Published:Updated:

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

- ஆஸ்ட்ரோ முரளி

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

- ஆஸ்ட்ரோ முரளி

Published:Updated:
12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

நிகழும் சார்வரி வருடம், பெருந்தொற்று காரணமாக அனைத்துத் தரப்பினருக்கும் பலவிதமான பாதிப்புகளைத் தருவதாக அமைந்துவிட்டது. நேரம், பொருளாதாரம் மற்றும் உறவுகளின் அருமையை எல்லோரும் அறிந்துகொள்வதற்காகவே இயற்கை இப்படியொரு சோதனையைத் தந்தது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், இந்த ஆண்டு மூன்று கிரகப் பெயர்ச்சிகள். அதில் ஒன்றான ராகு - கேது பெயர்ச்சி நடந்துமுடிந்துவிட்டது. இனி குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் நடைபெற வேண்டும். இந்தக் கிரகப்பெயர்ச்சிகளால் நிலைமைகள் மாறும், பாதிப்புகள் மெள்ள மெள்ள நீங்கும், நிறைய நல்ல மாற்றங்கள் நிகழும் என்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.

ஆஸ்ட்ரோ முரளி
ஆஸ்ட்ரோ முரளி

கோசாரப்படி ராகு கேது பெயர்ச்சி சுமாராக இருப்பவர்களுக்குக் குருப்பெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். குருப்பெயர்ச்சி சுமாராக இருந்தால் அவர்களுக்கு சனிப்பெயர்ச்சியின் கிரக நிலைகள் கைகொடுக்கும். தாழ்வென்று வந்தால் அடுத்து உயர்வு ஒன்று காத்திருப்பது இயற்கையின் நியதி அல்லவா. அவ்வகையில் அனைவருக்கும் உரிய பலாபலன்களைத் தரும் விதமாகவே வினைகளை அருள்கின்றன கிரகங்கள். ஆக, இறையருளால் விரைவில் நல்ல சூழல் நம்மைச் சூழட்டும். மனிதர்களுக்கு இரண்டே கஷ்டங்கள். ஒன்று பணக்கஷ்டம் மற்றொன்று மனக்கஷ்டம்.

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

இதில் பணக்கஷ்டம், பெரும்பாலானோருக்கு அவர்களின் பணியோடு தொடர்புடையதாகத் திகழ்கிறது. அவ்வகையில் வரும் காலங்களில் 12 ராசிக் காரர்களுக்கும் புதிய வேலைவாய்ப்பு, இருக்கும் வேலையில் உயர்வு எப்படி, அவர்களுக்கான பரிகாரங்கள் என்ன என்பவை குறித்து அறிந்துகொள்வோம்.

மேஷம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

மேஷ ராசி அன்பர்களுக்கு அடுத்த ஆண்டு சிறப்பாக அமையும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தற்போது ராசிக்கு 2- ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 10-ம் இடத்துக்குச் சனிபகவானும் குருபகவானும் விரைவில் பெயர்ச்சி அடையப்போகிறார்கள். இந்த இடத்தில் சனி ஆட்சி, குரு நீச்சம். அதனால் நீச பங்கமாகிறது. இந்த கிரக அமைப்பு மேஷ ராசியினருக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை, உத்தியோகத்தில் உயர்வை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றத்தோடு உயர்வு ஆகியவற்றைக் கொடுக்கும். உழைப்பிற்கேற்ப உயர்வு நிச்சயம் இருக்கும். பொதுவாகவே மேஷ ராசிக்காரர்கள் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். எனவே வெளிநாடு தொடர்பான வேலையும் தொழிலும் சிறந்து விளங்கும்.

பரிகாரம் : மேஷ ராசி அன்பர்கள் சிவ வழிபாடும் சுப்ரமண்ய வழிபாடும் செய்வது நல்லது. வாய்ப்பு கிடைக்கும்போது, திருவண்ணாமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களுக்குச் சென்று வாருங்கள்.

அடுத்த இரண்டாண்டுகளுக்குள் ஒருமுறை கட்டாயம் ஆலங்குடி சென்று குருபகவானையும் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரையும் சனிபகவானையும் தரிசித்து வருவது நற்பலன்களை அதிகப்படுத்தும்.

திருப்பரங்குன்றத்து முருகனை நினைத்து தினமும் கந்த சஷ்டிக் கவசம் படித்து வருவதன் மூலம் மன உறுதியும் ஆரோக்கியமும் வாய்ப்பதோடு, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே ரிஷப ராசிக்காரர்கள் அளவில்லாத துன்பங்களை அனுபவித்து வந்தார்கள். இப்போது அனைத்தும் படிப்படி யாகக் குறைந்து வளமான எதிர்காலம் அமையும். மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டத்தை இந்த ராசிக்காரர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.

ராசியிலேயே ராகு பகவான் அமர்ந்திருக்கும் காலகட்டம் இது. நேர் எதிரே 7-ல் கேதுபகவான் அமர்ந்திருக்கிறார். ராசிக்கு 10-ம் இடம் கும்ப ராசி. அதன் அதிபதி சனி பகவான். தர்ம கர்மாதிபதியாகிய இவர் 9-ம் இடத்துக்கு வர இருக்கிறார். அதே ராசியில் (மகரம்) குருபகவானும் நீசபங்கமாகிறார். இதுவரை உத்தியோகத்தில் இருந்த தேக்கநிலைமாறி நல்ல நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும், இருக்கும் வேலையில் பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது, நல்ல பங்குதாரர்கள் சேர்வது என்று அனைத்துவிதத்திலும் நல்ல பலன்களே ஏற்படும்.

பரிகாரம் : திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்துக்கு ஒருமுறை சென்றுவருவது நல்லது. அதேபோன்று தென்குடித்திட்டை சென்று குருபகவானை தரிசனம் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும். நேரம் வாய்க்கும்போது இவர்களுக்கான வசீகரத் தலங்களான, திருவாரூர், திருக்கடவூர், விழுப்புரம் அருகேயுள்ள திருநாவலூர் ஆகியவற்றுக்குச் சென்று வருவதால், விசேஷ பலன்கள் கிடைக்கும்.

நாள்தோறும் திருவாரூர் தியாகேசரை நினைத்து, வீட்டில் விளக்கேற்றி சிவபுராணம் பாடிவர, வாழ்வில் புகழும் செல்வமும் சேரும்!

மிதுனம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

பொதுவாகவே மிதுன ராசிக்காரர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அடிக்கடி வேலைகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதன்மூலம் அவர்கள் இதுவரை நல்ல நிலையையே அடைந்திருப்பார்கள். தற்போது அவர்களுக்கு ராகு 12-ம் இடத்திலும் கேது 6-ல் உச்சம் பெற்றும் அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த வருகிற பெயர்ச்சிகளில் சனியும் குருவும் 8-ம் இடத்துக்கு வந்து அமர இருக்கிறார்கள்.

மிதுன ராசிக்குச் சனி பகவான் யோகாதிபதி. எனவே 8-ல் இருந்தாலும் பெரிய தீமைகளைச் செய்யமாட்டார். எனினும் 10-க்கு உடையவன் 8-ம் இடம் சென்று பங்கமாவதால், இந்தக் காலகட்டத்தில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம். இருக்கும் இடத்தில் பிரச்னை இருக்காது என்பதால் அங்கேயே தொடரலாம். பொதுவாக அஷ்டமத்துக் குரு மற்றும் அஷ்டமச் சனி என்றால் பயப்படுவார்கள். ஆனால் இருவரின் பார்வை படும் இடங்களும் நல்லமுறையில் அமைவதால் மிதுன ராசிக் காரர்கள் பயப்படத் தேவையில்லை.

பரிகாரம் : தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்வதும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதும் நல்ல பலன்களைத் தரும். மிதுன ராசிக் காரர்களுக்கு உரிய வசீகரத் தலங்கள்: திருப்பதி, பழநி, சுவாமி மலை. வாய்ப்புக் கிடைக்கும்போது இந்த தலங்களுக்குச் சென்றுவாருங்கள். நாள்தோறும் வேல்மாறல் பாராயணம் செய்துவாருங்கள். அதன் பலனால் மகிழ்ச்சி நிறைந்ததாக இந்தக் காலகட்டம் அமையும்.

கடகம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

இந்த ஆண்டு சாதகமான பலன்களைப் பெறும் ராசிகளில் ஒன்று கடக ராசி. இவர்களுக்கு 11 - ல் ராகு, 5 - ல் கேது அமர்ந்திருக்கிறார்கள். 7-ல் சனியும் குருவும் அமர இருக்கிறார்கள். இது மிகவும் நல்ல அமைப்பு. கிரக நிலைகளின் படி இந்த ராசிக்காரகளுக்கு உத்தியோக அமைப்பு மிக ஸ்திரமாகக் காணப்படுகிறது. வேலையில் இருந்த நெருக்கடிகள் மறைந்து நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம் இது.

புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். கூடவே, கல்யாணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண வாய்ப்பு தேடிவரும். இதுவரை தொழிலில் சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இனி தொழிலில் வெற்றி உண்டாகும்; நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.

பரிகாரம் : 5-ல் கேது அமர்ந்திருப்பதால் விநாயகர் வழிபாடும் சித்ரகுப்த வழிபாடும் செய்வது சிறப்புடையதாகும். இவர்களுக்கான வசீகரத் தலங்கள்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கதிராமங்கலம் வனதுர்கை அம்மன் கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வாருங்கள்; நன்மை உண்டாகும்.

வெள்ளி, செவ்வாய் ஆகிய தினங்களில் அம்பிகையை நினைத்து, வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வதும், அதைக் கேட்பதும் நல்ல பலன்களைக் கொடுக்கும். ஏழைப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்வது, மிகச்சிறந்த பரிகாரமாக விளங்கும்.

சிம்மம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

சிம்ம ராசிக்காரர்கள் தங்களுக்கென்று தனித்துவமான சிந்தனையும் கொள்கையும் உடையவர்கள். `வெற்றிபெறுவதற்காகவே பிறந்தவர்கள் தாங்கள்’ எனும் நம்பிக்கை கொண்டவர்கள். தீர்மானித்த இலக்கை எப்பாடுபட்டேனும் அடைபவர்கள். இவர்களுக்குத் தற்போது ராகு 11-ம் இடத்திலும் கேது 4-ம் இடத்திலும் அமர்ந்திருக்க, சனி, குரு ஆகியோர் 6-ம் இடத்தில் அமர இருக்கிறார்கள். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

6-ம் இடத்தில் அமர இருக்கும் சனிபகவான் நல்ல சுறுசுறுப்பையும் செயல் வேகத்தையும் கொடுப்பார். என்றாலும் 4-ல் கேது இருப்பதால் பணிச் சுமைகளால் உடல்நிலை பாதிப்பு அடையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். குருபகவான் 6-ம் இடத்தில் நீசபங்கம் அடைந்திருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. சகபணியாளர்களிடையே விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் உத்தியோகத்தில் விரைவான முன்னேற்றத்தைக் காணலாம்.

பரிகாரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புலிவனம் சென்று வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தை தரிசனம் செய்வது விசேஷம். சிம்ம ராசிக் காரர்களுக்கான வசீகரத் தலங்கள்: சிதம்பரம், ஸ்ரீவாஞ்சியம், அய்யாவாடி. நேரம் வாய்க்கும்போது இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். சதுர்த்தி விரதமும் விநாயகர் அகவல் பாராயணமும் உங்களுடைய துன்பங்களை நீக்கி இன்பம் அளிக்கும்.

கன்னி

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

உழைப்பையும் புத்திசாலித்தனத்தையுமே தங்களின் முதலீடாகக் கொண்டு இயங்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு, தற்போது ராகு 9-ம் இடத்திலும் கேது 3-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தந்து கொண்டிருக் கிறார்கள். சனியும் குருவும் 5-ம் இடத்தில் அமர இருக்கிறார்கள். இது மிகவும் நல்ல அமைப்பு. `5- ல் குரு கெஞ்சினாலும் கிடைக்காது’ என்பார்கள். இதுநாள் வரை இந்த ராசிக்காரர்களில் சிலர், வேலை இல்லாமல் திண்டாடியிருப்பார்கள்.

அதேபோல், பார்க்கும் வேலையில் நிம்மதியின்மை, வேலையையே விட்டுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு பிரச்னை, சம்பளப் பாக்கி ஆகிய சங்கடங்கள் இருந்திருக்கும்.அவை அனைத்தும் மாறும் காலம் இது. பார்க்கும் வேலை ஸ்திரப்படும். எதிர்பாராத பதவி உயர்வு ஏற்படும். பொருளாதாரத்தில் பின்னடைவுகள் எல்லாம் நீங்கும். 3-ல் திகழும் கேது, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை அளிப்பார். அதனால் விரைந்து முன்னேறும் வாய்ப்புகள் உண்டாகும்.

பரிகாரம் : கன்னி ராசிக்காரர்கள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள குரு ஸ்தலத்துக்குச் சென்று தரிசனம் செய்வது நல்ல பலனைக்கொடுக்கும். சென்னை பாடியிலிருக்கும். திருவலிதாயம் சென்று ஈசனை வழிபடுவது சிறப்பு. கன்னி ராசிக்குரிய வசீகரத் தலங்கள்: திருக்கழுகுன்றம், கன்னியாகுமரி. இந்த ஊர்களுக்குச் சென்று வழிபடலாம். இவர்கள், ஸ்ரீசாயிபாபா, ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்களை வழிபடுவதன் மூலம் குருவருளும் திருவருளும் வாய்க்கும். சஷ்டி அன்று கந்த குரு கவசம் படித்து முருகப் பெருமானை வணங்க, நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

துலாம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

இந்த ராசிக்காரர்களுக்குத் தற்போது 2-ல் கேது; 8-ல் ராகு அமர்ந்து பலன் தருகிறார்கள். விரைவில் 4-ம் இடத்துக்கு சனியும் குருவும் பெயர இருக்கிறார்கள். அர்த்தாஷ்டமச் சனி என்று பயப்படவேண்டாம். துலாம் ராசிக்குச் சனி பகவான் தீய பலன்களைத் தரமாட்டார். குருவின் பார்வையும் சாதகமாகவே இருக்கிறது. இதனால் புதிய வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் அமையும். என்றாலும் உங்களுக்கு ஏற்ற வேலை எது என்பது குறித்துச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

இதுவரை வேலையில் இருந்த அசௌகர்யங்கள் நீங்கும். சிலர், மன அழுத்தம் காரணமாக நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையிலிருந்து குறைவான சம்பளம் கிடைக்கும் வேலைக்கு மாறும் அமைப்பு ஏற்படும். புதிய வேலை, பொருளாதார அளவில் குறைந்ததாக இருந்தாலும் மன அமைதியைக் கொடுப்பதாக அமையும். இத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொண்டால், இந்தக் காலகட்டம் இனிமையானதாக அமையும்.

பரிகாரம் : சுருட்டப்பள்ளி சென்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பான பலன்களைத் தரும். துலாம் ராசிக்காரர்களுக்கான வசீகரத் தலங்கள்: திருத்தணி, காளகஸ்தி, மற்றும் மகாலட்சுமி கோயில்கொண்ட தலங்கள். இவற்றில் ஏதேனும் ஒரு தலத்துக்குச் சென்று வழிபடுவது நல்ல மாற்றங்களைத் தரும். வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபமேற்றி கனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் லட்சுமி துதிப்பாடல்களைப் பாராயணம் செய்வதும் கேட்பதும் திருமகளின் திருவருளைப் பெற்றுத் தரும்.

விருச்சிகம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

தற்போது விருச்சிக ராசியிலேயே கேது பகவான் அமர்ந்து உச்சம் பெற்று பலன்கள் தரத் தொடங்கியிருக்கிறார். 7-ம் இடத்தில் ராகு நீசமடைந்திருக்கிறார். விரைவில் 3-ம் இடத்துக்கு சனியும் குருவும் மாற்றம் அடைய இருக்கிறார்கள். இந்த அமைப்புகள் விசேஷமானவை. அரசாங்க வேலை, கான்ட்ராக்ட் ஆகியவற்றை எதிர்நோக்கியிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் அந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

3-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது மிகவும் விசேஷமான அமைப்பு. குரு 3-ல் மறைவு பெற்றாலும் அவர் பார்வையால் நற்பலன்கள் ஏற்படும். கல்யாணத்தை எதிர்நோக்கியிருக்கும் அன்பர்களுக்குத் திருமண யோகம் அமையும் காலகட்டம் இது. வாழ்க்கைத் துணையால் நல்ல பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் வீட்டார் தொழில் தொடங்க, நல்ல வேலைகிடைக்க உதவி செய்வார்கள்.

பரிகாரம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு முருக வழிபாடே கண்கண்ட மருந்து. அனுதினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது நல்லது. வாய்ப்பு இருப்பவர்கள் திருநெல்வேலி மாவட்டம் புளியறையில் அருளும் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபட்டு வரலாம். அங்கு 27 நட்சத்திரங்களும் 27 படிகளாக உள்ளன. இவர்களுக்கான வசீகரத் தலம்: பட்டீஸ்வரம். இந்த ஊருக்குச் சென்று துர்கையை வழிபாடு செய்வது விசேஷம். ராகு காலத்தில் மகிஷாசுர மர்த்தினி சுலோகம் பாடி, எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

தனுசு

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

அனைத்து விஷயங்களிலும் அனுசரித்துப் போகும் தனுசு ராசிக் காரர்களுக்குக் கடந்த காலத்தில் தொழில், வேலை ஆகியவற்றில் பெரும் தடைகள் உண்டாயின. தற்போது அந்த நிலை மாறுகிறது. ராசிக்கு 6-ல் ராகுவும்; 12-ல் கேதுவும் அமர்ந்து பலன் தருகிறார்கள்.

விரைவில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து நகர்ந்து 2-ம் இடத்துக்குச் செல்கிறார். குருவும் அங்கு சென்று நீசபங்கமடைகிறார். இது மிகவும் நல்ல அமைப்பு. இதுவரை இருந்த தடை தாமதங்கள் யாவும் விலகும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் உருவாகும்; அவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வருமானம் நல்லவிதமாக அமையும். இந்த ராசியைச் சேர்ந்த இளைஞர்கள், எதிர்பார்த்த வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஏற்கெனவே இருக்கும் வேலையில் புதிய உயர்வுகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வேலைகள், தொழில்கள் பயனுடையதாக இருக்கும். நல்ல முன்னேற்றம் அடையும் காலகட்டம் இது.

பரிகாரம் : திருச்சிக்கு அருகே இருக்கும் உத்தமர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. இவர்களின் வசீகரத் தலங்கள்: கூத்தனூர், மாயவரம். இத்தலங்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். குரு வழிபாடு இவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஆலயத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடுவதும், கோளறு பதிகம் பாடி வணங்குவதும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

மகரம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, சம்பளம் சரியாக வராத நிலை, தகுதிக்குக் குறைவான வேலைகளைச் செய்வது... என பல பிரச்னை களைச் சந்தித்து வந்தார்கள் இந்த ராசிக்காரர்கள். விரைவில் நல்ல காலம் தொடங்கவுள்ளது. ராசியிலேயே சனியும் குருவும் அமர இருக் கிறார்கள். 5-ம் இடத்தில் ராகுவும், 11-ல் கேதுவும் அமர்ந்திருக்கிறார்கள். இது மிகவும் நல்ல அமைப்பு.

சனிபகவான் ராசிக்குள் வந்து ஆட்சி பலம் பெற்று அமர்வதால், இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல உயர்வு உண்டாகும். 11-ல் அமர்ந்திருக்கும் கேது சகலத்திலும் விரைவான முன்னேற்றத்தைக் கொடுப்பார். தொழில் செய்பவர்களுக்கு இது பொன்னான காலம். வளமான எதிர்காலம் அமையும் காலகட்டம் இது. ஏழரைச் சனியின் காலம் என்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். அதேநேரம் உழைப்புக்கு ஏற்ற நற்பலன்களும் கிடைக்கும்.

பரிகாரம் : அரக்கோணம் அருகிலுள்ள கோவிந்தவாடி தலத்தில் அருளும் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்வதும் சயனக் கோலத்தில் அருளும் பெருமாளை வழிபடுவதும் விசேஷம். இவர்களுக்குரிய வசீகரத் தலங்கள்: திருச்செந்தூர், திருவானைக்கா.

வீட்டில் திருச்செந்தூர் முருகன் படம் வைத்து, கிருத்திகை நட்சத்திர நாளில் வழிபடுவதும் வேல்வகுப்புப் பாடல்களைப் பாராயணம் செய்வதும் நற்பலன்களை அதிகப்படுத்தும்.

கும்பம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

கும்பராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சிவனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றவர்கள். இவர்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும் 10-ல் கேதுவும் அமர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ராசிக்கு 12 ல் சனியும் குருவும் விரைவில் அமர இருக்கிறார்கள். ஏழரைச் சனி ஆரம்பமாக இருக்கிறது. மற்ற ராசிக்காரர்கள் அளவுக்கு கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியால் பாதிப்பு நிகழாது என்பதால் தைரியமாக இருக்கலாம்.

10-ல் இருக்கும் கேது, தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர் களுக்கு பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு, நல்ல சம்பளத் தில் புதிய வேலை அமைய வாய்ப்பு உண்டு. கிடைக்கும் பதவியில் வேகமாக முன்னேற்றம் உண்டாகும். குருபகவான் 12-ல் மறைவதால் நற்பலன்களே உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் நன்மையளிக்கும். 4-ம் இடத்தில் ராகு இருப்பதால், பணிச்சுமை காரணமாக உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்; கவனம் தேவை.

பரிகாரம் : திருவொற்றியூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுவது விசேஷம். இவர்களுக்குரிய வசீகரத் தலங்கள்: வைத்தீஸ் வரன்கோவில், தேவிப்பட்டணம், பிள்ளையார்பட்டி. இந்தத் தலங்களில் ஒன்றை தரிசித்து வருவதால் ஏற்றம் உண்டாகும். சனிக்கிழமைகளில் காக்கைக்குச் சாதம் வைத்து உண்பதும், ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் சிறந்த பரிகாரமாகும்.

மீனம்

வேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு! - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்

இதுவரையிலும் முயற்சிகளில் தடை தாமதத்தையும் ஆரோக்கியக் குறைவையும் அனுபவித்த மீன ராசிக்காரர்களுக்கு, குறைதீரும் காலம் வரவுள்ளது. 3-ல் ராகுவும் 9-ல் கேதுவும் அமர்ந்திருக்கிறார்கள்.

11-ம் இடத்துக்குக் குருவும் சனியும் பெயர இருக்கிறார்கள். இது மிகவும் நல்ல அமைப்பாகும். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து அருள் தருவதும் சுக்கிரனின் வீட்டில் ராகு அமந்திருக்கும் அமைப்பும் மிக நல்ல பலன்களைத் தரும்; உங்கள் கனவுகள் நிறைவேறும்.

உத்தியோகத்தில் தடைகள் விலகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தடைப்பட்டு வந்த பதவி உயர்வு இப்போது கிடைத்துவிடும். தன்னம்பிக்கையோடு செயல்படு வார்கள். சிலருக்கு வேலை மாற்றம் இடமாற்றம் உண்டாகும். அவையும் நல்ல விதமாகவே அமையும். புதிய உற்சாகம் பிறந்து உழைப்பீர்கள். தொழில் லாபகரமாக நடைபெறும். விரைவான முன்னேற்றங்கள் கிடைக்கும் காலம் இது.

பரிகாரம் : குரு வழிபாடு மிகவும் அவசியம். மகான்களின் அதிஷ்டானங் களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். இந்த ராசிக் காரர்களுக்கான வசீகரத் தலங்கள்: மயிலை கபாலீஸ்வரர் ஆலயம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர் ஆலயம், வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம். ஒருமுறை இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். வியாழக்கிழமைகளில் ராகவேந்திர சுவாமியை வழிபடுவதும், குருவுக்குரிய ஸ்தோத்திரங்களைச் சொல்லி வணங்குவதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.