Published:Updated:

கும்ப ராசியில் சனி பகவான் அதிசார பலன்களும் பரிகாரங்களும்!

சனி பகவான் 
அதிசார பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சனி பகவான் அதிசார பலன்கள்

- பாரதிஶ்ரீதர் -

கும்ப ராசியில் சனி பகவான் அதிசார பலன்களும் பரிகாரங்களும்!

- பாரதிஶ்ரீதர் -

Published:Updated:
சனி பகவான் 
அதிசார பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சனி பகவான் அதிசார பலன்கள்

ஜோதிடசாஸ்திரத்தில் கிரகப் பெயர்ச்சிகளைப் போன்று, கிரகங்களின் வக்ர நிலை மற்றும் அதிசார நிலை குறித்தும் விளக்கங்கள் உண்டு. நவகிரகங்களில் சூரியன் ஆத்மகாரகன்; சந்திரன் மனோகாரகன். இவர்கள் இருவருக்கும் வக்ரகதி இல்லை. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். மற்ற கிரகங்களில் செவ்வாய் வேகமாகவும், சனி பகவான் மந்தமாகவும் நகர்வார்கள். ஆக, இந்த இரண்டு கிரகங்கங்களின் வக்ரம் மற்றும் அதிசார நிலை குறிப்பிடத்தக்கதாகும்.

சனிபகவான்
சனிபகவான்
பாரதி ஶ்ரீதர்
பாரதி ஶ்ரீதர்

கிரகங்களின் அதிசார நிலை என்பது அதன் பயண வேகம், குறிப்பிட்ட காலத்தில் சற்று அதிகரிப்பதைக் குறிக்கும். அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட கிரகம் அதிசார நிலையில் இருக்கும். அதேபோல் வக்ர நிலை என்பது, கிரகங்களின் பயண வேகத்தில் உண்டாகும் தேக்கம் எனலாம்.

இந்தவகையில் இந்த வருடம் (திருக்கணிதப் படி) 29.4.22 முதல் சனிபகவான் அதிசாரம் பெற்று மகரத்திலிருந்து கும்ப ராசிக்குச் செல் கிறார். 12.7.22 வரையிலும் கும்பத்தில் இருப்பார். அதன் பிறகு வக்ரகதி அடைந்து மீண்டும் மகரத்துக்கு வருகிறார்.

ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். ‘சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். மகரத்துக்கும் கும்பத் துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார்.

ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார். ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை.

ஒருவரது வாழ்நாளில் சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்! இதுபோன்ற காலக் கணக்கீட்டைச் சமன் செய்யும் விதமாகவே கிரகங்கள் அவ்வப்போது வக்ரம் மற்றும் அதிசார நிலை பெறுகின்றன என்பார்கள். தற்போது சனிபகவான் அதிசாரம் அடையும் காலத்தில் - 29.4.22 முதல் 12.7.22 வரையிலும் பன்னிரு ராசிகளுக்கும் எப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கும்ப ராசியில் சனி பகவான் அதிசார பலன்களும் பரிகாரங்களும்!
adventtr

மேஷம்: அதிசார காலத்தில் லாப ஸ்தானத்தில் கும்பத்தில் அமர்கிறார் சனி பகவான். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள். மனதில் உற்சாகம் பெருகும். சிலருக்கு சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரலாம். சிறியளவில் பணவரவும் இருக்கலாம். வி.ஐ.பிகளின் நட்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். இந்த ராசி அன்பர்கள், அருகிலுள்ள சிவாலயங்களில் அருளும் சனி பகவானுக்கு எள் முடிச்சு தீபம் ஏற்றி வழிபடவும்; கிரக பாதிப்புகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்: சனிபகவான் 29.4.22 முதல் 12.7.22 வரையிலும் அதிசாரம் பெற்று, உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் அமர்கிறார். உங்களின் திறமைகள் வெளிப்படும். புதிய முயற்சிகள் பலிதமாகும். சிலருக்கு இழந்த பணம் - பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டு லோன் அப்ரூவலாகும். கடன்கள் அடைபடும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். எனினும் வேலையிலும் உடல்நலனிலும் சிறிது கவனம் தேவை. அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு எள் முடிச்சு தீபம் ஏற்றி வழிபடவும்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்: அதிசாரம் அடையும் சனிபகவான் கும்பராசிக்கு இடம்பெயர்கிறார். இது உங்கள் ராசிக்கு 9-ம் இடம். ஆகவே, 29.4.22 முதல் 12.7.22 வரையிலும் தோற்றத்தில் கம்பீரம் பிறக்கும். தம்பதிக்கு இடையே அன்பும் அந்நியோன்யமும் கூடும். உங்களின் வாரிசுகள் ஒத்தாசையாக இருப்பார்கள். மகனின் வேலை, மகளின் திருமணம் குறித்த விஷயங்கள் நினைத்ததுபோல் அமையும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். அத்தியாவசியச் செலவுகள் உண்டு என்றாலும், பண வரவும் திருப்தி தரும். சதுர்த்தி தினங்களில் பிள்ளையாருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; பிரச்னைகள் விலகும்.

கடகம்: 29.4.22 முதல் 12.7.22 வரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனிபகவான். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை. தனிப்பட்ட விஷயங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ளவோ, ஆலோசனை பெறவோ வேண்டாம். தேவையில்லா பயணங்கள், முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தவிர்த்துவிடவும். ஆவணங்கள், காசோலைகளைக் கவனமாகக் கையாளவும். சிலருக்குக் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். அவசியம் இருந்தால் மட்டும் கடன் வாங்கவும். தினமும் காகத்துக்கு அன்னமிடுங்கள்; பிரச்னைகள் நீங்கி, நிம்மதி உண்டாகும்.

சிம்மம்: சனிபகவான் அதிசாரம் பெற்று 29.4.22 முதல் 12.7.22 வரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்கிறார். இந்த கால கட்டத்தில், எதிலும் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது நல்லது. நிதானமும் பொறுமையும் அவசியம். வீட்டுப் பிரச்னைகளில் சிலர் தலையிட்டு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தலாம்; கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவர் தரும் ஆலோசனைகளைத் திறந்தமனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அரசு சார்ந்த விஷயங்களில் தாமதமோ, அலட்சியமோ வேண்டாம். ஆபரணங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மிகக் கவனமுடன் கையாளவேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செந்நிற மலர்களைச் சமர்ப்பித்து அம்பாளை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

கன்னி: சனிபகவான் அதிசாரம் பெற்று 29.4.22 முதல் 12.7.22 வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் அமர்கிறார். மனஇறுக்கமும் கோபமும் விலகும். தடுமாற்றம் நீங்கும். நல்ல வாய்ப்புகளால் நன்மை அடைவீர்கள். பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். சிலருக்குக் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உண்டு. மகளின் கல்யாணம் முதலான சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள். தினமும் நெய் தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை வணங்கினால், தடைகள் யாவும் நீங்கும்.

துலாம்: 29.4.22 முதல் 12.7.22 வரை சனிபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தருவார். நல்லதே நடக்கும். இந்த ராசிக்காரர்கள் பலருக்கும் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். ஏமாற்றங்கள் நீங்கும். தாயாருக்கான மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் சாதகமான நிலை தென்படும். தடைப்பட்டிருந்த சில காரியங்களை நம்பிக்கையுடன் மீண்டும் தொடங்குவீர்கள். இந்த ராசியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் வீண் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பிரதோஷ காலத்தில் சிவாலய அபிஷேகத்துக்குப் பால் வாங்கிக் கொடுங்கள்; நல்லது நடக்கும்.

விருச்சிகம்: 29.4.22 முதல் 12.7.22 வரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனிபகவான். அலைச்சல், புதிய இடத்துக்கு மாற வேண்டிய சூழல், வீடு கட்டுமானத்தில் தடைகள் முதலான பிரச்னைகள் எழலாம். அதேநேரம் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். முக்கியப் பணிகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். சொத்து பத்திரங்களில் அதீத கவனம் தேவை. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். விலையுயர்ந்த பொருள்களை இரவல் தருவதோ, பெறுவதோ கூடாது. சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதால் பன்மடங்கு பலன் கிடைக்கும்.

தனுசு: 29.4.22 முதல் 12.7.22 வரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனிபகவான். தொட்ட தெல்லாம் துலங்கும். தம்பதிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். பரஸ்பரம் இருவரும் விட்டுக்கொடுத்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றிபெறும். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். பெண்ணுக்கு நல்ல வரன் குறித்த தகவல் வரும். வழக்கில் வெற்றி உண்டு. தெய்வத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய்க்கிழமைகளிலும் கிருத்திகை நாள்களிலும் முருகப்பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுங்கள்; எதிர்பார்ப்புகள் இனிதே நிறைவேறும்.

மகரம்: 29.4.22 முதல் 12.7.22 வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனிபகவான். பிரச்னை கள் சற்று மட்டுப்படும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். எதிர்மறை எண்ணங்கள் மறையும். எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் அவசியம். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். வாழ்க்கைத் துணைவர் கவலைகள் நீங்கி உற்சாகம் அடைவார். கணவன் மனைவிக்குள் சிறிய பிரச்னைகளைப் பெரிது படுத்தவேண்டாம். எதிலும் அலட்சியம் கூடாது. சனிக் கிழமைகளில் பெருமாள் தரிசனம் நற்பலன் அளிக்கும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்; சங்கடங்கள் நீங்கும்.

கும்பம்: 29.4.22 முதல் 12.7.22 வரை அதிசாரம் பெற்று நகரும் சனிபகவான், உங்கள் ராசியில் அமர்ந்து பலன் தரப்போகிறார். `ஜன்ம ராசியில் சனி’ என்று பதற்றமோ பயமோ தேவையில்லை. தெய்வம் உங்களுக்குத் துணை நின்று வழிகாட்டும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். சிலருக்கு வங்கிக்கடன் கிடைக்கும். எதிலும் திட்டமிடலும் பெரியோரின் ஆலோசனையும் தேவை. எவ்விதமான பிரச்னைகளிலும் அவசரம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. பெளர்ணமி தினங்களில் அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபடுங்கள்; நன்மைகள் கைகூடும்.

மீனம்: அதிசார நிலையை அடையும் சனி பகவான் 29.4.22 முதல் 12.7.22 வரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்கிறார். சுபச் செலவுகள் உண்டாகும். அதேநேரம் வீண் ஆடம்பரங்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. இந்தக் காலகட்டத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறை பல பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும். சிலருக்கு மகான்களின் ஆசி கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். வாகனப் பயணத்தில் அலட்சியம் வேண்டாம். மகான்கள் மற்றும் சித்தர்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; கஷ்டங்கள் விலகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism