ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

நவம்பர் 8 முதல் 21 வரை

மேஷம்: பேச்சில் கம்பீரம் கூடும். மன இறுக்கம் நீங்கும். கணவர், உங்களின் ஆலோசனைகளையும், புதிய திட்டங்களையும் ஆதரிப்பார். பழைய கடனில் ஒரு பகுதி அடையும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். பள்ளி - கல்லூரி காலத் தோழியின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ரிஷபம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. மாமனார், மாமியார் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார்கள். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும். மற்றவர்களின் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். நியாயம் பேசப்போய் பெயர் கெடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் நேரமிது.

மிதுனம்: தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். கணவர், அவ்வப்போது அலுத்துக்கொண்டாலும் சுறுசுறுப்பாக வேலைகளை முடிப்பார். வழக்கில் திருப்பம் ஏற்படும். நாத்தனார், மச்சினர் வலிய வந்து உதவுவார்கள். பல வருடங்களாக நெருங்கிப் பழகியவர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். பழைய சிக்கல்களுக்கு புதிய தீர்வு காணும் நேரமிது.

கடகம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பணவரவு இருந்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும். கணவர், கொஞ்சம் புலம்புவார். உங்களிடம் பழகும் தோழிகள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் வந்து போகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர, புதுச் சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சமயோஜித புத்தியும் பொறுமையும் தேவைப்படும் நேரமிது.

சிம்மம்: பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவருக்குப் புது ஆலோசனைகள் தருவீர்கள். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணம் கூடி வரும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். மாமனார், மாமியார் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்களால் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

கன்னி: உங்களின் பிடிவாதப்போக்கை மாற்றிக்கொள்வீர்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். கணவர், உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளின் இசை, ஓவிய, விளையாட்டுத்திறனை வளர்க்கப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். உறவினர், தோழிகள் முக்கியத்துவம் தருவார்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்துகொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அலுப்பு, சலிப்பைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

துலாம்: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சகோதரர்கள் ஒத்துழைப்பார்கள். கடன் பிரச்னைகளை இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். மாமனார், நாத்தனார் வகையில் மகிழ்ச்சி தங்கும். அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். படபடப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

விருச்சிகம்: புகழ், கௌரவம் கூடும். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீடு மாறுவது, கட்டுவது சாதகமாக அமையும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவர், உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்டமாட்டார். பிள்ளைகளின் அடி மனதில் இருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், தோழிகளைச் சந்திப்பீர்கள். பழுதான வீட்டு உபயோகப் பொருள்களை மாற்றுவீர்கள். நாத்தனாரால் பிரச்னை வந்து விலகும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிடுதலால் வெற்றியடையும் நேரமிது.

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். பணபலம் உயரும். பழைய கடன் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரின் புது முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கு சாதகமாகும். பூர்வீகச் சொத்தால் ஆதாயமடைவீர்கள். மாமியார், நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திடீர்ப் பயணங்கள் அமையும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும். உத்தியோகத்தில் உயர்பதவியில் அமர்வீர்கள். பலரால் பாராட்டப்படுவீர்கள். வருமானம் உயரும் நேரமிது.

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர, கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். கணவர் அவ்வப்போது அலுத்துக்கொள்வார். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. ஓரளவு பணம் வரும். ஆனால், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். மாமனார், மாமியார் குறைப்பட்டுக்கொள்வார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உத்தியோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். வாக்குறுதிகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

கும்பம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டைச் சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரின் சந்தேகத்தைத் தீர்ப்பீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழிகளைச் சந்திப்பீர்கள். மாமியார், நாத்தனார் உதவுவார். ஒரு சொத்தை விற்றுப் பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க காரியங்கள் சுலபமாக முடியும். வியாபாரத்தில் முட்டுக்கட்டைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். செல்வாக்கு கூடும் நேரமிது.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கல்வியாளர்களின் நட்பால் புகழ் கூடும். கணவர், உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். மகளுக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம் நடந்தேறும். மகனின் கூடா நட்பு விலகும். பாதிப்பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். சக ஊழியர்கள் உதவுவார்கள். திடீர் திருப்பங்கள் உண்டாகும் நேரமிது.