நிறம் மஞ்சள், சிவப்பு, வெளுப்பு, கறுப்பு எனில் அந்த மனை சிறப்பானது.

வடிவமானது தெற்கு, மேற்குப் பகுதிகள் உயரமாகவும், கிழக்கு மற்றும் வடக்கு தாழ்வாகவும் அமைவது சிறப்பு. திசை கோணலாக இல்லாமலும், நீள்சதுரமாகவும், சம அளவு உடையதாகவும் உள்ள நிலம் அனைவருக்கும் ஏற்றதாகும்.