Published:Updated:

உத்தியோகத்தில் பிரச்னையா?

ஶ்ரீநரசிம்மர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநரசிம்மர்

எளிய பரிகாரங்கள் - ஜோதிடர் பாரதிஶ்ரீதர் -

உத்தியோகத்தில் பிரச்னையா?

எளிய பரிகாரங்கள் - ஜோதிடர் பாரதிஶ்ரீதர் -

Published:Updated:
ஶ்ரீநரசிம்மர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநரசிம்மர்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது பழைய மொழி. ‘இருவர் உழைத்தால்தான் இந்நாளில் பசி தீரும்’ என்று ஒரு பாடல் வரி உண்டு. அதற்கேற்ப இந்தக் காலத்தில் ஆண் - பெண் இருபாலருக்கும் உத்தியோகம் என்பது மிகவும் அவசியம். வேலை தேடி அலைவது ஒரு பக்கம் பிரச்னை என்றால், கிடைத்த வேலையைச் செய்வதிலும், காப்பாற்றிக்கொள்வதிலும், பிரச்னை இருக்கிறது.

உத்தியோகத்தில் பிரச்னையா?

ரு சிலர், ‘ஏதோ வேலை பார்க்கிறேன்’ என்பார்கள். சிலரோ, ‘என் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை’ என்பார்கள். வேறுசிலர், ‘பணிச் சுமையால் தவிக்கிறேன்’ என்பார்கள். அதேபோல், பெண்களில் சிலருக்குப் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பின்மை பெரிய பிரச்னையாக இருக்கும்.

இப்படி ஒவ்வொருவருக்கும் வேலை அமைவதில் தடை-தாமதம் உண்டாவதற்கும், வேலையில் இருப்பவர்களுக்கு அதில் பிரச்னைகள் தோன்றுவதற்கும் என்ன காரணம் என்று கண்டு, அதற்குத் தீர்வு காண முயல்கிறது ஜோதிடம்.

இந்த வகையில், வேலை தொடர்பான பிரச்னைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைப் போக்கும் எளிய பரிகாரங்கள் குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் பத்தாம் பாவம் ஜீவனஸ்தானம் ஆகும். ஜீவனம் என்பது நாம் செய்யும் தொழில். அதாவது நம் ஜீவனத்துக்குத் தேவையான வருமானத்தைத் தரும் வியாபாரம், செய்யும் பணிகள் அனைத்தையும் குறிக்கும்.

வேலை அமைவதில் பிரச்னைகள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னைகள், செய்யும் தொழிலில் பின்னடைவு ஆகியவற்றுக்கு, ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரகங்களின் நிலையும் ஒரு காரணம்.

அப்படியான கிரக நிலைகளைத் தீர்மானிப்பது அவரவரின் முன்ஜன்ம வினைகளே. இதையே பூர்வபுண்ணியம் என்பார்கள். ஒருசிலர், ‘எங்கள் தாத்தா பெரிய மிராசுதாராக இருந்தார். எங்களிடம் அவ்வளவு நிலம் இருந்தது. பலநூறுபேர் வேலை பார்த்தார்கள். ஆனால் நான் இன்று சம்பளத்துக்கே கஷ்டப்படுகிறேன்’ என்று சொல்வது உண்டு. இதற்குக் காரணம்... நம் மூதாதையர்கள் அவர்களின் காலத்திலோ அல்லது நாம் நம்முடைய முன் ஜன்மத்திலோ நம்மிடம் வேலை பார்த்தவர்களுக்குச் சரியாகக் கூலி கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால், அது பெரிய பாவமாக நம்மையும் நம் சந்ததியையும் வந்தடையும். இப்படியானவர்களின் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் கிரகம் நீசம் பெற்றிருக்கும். அல்லது கிரகச் சேர்க்கைகள் சரியில்லாமல் இருக்கும்.

ஜாதகத்தில் மகரத்தில் அல்லது கும்பத்தில் சூரியன் செவ்வாயுடனோ, ராகுவுடனோ, சனியுடனோ சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் அரசாங்கத்தில் பெரிய பதவி வகிப்பவராக இருப்பார். ஆனால் அந்தப் பணியை அவரால் நிம்மதியாகச் செய்ய முடியாது. பல துறைகளை நிர்வகிக்கும் இவர்களுக்கு, மேலதிகாரியின் குறுக்கீடுகள் இருந்துகொண்டே இருக்கும். அதிகபட்ச அழுத்தத்துக்கு உள்ளாவார்கள். ஆனால் வெளியே இருந்து பார்க்க, ‘அவனுக்கு என்னப்பா பெரிய இடத்து வேலை’ என்பதுபோன்ற தோற்றம் இருக்கும்.

உத்தியோகத்தில் பிரச்னையா?

இதுபோன்ற நிலைக்கு சூரியனுடனான பிற கிரக சேர்க்கையே காரணம். ஜாதகத்தில் சூரியனின் நிலை பதவியைப் பற்றிச் சொல்லும். சூரியன் - செவ்வாய் சேர்க்கை அரசாங்க உத்தியோகம் என்பதைக் குறிக்கும். இந்த இரு கிரகங்களோடு சனி பகவானும் சேர்ந்து சஞ்சரித்தால், அவருக்குப் பணி தொடர்பான மறைமுக எதிரிகள் அதிகமாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம்.

இந்தக் கிரகச் சேர்க்கையில் இருக்கும் ஜாதகர்கள் நல்ல பணியில் அமர்வார்கள். ஆனால், அவர்களின் உயர் அதிகாரிகள் அல்லது முதலாளிகள் வேலையே தெரியாதவர்களாக அல்லது துறைசார்ந்த அறிவில்லாதவர்களாக இருப்பார்கள்.

சிலரது ஜாதகத்தில் பத்தாம் இடத்துக்கான அதிபதி, ராகுவோடு சேர்ந்து அமர்ந்திருப்பார். இப்படியான ஜாதகர்களில் பலருக்குச் சதா சஞ்சார யோகம் அமைந்திருக்கும். அதாவது பல இடங்களுக்குச் சென்று மார்க்கெட்டிங் செய்யும் துறையில் வேலை கிடைக்கும். பத்தாம் இடத்துக்குரிய கிரகம் நீசம் பெற்றிருந்தால், இதுபோன்ற வேலைச் சூழலும் வேலைக்குரிய ஊதியம் அமையாத தன்மையும் உண்டாகும்.

இன்றைக்கு இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் இதுபோன்ற சிக்கல்கள் பெரும்பாலானவர்களுக்குக் காணப்படுகிறது. இதனால் இளைஞர்கள்கூட கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். எப்போதும் ஸ்டிரெஸ் என்று மாத்திரைகள் சாப்பிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

முதலில் உளவியல்ரீதியாக நம் வீட்டுப் பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டும். வேலை என்பது வாழ்வில் ஒரு பகுதிதான் என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். வேலை குறித்து அளவுக்கு அதிகமான அழுத்தத்துக்கு ஆளாகத் தேவையில்லை என்பதை எடுத்துச்சொல்லி, அவர்களை மனதளவில் தயார்படுத்த வேண்டும்.

அடுத்து சில எளிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் பணியிடப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை எட்டலாம்.

எளிய பரிகாரங்கள்...

தினமும் வீட்டில் காலையில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்படி விளக்கேற்றும்போது நரசிம்மரை மனதில் நினைத்துத் துதித்தபடியே விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

நரசிம்மர் உடனடியாக வந்து காக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை வணங்கி ஒரு நாளைத் தொடங்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் தீய சக்திகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும். நாள்தோறும் இப்படி வழிபட இயலாது என்பவர்கள், குறைந்தபட்சம் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதேபோன்று சனிபகவானே நம் உழைப்பை எடுத்துக்கொள்பவர். அதனால் அவருக்கு எள் எண்ணெய் தீபம் ஊற்றி வணங்கி வருவது சிறப்பு. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி என சனியின் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, பணியிடத்தில் பிரச்னை உள்ள அனைவருக்குமே இந்த வழிபாடு நல்ல பலன் கொடுக்கும்.

சுதர்ஸனர் அஷ்டகம் சொல்வதோ அல்லது சுதர்ஸன சதகம் சொல்வதோ மிக மிக விசேஷம். இவை இரண்டுமே நமக்குக் கவசம் போன்றவை. குறிப்பாகப் பணியிடத்தில் காரணமே இல்லாமல் சிலர் உங்களைக் குறைசொல்வது, பிரச்னைகளை உங்கள் பக்கம் திருப்புவது என்று இருப்பார்கள். இப்படிக் காரணங்களற்ற வெறுப்பிலிருந்து விடுபட, இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்வதும், கேட்பதும் நல்லது.

கந்த சஷ்டிக் கவசம். அதன் பெயரிலேயே கவசம் என்று உள்ளது. இந்தக் கவசத்தை நாம் பாராயணம் செய்வது நம்மை எப்போதும் காக்கும்.

`மந்திரங்கள் எல்லாம் சொல்லத் தெரியாது. செய்ய எளிமையான பரிகாரங்களைச் சொல்லுங்கள்’ என்று சிலர் கேட்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 மணிக்குள் சனி ஹோரையில் (இது குளிகன் நேரமும்கூட) ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. வீட்டிலேயே வழிபடலாம். அல்லது ஆலயம் சென்றும் வழிபடலாம்.

ஆலயத்துக்கு நல்லெண்ணெய் தானம் கொடுப்பது அல்லது தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். மேலே சொன்ன பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வந்தாலே பணியிடத்தில் நல்ல சுமுகமான உறவும் முன்னேற்றமும் உண்டாகும்!

தொகுப்பு: இல.சைலபதி

உத்தியோகத்தில் பிரச்னையா?

11-வது பொருத்தம்!

திருமணத்தில் பத்து பொருத்தங்கள் குறித்து அறிவோம். 11-வது பொருத்தம் ஒன்றும் உண்டு. அது நாடிப் பொருத்தம்.

தம்பதியரில் ஆண்- பெண் இருவரது நாடிகளும் ஒன்றானால் நாடிப் பொருத்தம் இல்லை; திருமணத்தை விலக்க வேண்டும் என்கிறது, ‘ஜாதக சந்திரிகை’ எனும் ஜோதிடநூல்.

கார்த்திகை, ரோகிணி, சுவாதி, மகம், ஆயில்யம், ரேவதி, திருவோணம், உத்திராடம், விசாகம் ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வாம பார்ச்சுவ நாடியாகும்.

பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், அவிட்டம், பூராடம், உத்திரட்டாதி ஆகியவை மத்திய நாடியுள்ளவை.

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகியவை வலது பார்ச்சுவ நாடி ஆகும்.

ஆண்- பெண்ணின் நட்சத்திரங்கள் மத்திய நாடியாக இருந்தால், கணவனுக்கு ஆகாது; பார்ச்சுவ நாடி எனில் பெண்ணுக்கு ஆகாது; வெவ்வேறு நாடிகளில் இருந்தால் எவ்விதமான தோஷமும் இல்லை!