ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

நவம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை

மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் அனைத்தையும் சாதிப்பீர்கள். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வாகனம் வாங்குவீர்கள். கணவரை சந்தேகப்படாதீர்கள். பிள்ளைகள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மாமியார் உதவிகரமாக இருப்பார். வழக்கில் அவசரம் வேண்டாம். நாத்தனார் உங்களை விமர்சிப்பார். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பக்குவமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கண்டுகொள்ளாமல் இருந்த கணவர் கனிவாகப் பேசுவார். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். விரக்தி, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தடுமாற்றம் நீங்கும் நேரமிது.

மிதுனம்: நினைத்தது நிறைவேறும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணவரின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மாமனார், நாத்தனார் உங்களைப் பாராட்டுவார். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். அவ்வப்போது தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த நேரமிது.

கடகம்: இங்கிதமாகப் பேசி வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றிப் புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர், உங்களை நம்பி ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளால் அலைச்சல், பிரச்னைகள் வந்து போகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நேரமிது.

சிம்மம்: சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வீட்டைச் சீரமைப்பீர்கள். கணவரிடம் வாக்குவாதங்கள் வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக் காதீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகும். மாமனார், மாமியார் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்குத் தொல்லை தந்தவர்கள் இடம் மாறுவார்கள். வேலைச்சுமை குறையும். சோதனையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியும் நேரமிது.

கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். கணவர் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். பிள்ளைகளிடம் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் நேரமிது.

துலாம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். கணவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். முன்கோபம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய நேரமிது.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மன வலிமை கிட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சொத்து வாங்குவீர்கள். கணவருடன் இருந்த மோதல் போக்கு மாறும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். உறவினர்களால் அன்புத் தொல்லை வந்து போகும். திடீர்ப் பயணங்கள் உண்டு. அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். இடமாற்றம் உண்டு. துணிச்சலான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

தனுசு: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகத் திரும்பும். நல்ல வேலை அமையும். கணவரின் வருமானம் உயரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். புகழ், கௌரவம் உயரும். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் நேரமிது.

மகரம்: உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவர், உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்த கூடா நட்பு விலகும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர்களைச் சந்திப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். மாமியார், மாமனார் புகழும்படி நடந்துகொள்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெற்றிப்பாதை தெரியும் நேரமிது.

கும்பம்: நிர்வாகத் திறன் கூடும். புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். கணவரின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுரியமாகச் சரி செய்வீர்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். மாமியார் உங்களுக்கு உதவுவார். மச்சினருக்குத் திருமணம் நிச்சயமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கையால் தலைநிமிரும் நேரமிது.

மீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். தோழிகள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். நிதானத்தால் வெற்றி பெறும் நேரமிது.