Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

மார்ச் 9 முதல் 22-ம் தேதி வரை

ராசிபலன்கள்

மார்ச் 9 முதல் 22-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள்

மேஷம்

சூரியன் 13 - ம் தேதிவரை லாப வீட்டில் நிற்பதால் வர வேண்டிய பணம் வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். 14 - ம் தேதி முதல் ராசிக்கு 12 - ல் மறைவதால் வீண் அலைச்சல், செலவு வந்து போகும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பயணங்கள் வரும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். சிலர் வீடு, மனை வாங்குவார்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமாகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் உதவி கிட்டும். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்குவீர்கள். கலைத்துறையினரைப் புதிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது!

ரிஷபம்

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் திறமை அதிகரிக்கும். பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். நின்றுபோன வீடு கட்டும்் பணியைத் தொடர்வீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும்.

7-ல் கேது தொடர்வதால் வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள் வந்துபோகும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றியுண்டு. பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பணவரவு தேவையான அளவு இருக்கும். பிள்ளைகளின் முயற்சிகளுக்குத் தோள் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும் காலம் இது!

மிதுனம்

13-ம் தேதிவரை சூரியன் 9-ல் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும், தந்தைக்கு மூச்சுத் திணறல் வந்து செல்லும். 14-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் நுழைவதால் பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால் நின்றுபோன கட்டட வேலைகளை இனி முடிப்பீர்கள். தந்தையாருடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும்.

புது நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கேது 6-ல் தொடர்வதால் பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் நேரம் இது!

கடகம்

சூரியன் சாதகமாக இல்லாததால் அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். தந்தையுடன் மனக்கசப்பு வந்து செல்லும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும்.

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். கணவன் -மனைவிக்குள் கசப்பு உணர்வு நீங்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தலைவலி, இடுப்புவலி நீங்கும். சகோதர, சகோதரிகளால் நன்மை கிட்டும்.

புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. கேது 5 - ல் நிற்பதால் பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயலுங்கள்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் காலம் இது!

சிம்மம்

14-ந் தேதி முதல் சூரியன் குருவின் வீட்டில் பயணம் செய்வதால் அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

தாயாரின் உடல் நலம் சீராகும். சுக்கிரன் ஓரளவு சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். வீட்டில் கல்யாணம் ஏற்பாடாகும். வெளிவட்டாராத்தில் மதிக்கப்படுவீர்கள்.

புதன் ராசியைப் பார்ப்பதால் உறவினர்கள், நண்பர்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். கேது 4 - ல் தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தாய் வழி உறவினர்களிடம் மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட் களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருக்க வேண்டியது அவசியம்.

சகிப்புத் தன்மையால் சாதிக்க வேண்டிய நேரம் இது!

கன்னி

13 - ம் தேதிவரை சூரியன் 6-ல் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

14-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால் வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு உடல்நலப் பிரச்னைகள் வந்து போகும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, டென்ஷன் வந்து போகும்.

18 - ம் தேதி முதல் சுக்கிரன் 7 - ல் ராசியைப் பார்ப்பதால் பணப்பற்றாக்குறை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலம் உண்டு. 3 -ம் வீட்டில் கேது நிற்பதால் தொட்டது துலங்கும். உங்களின் வேலையை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

மனோபலத்தால் வெற்றி பெறும் தருணம் இது!

துலாம்

13-ம் தேதிவரை 5-ல் அமர்ந்து பிரச்னைகள், மன இறுக்கங்கள், தூக்கமின்மை ஆகியவற்றை சூரியன் தந்தாலும் 14-ந் தேதி முதல் 6-ல் அமர்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.

18 - ம் தேதி முதல் சுக்கிரன் 6 - ல் மறைவதால் குடும்பத்தில் குழப்பங்கள் நிலவும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகமாகும். ஆனால் புதன் சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கேது 2-ல் நிற்பதால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கலைத்துறையினர் வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவார்கள்.

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது!

விருச்சிகம்

13-ம் தேதிவரை 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. 14-ம் தேதி முதல் 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் உடல் நிலை யில் அக்கறை அவசியம். கர்ப்பிணிகள் பயணங்களில் கவனம் தேவை.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள்ளிருந்த பனிப்போர் மறையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்வார்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். கேது ராசிக்குள் நிற்பதால் முன்கோபம் அதிகமாகும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் திறமைகளை அறிந்து கொள்வார்கள். கலைத்துறையினரின் புகழ், கௌரவம் உயரும்.

சவால்களில் வெற்றிகள் சூழும் காலம் இது!

தனுசு

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைச் செய்வார்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் வரும். சொந்த பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கேது 12 -ல் தொடர்வதால் தூக்கமின்மை, அலைச்சல்கள், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் பதவி உயரும். சம்பளம் கூடும். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவார்கள்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் தருணம் இது!

மகரம்

2-ல் அமர்ந்து கோபமாகப் பேச வைப்பதுடன், சேமிப்புகளையும் கரைத்துக் கொண்டிருக்கும் சூரியன், 14-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும்.

வழக்கில் வெற்றி உண்டு. உடல் நலம் சீராகும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அரசாங்க வேலைகளிலிருந்த இழுபறி நிலை மாறும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் பிரச்னைகளை எளிதில் தீர்ப்பீர்கள். பால்ய நண்பர்களின் சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். லாப வீட்டில் கேது நிற்பதால் கடனை அடைக்கும் அளவிற்குப் பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத் துறையினரின் கலைத்திறன் வளரும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரம் இது!

கும்பம்

சூரியன் 14-ம் தேதி முதல் ராசியை விட்டு விலகுவதால் நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். சுக்கிரன் சாதகமாக நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பண உதவியுண்டு.

கேது 10-ல் தொடர்வதால் மன உளைச்சல், ஏமாற்றம் வரக்கூடும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுங்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு வேண்டாம்.

புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யுங்கள். பங்குதாரர்களிடையே சலசலப்பு வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். கலைத் துறையினரின் படைப்புகளுக்குச் சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

தடைகளை உடைத்து வெற்றிபெறும் காலம் இது!

மீனம்

12-ல் மறைந்திருக்கும் சூரியன் 14-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் கடன் பிரச்னை, கண் வலி, கனவுத் தொல்லை வந்து செல்லும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். கணவன் -மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

கேது 9-ல் நிற்பதால் தந்தை வழி உறவினர்களுடன் கொஞ்சம் சலசலப்புகள் வந்து போகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களை உதாசினப்படுத்த வேண்டாம். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெரிவார்கள்.

எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றிப்படிக்கட்டில் கால் பதிக்கும் நேரம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism