ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ராசிபலன் - நவம்பர் 15 முதல் 28 - ம் தேதி வரை

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஞோதிடரத்னா கே.பி. வித்யாதரன்

மேஷம்
மேஷம்

புதனும், சுக்கிரனும் ஓரளவு சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சூரியன் 8-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும்.

அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். அலைபேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கவேண்டாம். ராசிநாதன் வலுவாக இருப்பதால் கை, கால் மற்றும் மூட்டு வலி விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்களை வெல்ல அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

புத்துணர்ச்சி பெருகும் காலம் இது.

ரிஷபம்
ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் வலுவாக நிற்பதால், பிள்ளைகளின் தனித் திறமை களைக் கண்டறிவீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தள்ளிப் போன திருமணம் கூடிவரும். புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் சுகாதிபதி சூரியன் 17-ம் தேதி முதல் 7-ல் நுழைவதால் புத்துணர்ச்சி ததும்பும். மனைவிவழியில் உதவியுண்டு. பழைய கடனை அடைக்கப் புது வழி பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

வீடு கட்டுவது, வாங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் தடைப் பட்ட வேலைகள் முடிவுக்கு வரும். வியாபார ரீதியாக அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். உத்தியோகத்தில் பணிகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்படுவர்.

யதார்த்தமான அணுகுமுறையால் சாதிக்கும் நேரம் இது.

மிதுனம்
மிதுனம்

சூரியன் 6-ல் வலுவாக அமர்வதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். புது வேலை அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். புதன் 6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமை, தொண்டை புகைச்சல் வந்து செல்லும். சுக்கிரன் 6-ல் நிற்பதால் தலைவலி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் வந்துபோகும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் அவ்வப்போது டென்ஷனால் தலைவலி வந்து போகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தில் சூழச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மனநிறைவுடன் செயல்படும் நேரம் இது.

கடகம்
கடகம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். சில நேரங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். கர்ப்பிணிகளுக்குப் பயணங்களின்போது கவனம் தேவை. அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும்.

யோகாதிபதி செவ்வாய் 12 - ல் நிற்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சகோதர வகையில் செலவீனங்கள் வந்து போகும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றம் உண்டு. கலைத்துறையினரின் சம்பள பாக்கி கைக்கு வரும். புது வாய்ப்புகள் தேடி வரும்.

அலைச்சல் இருந்தாலும் அதற்கான பலனை அடையும் காலம் இது.

சிம்மம்
சிம்மம்

சூரியன் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் கை ஓங்கும். புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்தி தரும். உறவினர் வீட்டுக் கல்யாணத்தைத் திறம்பட எடுத்து நடத்துவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் நல்ல செய்தி வந்து சேரும்; மன மகிழ்ச்சி உண்டு.

11-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங் களை கற்றுத் தெளிவார்கள்.

வெற்றியை நோக்கி நிதானமாக முன்னேறும் நேரம் இது.

கன்னி
கன்னி

சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. ஆட்சியாளர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகத் திரும்பும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கிக் கடன் கிடைக்கும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய பிரச்னைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் குறைகளை சுட்டிக்காட்டுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரின் திறன் வளரும்.

சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது.

துலாம்
துலாம்

ராசிநாதன் சுக்கிரன் வலுவாக அமர்ந்திருப்பதால் நீண்ட நாள்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமை கூடும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். குரு 6-ல் தொடர்வதால் வீண்பழி, பகை வரக்கூடும். செவ்வாய் 9-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் சகோதரர்கள் தக்க நேரத்தில் உதவுவார்கள்.

2-ல் நிற்கும் சூரியனால் உடல் நலம் சீராகும். ஆனால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். அலுவலகத்தைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவார்கள்.

புதிய இலக்கை நோக்கிப் பயணிக்கும் நேரம் இது.

விருச்சிகம்
விருச்சிகம்

ராசிக்குள் சூரியன் நிற்பதால் முன்கோபம், உடல் உஷ்ணத்தால்

அடிவயிற்றில் வலி வந்து செல்லும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். குரு 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அவர்களின் உடல்நிலை சீராகும்.

8-ல் ராசிநாதன் செவ்வாய் நிற்பதால் அலைச்சல், வேலைச்சுமை, சகோதர வகையில் டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

நினைத்திருந்த காரியங்களைச் செயல்படுத்தும் நேரம் இது.

தனுசு
தனுசு

சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன், செலவுகள் வந்து போகும். புதன் சூரியனுடன் சேர்ந்து

12-ல் நிற்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை வந்துபோகும். சுக்கிரனால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசி சாதிப்பீர்கள். உங்களின் செல்வாக்கு கூடும்.

குரு 4-ல் அமர்வதால் ஓரளவு டென்ஷன் குறையும். எதிலும் ஆர்வம் இல்லாத நிலை, தொழிலில் முடக்கம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். சக ஊழியர் களுடன் அளவாகப் பழகுவது நல்லது. கலைத்துறையினரின் படைப்பு களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

எதிர்பார்ப்புகளின்றி உழைக்க வேண்டிய நேரம் இது.

மகரம்
மகரம்

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிதாக வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குருபகவான் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால், புது வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்குப் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

சோர்ந்திருந்த முகம் மலர்ச்சியடையும் நேரம் இது.

கும்பம்
கும்பம்

சூரியன் 10-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். விசா கிடைக்கும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். பள்ளி, கல்லூரிக் கால நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் ஓயும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மேலதிகாரி உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

திறமையால் சாதிக்கும் நேரம் இது.

மீனம்
மீனம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய யோசனை கள் பிறக்கும். பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். குரு ராசிக்குள் நிற்பதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களால் சந்தோஷம் கிட்டும்.

செவ்வாய் வலுவாக நிற்பதால் தைரியமாக எதையும் செய்து முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபார ரகசியங்கள் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். மூத்த அதிகாரி களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.

அனுபவ அறிவால் காரியம் சாதிக்கும் நேரம் இது.