
சனிப்பெயர்ச்சி - பிள்ளைகளின் கல்வியும் வாழ்வும்!
நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் கிரகமான சனி பகவான் ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட கச் சனி, அஷ்டமச் சனி எனும் நிலையில் சஞ்சரிக்கும்போது, பிள்ளை களுக்கு பள்ளி - கல்லூரிக் காலங்களில் நிகழும் விளைவுகளை நாம் அறிவது அவசியம். குறிப்பாக... தற்போது திருக்கணிதப்படி, சனி பகவான் மகரத்தில் இருந்து கும்பத்துக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவரால் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் பலாபலன்கள் - விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வோம்.


வாழ்க்கை விதியின் விளையாட்டு என்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரின் வாழ்வையும் நவகிரகங்கள் ஏதோ ஒருவகையில் கட்டுப்படுத்துகின்றன. வினைப் படி கிரகங்கள் தரும் பலாபலன்களால் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற சூழலில் ஜோதிடம் ஒருவருக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
இன்றைய சூழலில் பல பெற்றோரின் பரிதவிப்புக்கு அவர்களின் பிள்ளைகள் குறித்த சிந்தனை காரணமாகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால் வினைப்படி ஏற்படும் சில பிரச்னைகள், பிள்ளைகளின் வாழ்வையே திசைமாறச் செய்து விடுகின்றன.
தவறான பழக்கவழக்கங்கள், கூடா நட்பு என்று பிள்ளைகள் தடம் மாறும்போது, அவர்களை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் பலர் உண்டு. சரி, இதற்கு ஜோதிடம் தரும் விளக்கங்கள் என்ன, வழிகாட்டல்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

கிரக கோசாரங்கள் பிள்ளைகளைப் பாதிக்குமா?
பொதுவாக பிள்ளைகளின் குழந்தை பருவம் முதல் கல்லூரி காலம் வரையிலும் எவ்வித சிரமங்களும் ஏற்படாமல் இருக்கவேண்டும் எனில், அவர்களின் ஜாதகத்தில் தாய் மற்றும் சுகஸ்தானம் எனப்படும் 4-ம் இடமும், தந்தை மற்றும் பாக்கிய ஸ்தானம் எனப் படும் 9-ம் இடமும் பலம் பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், அந்தந்த காலகட்டத்தில் நடைபெறும் தசா-புக்திகளும் நன்மையானதாக அமையவேண்டும்.
இவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால், பல்வேறு தடைகளை யும் பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். சுய ஜாதகப்படி இந்த நிலை என்றால், கோசாரப்படி நிகழும் சனி, குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகளும் சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனினும், சுய ஜாதகம் நல்லபடி அமைந்திருந்தால் கோசார கிரக நிலைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் கிரகமான சனி பகவான் ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட கச் சனி, அஷ்டமச் சனி எனும் நிலையில் சஞ்சரிக்கும்போது, பிள்ளை களுக்கு பள்ளி - கல்லூரிக் காலங்களில் பல தடைகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்துவார். பெற்றோருடன் பிரச்னை, மனக்கசப்பு, விரிசல்கள் என்று பிரச்னைகள் எழ வாய்ப்பு உண்டு.
பெற்றோர் மீதான அன்பு, பாசம், நம்பிக்கையையும் வலுவிழக்கச் செய்துவிடுவார். பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காத நிலையை ஏற்படுத்துவார். தேவையற்ற நட்புக்கள், டீன் ஏஜ் பருவமாக இருந்தால் காதல் விஷயங்கள், நண்பர்களுடன் வீணாக ஊர் சுற்றுவது, நட்பு வட்டாரத்தையே பெரிதாக எண்ணுவது, கல்வியில் ஆர்வம் இன்மை, சிலருக்கு உடல்நல பாதிப்புகள், தொடர்ச்சியாக மருத்துவச் செலவுகள் என்று ஏற்படலாம்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி... என்ன நிகழும்?
தற்போது திருக்கணிதப்படி, சனி பகவான் மகரத்தில் இருந்து கும்பத்துக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவரால் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் பலாபலன்கள் - விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வோம்.
மீன ராசிக் குழந்தைகளுக்குத் தற்போது ஏழரைச் சனி ஆரம்பம். அதிலும் சனி பகவான் 12-ல் அமர்ந்து விரயச் சனியாக பலன் தரவுள்ளார். இந்தக் காலத்தில் உடல்நிலை பாதிப்பு, சோம்பல், அதிக தூக்கம், பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேளாமை, தவறான செயல்களில் ஈடுபடுவது, வீண் பழி போன்ற விஷயங்களை ஏற்படுத்துவார் சனிபகவான்.
கும்ப ராசியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இது ஜன்மச் சனிக் காலம். ஆகவே அதிக மனஅழுத்தம், வீண் கோபம், எரிச்சல் அடைவது, பெற்றோர் மற்றும் ஆசிரியருடன் மோதல் போக்கு, காதல் பிரச்னைகள், படிப்பில் கவனமின்மை, ஞாபகம் மறதி போன்ற விஷயங்களை உருவாக்குவார்.
மகர ராசியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஏழரைச் சனியில் இது வாக்குச் சனி காலம் ஆகும். பெற்றோர் மற்றும் ஆசிரியர் உடன் வாக்குவாதம், அதனால் மனக்கசப்புகள், பள்ளி - கல்லூரிகளில் மாணவர்களிடையே பிரச்னைகள், மோதல் போக்கு ஆகிய விஷயங்களை ஏற்படுத்துவார்.
விருச்சிக ராசியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆகவே, அவர்களுக்கு உடல்நிலைப் பாதிப்பு, சிறு சிறு விபத்துகள், ஞாபக மறதி, வீண் கோபம், சக நண்பர்களுடன் மோதல் போக்கு ஆகிய பிரச்னைகள் உருவாகலாம்.
சிம்ம ராசிப் பிள்ளைகளுக்கு, கண்டகச் சனி காலம் இது. ஆகவே படிப்பில் மந்தம், நினைவாற்றல் குறைவு, தேவையற்ற நட்புக்கள், சிற்சிலருக்குக் காதல் பிரச்னைகள் ஏற்படும்.
கடக ராசியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெறுகிறது. எனவே, சற்று உடல் நிலை பாதிப்பு ஏற்படும். மேலும் மற்றவர்களுக்குச் செய்யும் உதவியால் உபத்திரவத்தில் மாட்டிக்கொள்வது, படிப்பில் காலதாமதம், வீண் அவமானங் களைச் சந்திக்கும் சூழல், சிறு சிறு விபத்துகள் போன்ற பிரச்னைகள் எழ வாய்ப்பு உண்டு.
கோசாரப்படி 5-ல் சனி இருக்கும் நிலையால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் மனக் குழப்பம் மற்றும் சஞ்சலம் ஏற்படலாம். அதனால் படிப்பில் கவனம் சிதறலாம். துலாம் ராசிப் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
இப்படியான பலன்கள், அவரவரின் சுய ஜாதகத்தைப் பொறுத்து கூடவோ, குறையவோ செய்யலாம். சுய ஜாதகமும் வலுவிழந்து, குறிப்பிட்ட கிரகங்களின் கோசார நிலையும் சரியில்லை எனில், பாதிப்புகள் அதிகமாக ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனமாக அணுக வேண்டியது அவசியம்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
அன்பால் அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும். அவர்களுக்கான நன்மை, தீமைகளை எடுத்துச் சொல்லி சிறந்த வழி காட்டியாக இருக்கவேண்டியது அவசியம். அவர்கள் மீது வீண்பழி, பிரச்னைகள் வரும்போது, தீர விசாரிப்பதும் எவருக்கும் பாதிப்பு இல்லாமல் கவனமாகப் பிரச்னைகளைக் கையாளுவதும் முக்கியம்.
சனிக் கிரகம், மேற்சொன்னவாறு பாதகமான பலன்களைத் தரும் காலத்தில்... நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை உங்கள் பிள்ளைகளிடம் குறைத்துவிடுவார். ஆகவே ஒருமுறைக்குப் பலமுறை எடுத்துச்சொல்லி அவர்களை வழிநடத்த வேண்டிய நிலை உண்டாகும். உங்களின் செயல்பாடுகளே உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இதை விடுத்து அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி இழிவுப் படுத்துவது, நிராகரிப்பது, சொல்லாலும் செயலாலும் நோகடிப்பது என்றிருதால், பிரச்னைகள் பெரிதாகும்; உங்களுக்கும் அவர்களுக்குமான விரிசல்கள் அதிகமாகவே செய்யும். ஆகவே, சுய ஜாதகப்படியும் கோசார கிரக நிலைகள் படியும் அவர்கள் பிரச்னைகளைச் சந்திக்கும் காலங்களில், அவர்கள் இடத்தில் இருந்து நீங்கள் யோசிப்பதும், அனுசரனையாக இருப்பதும், அவர்களுக்கென ஓர் இலக்கை நிர்ணயித்து, அதை அடைய கடின உழைப்பு மேற்கொள்ள அவர்களைத் தூண்டுவதும் அவசியம்.
இதனால் வாழ்வில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். இதுபோன்ற காலகட்டங்களில் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் தெய்வ வழிபாடுகளும், அவர்களுக்குத் தெய்வப் பலத்தை ஏற்படுத்தித் தரும்.
குறிப்பாக தற்போது கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக கீழ்க் காணும் தலங்களை தரிசித்து வழிபட்டு வரலாம்.

பிள்ளைகளுக்காக சில ஆலயங்கள்... வழிபாடுகள்...
பிள்ளைகளோடு நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். இதனால் பிரச்னைகள், தடைகள் ஆகியவை குறையும் பிள்ளைகளிடம் நல் ஒழுக்கங்கள், தைரியம் அதிகரிக்கும். அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் சனி பகவானை தரிசித்து வழிபட்டு வருவதால், சனிக் கிரகத்தால் ஏற்படும் பாதிப்பு கள் விலகும். சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி சனிபகவானை வழிபடலாம். இதனால் சனிக்கிரக சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். மந்த நிலை நீங்கி பொறுப்பு உணர்வு அதிகரிக்கும்.
கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரத்தில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை தரிசித்து வரலாம். இதனால் பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வமும், நினைவாற்றலும், பெற்றோர் மற்றும் ஆசிரி யரிடம் பணிந்து செல்லும் தன்மையும் உண்டாகும். நேர் மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஒருமுறை குடும்பத்துடன் கூத்தனூர் சென்று, அங்கே கோயில் கொண்டிருக்கும் சரஸ்வதிதேவியைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; உங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியில் ஆர்வம் மேலோங்கும்; நல்ல நினைவாற்றலும் மன அமைதியும் வாய்க்கும். எதிர்காலம் குறித்த தீர்க்கமான பார்வையும் திட்டமும் உருவாகும்.