திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ரிஷப லக்னமும் குலதெய்வ வழிபாடும்!

குலதெய்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
குலதெய்வம்

ஜோதிடமும் குலதெய்வமும் : 4; - ஜோதிடர் கே.எம். முருகேசன்

ரிஷப லக்னத்துக்கு 5-ம் இடமாக வருவது கன்னி ராசி. இந்த ராசியின் அதிபதியான புதனே இவர்களுக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் குலதெய்வத்திற்கு உரிய கிரகமாகவும் இருக்கிறார்.

ஆகவே, இவர்களுக்கான குலதெய்வம் வைணவம் சம்பந்தபட்டதாகவோ அல்லது ஒரு கன்னி தெய்வமாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது. சப்தகன்னியரையும் குலதெய்வ மாகக் கொண்டிருப்பார்கள்.

ரிஷப லக்னமும் 
குலதெய்வ வழிபாடும்!

கன்னி நிலையில்லா தன்மை உடைய ராசி. ஆகவே, இவர்களின் குலதெய்வம் வேறோர் இடத்திலிருந்து தற்போது உள்ள இடத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக இருக்கும். கன்னி அமைதியான பாசமுடைய ராசியாக திகழ்வ தால், இந்த லக்னக் காரர்களின் குலதெய்வம் சாந்த சொரூபமாக இருக்கும்.

நிபுணத்தன்மையும் நூல் நிலையங்களும் இந்த ராசிக்குரிய இடங்களாக இருப்பதால், சரஸ்வதி, வாக்தேவி, சியாமளா ரூப பச்சை வண்ணப் பெண் தெய்வங்கள், மதுரை மீனாட்சி, மாதங்கி, பேச்சுக்கு அரசியான பேச்சி ஆகிய தெய்வங்களில் ஒன்றும் இவர் களின் குலதெய்வமாக இருக்க வாய்ப்பு உண்டு.

இனி, 12 லக்னங்களில் 5-ம் இடத்துக்குரிய புதன் இருக்க, ரிஷப லக்னக்காரர்களின் குலதெய்வ நிலை எப்படி என்பதை அறிந்த்உ கொள்வோம்.

ரிஷப லக்னம்: 1-ம் இடத்தில் ரிஷப லக்னத்தில் புதன் இருக்குமானால், இது இவருக்கு நட்பு வீடு. இந்த இடம் கேந்திரம் மற்றும் திரிகோணமாகும்.

ஆகவே இவர்களின் குலதெய்வம் குடும்பத் துக்கு மேன்மை, செல்வாக்கு, கௌரவத்தைக் கொடுக்கும். வயல் சார்ந்த பகுதி, தோப்பு, மரங்கள் உள்ள இடம் ஆகிய பகுதிகளில் குடிகொண்டிருக்கும்.

ரிஷபம் சுக்கிரனின் வீடு. சுக்கிரன் பெண்கிரகம். ஆதலால் குலதெய்வம் பெண்ணாக இருக்கும். மேலும் இந்தக் குலதெய்வம் இவர்கள் குடும்பத்துக்கு கல்வியையும் மேன்மையையும் வாரி வழங்கும்.

ரிஷபத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் புதன் இருந்தால் குல தெய்வம் சற்று உக்கிர மான தெய்வமாக இருக்கும். ரோகிணி நட்சத் திரத்தில் புதன் இருந்தால் மீனாட்சி, மாதங்கி, சியாமளா போன்ற பெண் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும்.

இவர்களுக்கு 7, 12-ம் இடத்தின் அதிபதி யாகிய செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் புதன் இருக்குமேயானால், காளி, நரசிம்மர், பிரத்தியங்கரா போன்ற தெய்வங்கள் குலதெய்வங்களாக இருக்கும். ஆனால் இவர்கள் அந்த தெய்வங்களை ஆர்வத்துடன் வணங்கி வர மாட்டார்கள்.

ஏனெனில் செவ்வாய் புதனுக்குப் பகைக் கிரகம். மேலும் 12-ம் இடமான விரய ஸ்தானத்தின் அதிபதியும் ஆகிறார். லக்ன கேந்திரத்தில் இருப்பதால் தெய்வத்தின் உதவி கிடைத்தாலும், இந்த அமைப்பைக் கொண்ட ஜாதகக்காரர்கள் அதைச் சரியாகப் பயன் படுத்திக்கொள்ள மாட்டார்.

மிதுன லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 2-ம் இடமான மிதுனத்தில் புதன் இருப்பது சிறப்பான அமைப்பாகும். மிதுனம் புதனின் சொந்த வீடு. ஆகவே, குலதெய்வம் மிகவும் வலிமையோடு இவர்கள் குடும்பத்துடன் ஒட்டி உறவாடி மேம்படுத்தும்.

புதன் 7 -ம் பார்வையால் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், குலதெய்வ அனுகிரகத்தால் தீர்க்க ஆயுள் உண்டு. அதேவேளை 8, 11-ம் இடத்துக்குரிய குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தில் புதன் இருந்தால், இவர் களது குலதெய்வக் கோயில்களில் சில பிரச்னைகள் இருக்கும். வழக்குகளால் கோயில் மேன்மையடையாமல் இருக்கும்.

ஆனால் நிச்சயம் ரிஷப லக்னக்காரர்களை அந்த தெய்வம் காக்கும். வழக்குகள் நீங்க முயற்சி செய்து, ஆலயத்தில் தொடர்ந்து வழிபாடுகள் நடக்க ஏற்பாடுகள் செய்தால், பெரும் பாக்கியம் பெறலாம்.

கடக லக்னம்: ரிஷபத்துக்கு 3-ம் இடமான கடக ராசியில் புதன் இருந்தால் குலதெய்வம் எது என்று அறியாத நிலை ஏற்படும். கடகம் சந்திரனின் வீடு. அதனால் குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கலாம். கடகத்தில் புனர்பூசத்தில் புதன் இருந்தால், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, பேச்சியம்மன் ஆகியோரில் ஒருவர் குல தெய்வமாக இருப்பார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் 9, 10-ம் இடங்களுக்குரிய சனியின் சாரத்தில் புதன் நிற்குமானால், ஜாதகருக்குச் சிறப்பான நன்மைகளும் மேன்மைகளும் பல போராட்டங்களுக்கு மத்தியிலும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இவர்களின் குலதெய்வம் கருப்பணசாமியாகவோ, பேச்சி, இசக்கி போன்ற சிறு தெய்வங்களாகவோ அமையும். புதன் ஆயில்ய நட்சத்திரத்தில் இருக்குமேயானால் சிறப்பான நல்ல பலன்களைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

சிம்ம லக்னம்: ரிஷபத்துக்கு 4-ம் இடமான சிம்ம ராசியின் அதிபதி புதனுக்குப் பகை. இதில் புதன் இருந்தால் குலதெய்வம் ஆண் தெய்வமாக இருக்கும்.

தந்தையின் காலத்திலேயே இவர்கள் குலதெய்வத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்பார்கள். சிலருக்குக் குலதெய்வத்தின் இருப்பிடமே அழிந்துபோய் இருக்கும். புத்திர புத்திரிகளின் நற்காரியங்களில் தடை ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால் நாக சாபம், புற்றை இடித்த பாவம் இவர்களின் சந்ததிக்கு இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் புதன் இருக்குமானால் பெண் தெய்வம் குலதெய்வமாக இருக்கும். ஆனாலும் பெண் சாபத்தின் காரணமாகக் குலதெய்வ அருள் இவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்படும்.

உத்திர நட்சத்திரத்தில் புதன் நிற்கும் எனில் பிதுர்வழி தோஷத்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் போகும்.

ரிஷப லக்னமும் 
குலதெய்வ வழிபாடும்!

கன்னி லக்னம்: ரிஷப லக்னத்தின் 5- ம் இடமான கன்னி புதன் ஆட்சி உச்சம் பெறும் வீடு. இதில் புதன் இருந்தால் இவர்கள் குலதெய்வம் வைணவ தெய்வமாக இருக்கும். அல்லது கன்னிமார் தெய்வமாக இருந்து இவர்களின் குடும்பத்தைச் சிறப்பான முறையில் கட்டிக் காக்கும்.

கன்னி-உத்திரம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால் இவர்களுக்குக் குலதெய்வம் நல்ல அறிவுக்கூர்மையைக் கொடுக்கும். தந்தை வழிச் சொத்துகளால் நன்மை உண்டாகும்.

அஸ்த நட்சத்திரத்தில் புதன் இருந்தால் கன்னி தெய்வம் குல தெய்வமாக அமையும். சிலருக்குத் தாய் வழி குலதெய்வம் இவர்களிடம் வந்து மேன்மையைக் கொடுக்கும். கௌரவம், புகழ் ஆகியன கிட்டும்.

சித்திரை நட்சத்திரத்தில் குலதெய்வம் இருந்தால், இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தொலைவில் குலதெய்வம் இருக்கும். வேண்டிய நன்மைகளைச் செய்து கொண் டிருக்கும்.

துலாம் லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 6 - ம் இடம் துலாம். இந்த வீடு புதனுக்கு நட்பு வீடாக அமைவதால், இங்கு புதன் இருந்தால் குலதெய்வம் பெண் தெய்வமாக அமையும். எனினும் இவர்கள் குலதெய்வ வழிபாட்டைத் தவறவிட்டவர்களாக இருப்பார்கள்.

துலாம் - சித்திரை நட்சத்திரத்தில் புதன் இருக்குமேயானால் உக்கிரமான பெண் தெய்வம் குலதெய்வமாக இருக்கும். மனைவி வழியில் நன்மைகளை வழங்கும். சுவாதி நட்சத்திரத்தில் புதன் நின்றால் உக்கிரமான கிராமதேவதை குலதெய்வமாக இருக்கும். இது சந்ததிக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கும்.

விசாக நட்சத்திரத்தில் புதன் நின்றால், இவர்களுக்குக் குலதெய்வம் நன்மையைச் செய்யும். எனினும் அந்தத் தெய்வத்தின் கோயில் வழிபட முடியாத நிலையில் இருக்கும்.

விருச்சிக லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 7-ம் இடமான விருச்சிகத்தில் புதன் நின்றால், அது புதனுக்குப் பகை வீடு. இவர்கள் குலதெய்வ வழிபாட்டில் அவ்வளவாக கவனம் செலுத்தமாட்டார்கள். இவர்களின் குலதெய்வம் ஆண் தெய்வமாக இருக்கும்.

விருச்சிகம் - விசாகத்தில் புதன் நிற்குமேயானால், குலதெய்வம் ஆண் தெய்வமாக இருக்கும். குலதெய்வத்தை வழிபடுவதில் பிரச்னைகள், தகராறுகள், வம்பு வழக்குகள் இருக்கும். அனுஷ நட்சத்திரத்தில் புதன் இருந்தால் குலதெய்வம் ஒரு காவல் தெய்வமாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் புதன் நின்றால், குலதெய்வ வழிபாட்டில் இவர்களுக்குச் சிறு சிறு இடையூறுகள் இருக்கும்.

தனுசு லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 8-ம் இடமான தனுசுவில் புதன் இருப்பது நல்லதல்ல. இவர்களின் குலதெய்வம் ஆண் தெய்வமாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அந்தத் தெய்வத்தின் கோயில் சில வழக்குகளில் சிக்கி இருக்கும். செவ்வாய் புதனுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் பங்காளித் தகராறு இருக்கும்.

புதன் மூல நட்சத்திரத்தில் இருக்க, சனி-மாந்தியின் சேர்க்கை, பார்வை இருந்தால், அமானுஷ்ய சக்தியால் குலதெய்வக் கோயில் பாதிக்கப்பட்டிருக்கும். புதன் பூராடத்தில் இருந்தால் குலதெய்வம் பெண் தெய்வம். எதிரிகளால் குலதெய்வ வழிபாடு பாதிக்கப்பட்டிருக்கும். புதன் இருப்பது உத்திராட நட்சத்திரம் எனில், தந்தைவழி உறவினர்களாலும் பிதுர் தோஷத்தாலும் குலதெய்வ வழிபாடு தவறிப்போய் இருக்கும்.

மகர லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 9-ம் இடமான மகரத்தில் புதன் இருப்பார் எனில், அவர் உங்களுக்கு நன்மையே செய்வார். குலதெய்வம் ஆண் தெய்வமாக காவல் தெய்வமாக இருக்கும். உயர்வையும் புகழையும் உங்களுக்குக் கொடுக்கும்.

உத்திராடத்தில் புதன் நின்றால் குலதெய்வம் ஆண் தெய்வம். திருவோணத்தில் புதன் நின்றால், கிராம தெய்வமே குலதெய்வமாக இருக்கும். அவிட்டத்தில் புதன் இருந்தால் சுடலைமாடன், காத்தவராயன், மதுரைவீரன், கருப்பன் போன்ற தெய்வங்களே குலதெய்வ மாகத் திகழும்.

ரிஷப லக்னமும் 
குலதெய்வ வழிபாடும்!

கும்ப லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 10-ம் இடமான கும்பத்தில் புதன் இருந்தால், குல தெய்வம் காவல் தெய்வமாக இருக்கும். அது தொழில் மேன்மையை இவர்களுக்குத் தரும். எனினும் குலதெய்வத்தை அறிய முடியாத நிலையும் ஏற்படலாம்.

கும்பம் - அவிட்டத்தில் புதன் இருந்தால், குலதெய்வம் ஆண் காவல் தெய்வமாக இருக்கும். சதயத்தில் புதன் இருந்தால், அது நாகம் சம்பந்தப்பட்ட தெய்வமாக இருக்கும். பூரட்டாதியில் புதன் இருந்தால் ஆண் தெய்வமாக, வழிபாடுகளில் பிரச்னைகள் இருக்கும் தெய்வமாக இருக்கும்.

மீன லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 11-ம் இடமான மீனத்தில் புதன் இருப்பது குலதெய்வ வழிபாட்டுக்கு நன்மையைத் தராது. இத்தகைய அமைப்பினர், பூர்வீகச் சொத்தை இழந்து இருப்பார்கள்.

மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தில் புதன் இருந்தால், குலதெய்வம் ஆண் தெய்வமாக இருக்கும். பெரியோர்கள் ஞானிகள், குருமார்களின் சாபத்தால் குலதெய்வ உதவி இவர்களுக்குக் கிடைக்காமல் இருக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் புதன் இருந்தால், குலதெய்வம் காவல் தெய்வமாக இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் புதன் இருந்தால், முற்பிறவியில் செய்த பாவம், குருசாபம் ஆகியவற்றால் குலதெய்வ வழிபாடு தவறிப்போகும்.

மேஷ லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 12-ம் இடமான மேஷத்தில் புதன் இருந்தால், குலதெய்வம் ஆண் தெய்வமாக இருக்கும். எனினும் குலதெய்வம் எதுவென்று அறியமுடியாத நிலை ஏற்படும். பூர்வீகச் சொத்துகளையும் இழக்க நேரிடலாம்.

மேஷம் - அசுவினியில் புதன் நின்றால், குலதெய்வம் காவல் தெய்வமாக அல்லது நாக தேவதையாக இருக்கும். முன்னோர்கள் புற்றை இடித்த சாபத்தால் குலதெய்வ உதவி கிடைக்காமல் இருக்கும். பரணியில் புதன் இருந்தால், சுமங்கலிகளின் சாபம் குலதெய்வத்தின் உதவியைக் கிடைக்க விடாமல் செய்யும். கார்த்திகையில் புதன் இருந்தால் தாய்வழி உறவினர்கள் மற்றும் பங்காளிகளால் விரயம் ஏற்படும்.

ரிஷப லக்னக்காரர்கள் சத்திய நாராயண பூஜை செய்து வழிபட்டு வந்தால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி குலதெய்வம் தெரிந்து அதை வழிபடவும் வழிபிறக்கும். குலதெய்வத்தின் அருள் கூடவே இருக்கும்.

-தொடரும்...