புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

ராசி பலன்!

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.பி.வித்யாதரன்

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணிப்பில் டிசம்பர் 13 முதல் 27-ம் தேதி வரையிலான பலன்கள்

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணிப்பில் டிசம்பர் 13 முதல் 27-ம் தேதி வரையிலும் 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்

ராசி பலன்!
ராசி பலன்!

மேஷம்: புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய வண்டியைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான பேச்சுக்கும், சிரிப்புக்கும் குறைவிருக்காது. வீட்டிற்கு அத்தியாவசியத் தேவையான நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் வாங்குவீர்கள். 16-ம் தேதி முதல் சூரியன் 9-ல் அமர்வதால் தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். அனைத்திலும் கவனம் அவசியம். சாலையை கடக்கும் போது நிதானம் தேவை.

ராகு ராசிக்குள்ளேயும், கேது 7-ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் ஆரோக் கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் கடையைப் பெரிதுபடுத்தும் விஷயத்தைப் பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத் தில் இதுவரையில் இருந்து வந்த பயம், படபடப்பு விலகிக் கொஞ்சம் தைரியமாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புது சலுகைகள் கிடைக்கும்.

எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெறும் காலம் இது.

ராசி பலன்!

ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் சாதகமாகப் பயணம் செய்வதால் சந்தோஷமான சுபச் செய்திகளை அடுத்தடுத்து கேட்பீர்கள். மகளின் திருமண விஷயம் விறுவிறுப்பாக நடக்கும். புதனும் வலுவாக இருப்பதால் தாய் வழி உறவுகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். 16-ம் தேதி முதல் சூரியன் 8-ல் நுழைவதால், பெற்றோர்களின் உடல்நலத்தில் அக்கறை தேவை. பால்ய சிநேகிதர்களுடன் உரசல் போக்கு வந்து பிரிய நேரிடும்.

ராசியிலேயே செவ்வாய் வக்ரமாகி சஞ்சரிப்பதால் முன்கோபத்தால் வீட்டில் உள்ளவர்களிடம் எரிச்சலாகப் பேசுவீர்கள். உடல் உஷ்ணத்தை குறைக்க மோர், இளநீர் போன்ற குளிர்ச்சியான உணவை அவ்வப்போது சாப்பிடுங்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். திடீர் லாபம் வரும். உத்தி யோகத்தில் நிலுவை தொகை, அப்ரைசல் போன்றவை மூலம் வர வேண்டிய எல்லா தொகையும் வந்து சேரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் நேரம் இது.

ராசி பலன்!

மிதுனம்: சுக்கிரனும் ராசிநாதன் புதனும் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் எல்லாம் சீக்கிரமாக நடக்கும். குடும்பத்திலும் சந்தோஷம் இருக்கும். ராகு சாதகமாக இருப்பதால் சின்னச் சின்னதாய் தொகை வரும்; சேமித்து வைப்பீர்கள். 16-ம் தேதி முதல் சூரியன் 7-ல் நுழைவதால், வாழ்க்கைத் துணைவருக்கு அறுவை சிகிச்சை, சகோதரப் பகை வரக்கூடும். சின்னச் சின்னப் பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம்; பொறுமையுடன் கையாள வேண்டும்.

செவ்வாய் 12 - ல் இருப்பதால் பழைய இடத்தை விற்றுக் கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் இருந்து வந்த சகல பிரச்னைகளும் விலகும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் சாமர்த்தியமாக ஜெயித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் காலம் இது.

ராசி பலன்!

கடகம்: குருபகவான் பலமாக இருப்பதால் பணவரவு அதிகமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். நீங்களும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் சரியாகும். புதனும் சுக்கிரனும் மறைவதால் வண்டி, வாகனத்தை கவனமாகப் பயன்படுத்துங்கள். இரவு நேரப் பயணத்தை தவிர்த்து விடுங்கள். செவ்வாய் பலமாக இருப்பதால் எல்லா வகையிலும் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஆனால் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும்.

சூரியன் 16-ம் தேதி முதல் 6-ல் நுழைவதால் பழைய பிரச்னைகளிலிருந்து மீள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். வியாபாரத்தில் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் வேலையாட்களைச் சேர்க்க வேண்டாம். உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் அதற்குரிய பாராட்டுகள் இருக்கும். கலைத்துறையினர் விமர்சனம், வதந்திகளிலிருந்து விடுபடுவார்கள்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் தருணம் இது.

ராசி பலன்!

சிம்மம்: சுக்கிரனும் புதனும் சாதகமாகப் பயணம் செய்வதால் செல்வம், செல்வாக்கு அதிகமாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து வேலையை முடித்துவிடுவீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவல், பேங்க் லோன் எல்லாம் உடனே கிடைக்கும். செவ்வாய் பலமாக இருப்பதால், சொந்தபந்தங்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பெரிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களைத் தேடி வரும்.

சூரியன் 16 - ம் தேதி முதல் 5-ல் அமர்வதால், பிள்ளைகளுக்கு அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று வழிகாட்டுவது நல்லது. கர்ப்பிணிகள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்கவேண்டாம். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்ததைவிட கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தி யோகத்தில் புது வேலை கிடைக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் காலம் இது.

ராசி பலன்!

கன்னி: சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் விரயச் செலவைக் கட்டுப்படுத்துவீர்கள். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய பணம் வந்து சேரும். புது வேலை கிடைக்கும். செவ்வாய் 9 - ம் இடத்தில் இருப்பதால் தந்தையாருடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தந்தை வழிச் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விஷயத்தில் நிதானம் அவசியம். சகோதரர்களால் செலவுகள் இருக்கும்.

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகையெல்லாம் கைக்கு வரும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விறுவிறுப்பாக விற்பனையாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரியின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் காலம் இது.

ராசி பலன்!

துலாம்: சுக்கிரன் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வம், செல்வாக்கு அதிகமாகும். சபையில் மதிக்கப்படுவீர்கள். சூரியன் 16-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால், இழுபறி நிலை மாறும். பேச்சில் நிதானம் வரும். அரசால் ஆதாயம் உண்டு. அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். சிலருக்குக் கௌரவப் பதவிகள் தேடி வரும்.

ராசியில் கேது மற்றும் எட்டாம் இடத்தில் செவ்வாய் வக்ரமாகி இருப்பதால், கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து போகும். கண் பார்வையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில், முன்பை விட இப்போது அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில், இதுவரையிலும் இருந்து வந்த சின்னச் சின்னத் தொந்தரவுகள் விலகும். கலைத்துறையினரைப் பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்

பலவீனங்களைச் சரிசெய்து கொண்டு முன்னேறும் காலம் இது.

ராசி பலன்!

விருச்சிகம் புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகமாகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வரும். சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ராசிக்கு 7-ல் ராசிநாதன் செவ்வாய் வக்ரமாகியிருப்பதால், உணர்ச்சிவயப்படாமல், அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது அவசியம்.

16-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால் அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சக ஊழியர்களுக்கு மத்தியில் உங்களுக்கு முன்னுரிமையும், மதிப்பும் கிடைக்கும். கலைத்துறையினர் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பார்கள்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் காலம் இது.

ராசி பலன்!

தனுசு: சூரியன் 16-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். ஆகவே தந்தையின் உடல் நலம் சீராகும். அதேநேரம் உங்களுக்கு முன்கோபம், வீண் டென்ஷன், காரிய தாமதம் ஏற்பட்டு நீங்கும். சகல விஷயங்களையும் பொறுமையுடன் அணுகுங்கள். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பணவரவு நிச்சயமாக உண்டு. அதற்கேற்ப செலவுகளும் வந்துகொண்டேயிருக்கும். என்றாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள்.

செவ்வாய் பலமாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வியாபாரம் அருமையாக இருக்கும். ஒருபக்கம் போட்டி, பொறாமைகள் இருந்தாலும்கூட சாமர்த்தியமாக ஜெயித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினருக்குப் புதுபட வாய்ப்புகள் தேடி வரும்.

காலம் கனிந்து கனவுகள் மெய்ப்படும் நேரம் இது.

ராசி பலன்!

மகரம் :சுக்கிரனும் புதனும் சாதகமாக நிற்பதால் வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் உடனடியாக முடியும். அரசியலில் இருப்போர், அதிகாரப்பதவியில் இருப்போர் மூலம் உங்க ளுடைய காரியங்களை எளிதாக முடித்துக்கொள்வீர்கள். செவ்வாய் 5-ல் வக்ரமாகி இருப்பதால், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளுடன் ஈகோ பிரச்னைகள் வந்துபோகும் என்பதால், அவர்களை அனுசரித்துப்போக வேண்டும்.

சூரியன் 16-ம் தேதி முதல் 12-ல் மறைவதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள், டென்ஷன் வந்து போகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரம் அமோகமாக இருக்கும். திடீர் லாபம் வரும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்; செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருங்க வேண்டியது அவசியம்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசி பலன்!

கும்பம்: சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களை எதிர்த்தவர்களும் நண்பர்கள் ஆவார்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். குடும்பத் தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புது ரக வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் திடீரென்று கூடி வரும். உங்களுடைய ரசனைக்கு ஏற்ப வீடு, மனை அமைவதற்கு வாய்ப்பிருக்கிறது.

4-ல் செவ்வாய் நிற்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் முன்அனுபவமிக்க வேலையாட்கள்களைப் பணிக்குச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் தருணம் இது.

ராசி பலன்!

மீனம்: சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எல்லா வகையிலும் சாதித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 16 - ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், சிலருக்குப் புது வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் சில விஷயங்களை உடனே முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.

செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புது முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றியடைவீர்கள். ராசியிலேயே இருக்கும் குரு பகவானால் திடீரென்று சோர்வு வந்து போகும். என்றாலும் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வியாபாரம் சாதகமாக இருக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எங்கும் எதிலும் பொறுமை காக்க வேண்டிய காலம் இது.