Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மார்ச் 1 முதல் 14 வரை

ராசி பலன்கள்

மார்ச் 1 முதல் 14 வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். நல்ல வேலை அமையும். வருமானம் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவர் உங்கள் பெருமையைப் பற்றி பேசுவார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனார் உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். தொட்டது துலங்கும் நேரமிது.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டும் முயற்சி வெற்றியடையும். வங்கிக் கடன் கிடைக்கும். நாத்தனார், மச்சினருக்குத் தகுந்த நேரத்தில் உதவி செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். அடிப்படை வசதிகள் உயரும் நேரமிது.

மிதுனம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்று, புது வீடு வாங்குவீர்கள். கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உயர் பதவிக்கு உங்களது பெயர் பரிசீலனை செய்யப்படும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். மாமியாரின் மனசு மாறும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வீண் டென்ஷன், வேலைச்சுமை, தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைப் பயன்படுத்திச் சிலர் முன்னேறுவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

கடகம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். பணவரவு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பிரச்னைகள் வெகுவாகக் குறையும். கணவரின் கோபம் தணியும். உங்களின் பெருந்தன்மையை இனிமேல் புரிந்துகொள்வார். சகோதர வகையில் இருந்த மன வருத்தம், வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து விலகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். தடைகள் விலகும் நேரமிது.

சிம்மம்: பொது அறிவுத் திறன் கூடும். பணபலம் உயரும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வேற்றுமதம், மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். மாமியார் அன்பாகப் பேசுவார். நாத்தனாரிடம் மோதல் வேண்டாம். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வீடு, மனை வாங்கும்போது வில்லங்கச் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

கன்னி: எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். புது வீடு கட்டிக் குடி புகுவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவர் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசினாலும் அரவணைத்துப்போவது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உறவினர், தோழிகளில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துகொள்வார்கள். நாத்தனார், கொழுந்தனார் வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் நேரமிது.

துலாம்: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பணவரவு திருப்தி தரும். முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். வீடு, மனை வாங்குவது விற்பது சுமுகமாக முடியும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவர் உங்களின் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளின் முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுங்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். புதிய நட்பால் முன்னேறும் நேரமிது.

விருச்சிகம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சின்னச் சின்ன விவாதங்கள், வீண் சண்டை களையெல்லாம் ஒதுக்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். கணவர் உங்களின் கோரிக்கையை நிறைவேற்று வார். மாமனார், மாமியாருடன் அன்பாகப் பழகுவீர்கள். மனக் குழப்பம், காரியத் தாமதம் ஏற்படும். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாம் என இப்போது நினைப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுப் பொறுப்புகளை ஏற்பீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். நினைத்தது நிறைவேறும் நேரமிது.

தனுசு: தைரியம் கூடும். சில புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்து வீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகத் திரும்பும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த உறவினர், தோழியைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆனால், பல வருடங்கள் நெருக்கமாகப் பழகியவர்கள்கூட குறை கூறுவார்கள். வியாபாரத்தில் உங்களுக்கு உதவுவதற்கு சிலர் முன்வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் திறமைகளை அறிந்துகொள்வார்கள். அதிரடி முடிவுகளால் வெற்றி பெறும் நேரமிது.

மகரம்: தொட்ட காரியம் வெற்றியடையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கணவர் ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். வீண் வாக்குவாதங்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் தேடி வரும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நீண்ட நாள் கனவு நனவாகும் நேரமிது.

கும்பம்: எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். பழைய தோழிகளில் சிலர் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கணவர் உங்களை ஆழம் பார்ப்பார். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். மாமனார், மாமியார் வகையில் தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தாமதமாக வரும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

மீனம்: செயலில் வேகம் கூடும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவு உண்டு. உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அநாவசிய செலவுகள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். கணவர் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டிய நேரமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism