திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்கள்

ஜூன் 1 முதல் 14-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம்:

லாப வீட்டில் குரு பலமாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்களில் இனி வெற்றி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.

சூரியனும் ராகுவும் 2-ல் நிற்பதால் பேச்சில் தடுமாற்றம், கண், காது வலி வந்து போகும். பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளைக் கற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். கலைத் துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்கும் நேரம் இது.

ராசி பலன்கள்

ரிஷபம்:

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி பல காரியங்களைச் சாதிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிட்டும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

ராசிக்குள் ராகு, சூரியன் நிற்பதால் முன்கோபம் வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குரு 10-ல் அமர்ந்திருப்பதால் உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்த படைப்புகள் கைகொடுக்கும்.

வளைந்து கொடுத்து நிமிரவேண்டிய காலம் இது.

ராசி பலன்கள்

மிதுனம்:

குரு 9-ல் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். அரசுக் காரியங்களில் தேக்க நிலை மாறும். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரனும் புதனும் வலுவாக இருப்பதால் சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணபலம் உயரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

சூரியன், ராகு ஆகிய கிரகங்கள் 12-ல் மறைந்திருப்பதால் மன இறுக்கம், வீண் டென்ஷன் வந்து போகும். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

சாமர்த்திய செயல்பாடுகளால் வெற்றி பெறும் நேரம் இது!

ராசி பலன்கள்

கடகம்:

லாப வீட்டில் இருக்கும் கிரகங்கள் சாதகமாக இருப்பதால் பதவி, பொறுப்புகள் தேடி வரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

புதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களால் ஆதாயம் ஏற்படலாம். சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லை குறையும். 8-ல் குரு நிற்பதால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப் படும். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

வெளிவட்டாரத்தில் அனைவராலும் மதிக்கப்படும் காலம் இது.

ராசி பலன்கள்

சிம்மம்:

குரு 7-ம் வீட்டில் சாதகமாக அமைந்திருப்பதால், சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். எதிர்காலத்திற்காக முக்கிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் செயலில் வேகம் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

புதன் சாதகமாக இருப்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ராசி நாதன் சூரியன் 10-ல் கேந்திர பலம் பெற்று நிற்பதால், அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரர்களிடம் கவனம் தேவை. உத்தியோகத்தில் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும்.

இங்கிதமான பேச்சால் சாதிக்க வேண்டிய நேரம் இது.

ராசி பலன்கள்

கன்னி:

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சூரியனும் ராகுவும் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தைக்கு வீண் டென்ஷன், மருத்துவச் செலவுகள் வந்துபோகும். 6-ல் குரு நிற்பதால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் ஆதாயமடைவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் காலம் இது.

ராசி பலன்கள்

துலாம்:

குரு 5-ல் வலுவாக இருப்பதால், குழந்தை பாக்கியம் இல்லாதவர் களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். 8-ல் சூரியன் நிற்பதால் வி.ஐ.பிகளின் நட்பை இழக்க நேரிடும். திட்டமிடாத செலவுகளைப் போராடிச் சமாளிப்பீர்கள். பணம் வாங்கித் தரும் விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம்.

புதனும் சுக்கிரனும் ஓரளவு சாதகமாக இருப்பதால், அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

சகிப்புத்தன்மையால் முன்னேற வேண்டிய தருணம் இது.

ராசி பலன்கள்

விருச்சிகம்:

சனி பகவான் 3 - ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். 4-ல் குரு நிற்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பால்ய நண்பர் களால் தொல்லை ஏற்படும். 7-ல் ராகுவும், சூரியனும் இருப்பதால் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கும். மனைவியுடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். நெளிவு-சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் நேரம் இது.

ராசி பலன்கள்

தனுசு:

ராகுவும் சூரியனும் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை அறிவீர்கள். வெளி நாட்டில் இருப்பவர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். 3 -ல் நிற்கும் குரு, சிறு சிறு தடைகளைத் தந்தாலும் புதிய பாதையில் பயணிக்க வைப்பார்.

பாதச்சனி தொடர்வதால் வீண் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். கை, கால், மூட்டு, முதுகு வலி வந்துபோகும். புதன் 6 - ல் மறைவதால் வேலைச்சுமை, வீண் டென்ஷன், நரம்புச் சுளுக்கு வந்து செல்லும். உறவினர், நண்பர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிகாட்டினால் ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.

துணிவாகச் செயல்பட்டு முன்னேற வேண்டிய நேரம் இது.

ராசி பலன்கள்

மகரம்:

சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். 2-ல் குரு நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் அலைச்சல், அடுக்கடுக்காக செலவுகள் இருந்து கொண்டிருக்கும். வாழ்க்கைத் துணையைக் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மேலதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

காரியங்களில் இழுபறியான நிலை மாறி, ஏற்றம் பெறும் காலம் இது.

ராசி பலன்கள்

கும்பம்:

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய எண்ணங்கள் தோன்றும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிரபலங்களின் உதவியுடன் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும்.

ஜன்ம குருவால் சின்னச் சின்ன ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படலாம். சூரியன் 4 - ல் ராகுவுடன் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். கடையை விரிவுபடுத்துவது சம்பந்தமாக நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையும், ஒருவித மனப்போராட்டமும் வந்து செல்லும். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் தருணம் இது.

ராசி பலன்கள்

மீனம்:

சூரியன் 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் தடை இல்லாமல் நிறைவேறும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். நல்ல வேலை, கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிலும் ஈடுபாடு வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால், நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். குரு 12-ல் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன் வந்துபோகும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் நற்பெயர் எடுக்கக் கொஞ்சம் போராட வேண்டி வரும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவார்கள்.

சவால்களில் வெற்றி பெறும் காலம் இது.