Published:Updated:

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் சம்பந்தமான தானங்களை வீட்டில் வைத்துத் தரக் கூடாது. பொது இடத்தில் கொடுங்கள்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் சம்பந்தமான தானங்களை வீட்டில் வைத்துத் தரக் கூடாது. பொது இடத்தில் கொடுங்கள்.

Published:Updated:
சனிப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

சந்தோஷம் பெருகும்

மேஷ ராசிக்கு, தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாமிடத்துக்குச் செல்கிறார் சனி பகவான். 2020 ஜனவரி மாதம் 24-ம் தேதி நடக்கும் இந்த சனிப்பெயர்ச்சியில், கேந்திர வீடான பத்தாம் வீட்டுக்கு சனி நகர்கிறார். இந்தப் பெயர்ச்சி மேஷ ராசிக்கு நல்ல பலன்களை மட்டுமே தரும்.

இன்னொரு நல்ல விஷயமாக இந்த சனிப்பெயர்ச்சியின் முதல் ஒரு வருடகாலம் குரு, ராகு ஆகியவற்றின் நிலைகள் மேஷத்துக்கு அதிர்ஷ்டம் தரும் நிலையில் இருக்கின்றன. அதிலும் ஒன்பதுக்குடைய குருவும், பத்துக்குடைய சனியும் ஆட்சி நிலையில் இருப்பது யோகம் ஆகும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேலும், யோகாதிபதி குரு 9-ல் வலுவாக அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் மூன்றாமிடத்தில் ராகு அமர்ந்து நல்ல பலன்களைத் தந்து கொண்டிருப்பதும் வெகுயோக அமைப்பு. அடுத்து வரும் சில மாதங்கள் மேஷத்துக்கு மிகவும் யோகமாக அமையும். மேஷ ராசிக்கு நல்ல வருமானம் வரும் நிலை, லட்சியங்கள் நிறைவேறும் சூழல், வீடு வாங்குதல், தொழில் மற்றும் இடமாற்றம் சார்ந்த விஷயங்கள் சாதகமாகும்.

வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடு, கணவன் - மனைவி பிரிவினை, பங்குதாரர்களுடன் தகராறு, சொத்துப் பிரச்னை, ஆரோக்கியக் குறைவு போன்ற எதிர்மறையான பலன்கள் அனைத்தும் இனி மாறும்; சாதகமான விஷயங்கள் நடக்கும்.

சுயதொழில் செய்வோருக்குப் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவை உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன்கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். அரசுத் துறையினருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். எனினும், தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

மற்றபடி, குடும்பத்தில் பிரச்னைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுசேரும் சூழல் உண்டாகும். சிலர், தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையைச் சந்திப்பீர்கள். விவாகரத்து ஆனவர்களுக்கு, இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தென்படும். பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.

மேஷ ராசிக்காரர்கள், இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் முதல் வருடத்தில் மட்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் லாபம் உண்டு. உங்களில் சிலருக்கு எதிர்பாராத யோகம் உண்டு. சிலருக்குப் புதையல் கூட கிடைக்கும். ஆனால், சனிப்பெயர்ச்சிக் காலத்தின் பிற்பகுதியான ஒன்றரை வருட காலம், ஏமாற்றத்தைத் தருவதாக அமையலாம்; எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது நலம்.

பரிகாரம்: சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திர நாளன்று, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றைத் தானம் தரலாம். சனி பகவான் சம்பந்தமான தானங்களை வீட்டில் வைத்துத் தரக் கூடாது. பொது இடத்தில் கொடுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிஷபம்

இனி எல்லாம் இன்பமே

ரிஷபத்துக்கு நல்லது செய்யும் சனிப்பெயர்ச்சி இது. கடந்த மூன்று வருடங்களாக உங்களுக்கு எல்லா விஷயங்களிலும் தடைகளையும், தாமதத்தையும் கொடுத்துக்கொண்டிருந்த அஷ்டமச் சனி, இந்தப் பெயர்ச்சியின் மூலம் விலகுகிறது. ரிஷப ராசி இளைஞர்களுக்குத் தடைகள் அனைத்தும் விலகி மேன்மையான நல்ல பலன்கள் நடக்கும். இந்தப் பெயர்ச்சியின் மூலமாக நீங்கள் தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். தேவையான அனைத்தும் இப்போது கிடைத்தே தீரும். இதுவரை தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவை இனி தாமதமின்றி கிடைக்கும்.

இனி, அதிர்ஷ்டம் உங்களுக்குக் கைகொடுக்கும்; முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களைத் தரும். அரசு ஊழியர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. காவல் துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலதிகாரிகள் உதவி செய்வார்கள். உங்களின் பணியாள்களும் ஒத்துழைப்பு தருவார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கெனவே எழுதி, முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. ரிஷப ராசிப் பெண்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியால் நன்மைகள் அதிகம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

எல்லா வகையிலும் உங்களை மேன்மைப்படுத்தக்கூடிய அமைப்பில் கிரகங்கள் இருப்பதால், ரிஷப ராசியினர் இனிமேல் தயக்கங்களை உதறித் தள்ளி, தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி, எதையும் தைரியமாக முன்னெடுத்து, வேலைகளை ஆரம்பித்தால் அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

பரிகாரம்: உங்களின் ஜன்ம நட்சத்திர நாளில் அல்லது ஒரு சனிக்கிழமையன்று மதியம் சனி ஹோரையில், அருகிலுள்ள முதியோர் இல்லம் அல்லது அநாதை விடுதிக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு அளியுங்கள். உங்கள் கையாலேயே பரிமாறுவது மிகச் சிறப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிதுனம்

நிதானம் தேவை

சென்ற முறை ஏழாமிடத்தில் அமர்ந்து கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு, மனச் சங்கடங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த சனி, தற்போது அஷ்டமச்சனி எனும் நிலை பெறுகிறார். அஷ்டமச் சனி என்றவுடன் ஒரு பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால், இந்த நிலையைச் சமாளிக்கும் நல்ல விஷயமாக, கடந்த மாதம் முதல் குரு பகவான் 7-ம் இடத்துக்கு வந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இது மிதுனத்துக்கு நல்ல அமைப்பு.

ஜோதிட சாஸ்திரத்தில் `கோசார வேதை’ எனும் ஒரு நிலை உண்டு. இதன் அர்த்தம் ஓர்இடத்தில் நல்லதையோ, கெட்டதையோ தர இருக்கும் ஒரு கிரகத்தின் பலனை, குறிப்பிட்ட இன்னோர் இடத்தில் இருக்கும் கிரகம் மாற்றும் என்பதே.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

8-ல் இருக்கும் ஒரு பாப கிரகத்தை, கெட்ட பலன்களைத் தராமல் செயலற்றுப்போக வைக்கவேண்டுமெனில், 7-ம் இடத்தில் ஒரு கிரகம் இருக்கவேண்டும் என்பது கோசார வேதை விதி. அதன்படி அஷ்டமச் சனியால் பாதிக்கப்பட இருக்கும் மிதுன ராசிக்கு, குரு பகவானின் அமைப்பு கேடயமாக இருக்கும். உங்கள் ராசிக்குப் பாக்கியங்களைத் தரக்கூடிய சனி தனது சொந்த வீட்டிற்கு மாறுவதாலும், மிதுனத்துக்கு அவர் யோகாதிபதி என்பதாலும், தாங்க முடியாத அளவுக்குக் கெடு பலன்கள் ஏற்படாது. அதேநேரம் ராகுவும் உங்களுக்குச் சாதகமற்ற அமைப்பில் இருப்பதால், தொழிலில் தற்போது ரிஸ்க் எடுக்கவேண்டாம்.

அஷ்டமச் சனி நடைபெறும் நேரத்தில் பணமின்றி கஷ்டங்கள் ஏற்படலாம். எனவே, வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. இளைஞர்களுக்கு, வயதுக்கேயுரிய சில விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டு, அதன் மூலம் சில பிரச்னைகள் தலைதூக்கலாம். ஆகவே, மிகவும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். வாழ்க்கைத் துணையிடம் பேசும்போது கவனமாக இருங்கள்; முக்கியமாக இந்தக் காலகட்டத்தில் ஈகோ வேண்டவே வேண்டாம். போட்டி, பந்தயங்கள், ரேஸ் போன்றவை கை கொடுக்காது. பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலைகாட்டாமல் இருப்பது நல்லது. தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் தவறான பலன்களை அளிக்க வாய்ப்பு உண்டு. ஆகவே, எந்தவொரு விஷயமாக இருந்தாலும் வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்வது நல்லது.

பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள ஈஸ்வரன் கோயிலில் அருளும் கால பைரவருக்கு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அனுமனின் சந்நிதியில் சனிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றுங்கள். அஷ்டமச்சனியின் கடுமை குறையும்.

கடகம்

தொழிலில் மேன்மை

டக ராசிக்கு சனி ஏழாமிடத்திற்குச் செல்கிறார். கடந்த காலத்தில் சனிபகவான் நிலை கொண்டிருந்த ஆறாமிடம் யோகமான இடம். தற்போது மாறியிருக்கின்ற ஏழாமிடம் நல்ல பலன்களைத் தரக் கூடிய இடம் இல்லை.

ஆயினும் கோசார பலன்கள் என்பவை, ஒன்பது கோள்களின் இருப்பிடத்தையும் கணித்து சொல்லப்பட வேண்டியவை. அந்த வகையில் பலன் சொல்ல முற்படும்போது, இன்னும் சில மாதங்களுக்கு 6, 12-ம் இடங்களிலுள்ள ராகுவும் கேதுவும் கடகத்திற்கு யோகங்களை தருகின்ற விதத்தில் அமைந்திருப்பதால், இன்னும் சில காலத்துக்கு கோசார பலன்கள் கடகத்துக்குச் சாதகமாகவே இருக்கும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

தற்போது சனிபகவான் தனது சொந்த வீட்டில் ஆட்சி நிலை பெறப்போவதாலும், அடுத்த வருடம் சுபரான குருவுடன் இணைந்து சுபத்துவம் அடையப் போவதாலும் கடகத்துக்கு நிச்சயமாக கெடுபலன்களைத் தரப்போவது இல்லை. சனியின் தனிப்பட்ட குணமான பிடிவாதம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிலும் வளைந்துகொடுக்க மாட்டீர்கள். சனியின் பார்வை உடல், மனம் இரண்டையும் இறுக்கமாக்கும் என்பது விதி.

சனியின் பார்வை இனம் புரியாத கவலைகளைக் கொடுத்து மனத்தையும் உடலையும் அலைக்கழிக்கும் என்பதால், சகல விஷயங்களிலும் கடகத்தினர் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.சிலருக்கு ஆன்மிக உணர்வுகள் அதிகமாகும். வெகுநாள்களாக தரிசிக்கவேண்டும் என்று நீங்கள் மனத்தின் நினைத்திருந்த தலங்களுக்குச் சென்று திருப்தியுடன் வழிபட்டு வருவீர்கள். ஞானிகளின் ஆசியும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதை இருக்கும். வியாபாரிகளுக்குத் தொழில் நல்லபடியாக நடக்கும். ஆர்டர்கள் நிறைய கிடைத்து மேன்மை அடைவீர்கள். சகோதர - சகோதரிகள் வழியில் உங்களுக்குச் செலவுகள் இருக்கலாம்.

சனிபகவானின் பார்வை நான்காம் வீட்டில் விழுவதால் வீடு, வாகனம், உயர்கல்வி போன்ற விஷயங்களில் சில எதிர்மறை பலன்களும், சாதகமற்ற நிலைகளும் இருக்கும். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் வரும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வரும் என்றாலும் பிரச்னைகள் தீவிரமாகாது. சிலர், வேலை விஷயமாக மனைவியைப் பிரிந்து வெளிமாநிலத்துக்கோ, வெளி நாட்டுக்கோ செல்வீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்குத் திருமணம் நடக்கும். ஏற்கெனவே மணமாகி முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு, இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக தொடங்கும். பங்குச் சந்தை விவகாரங்களில் கவனமாக இருங்கள். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் துறைகளில் முதலீடு செய்யவேண்டாம்.

சனி ராசியைப் பார்ப்பதால், எண்ணத்தில் தடுமாற்றம் உண்டாகி தவறான முடிவு எடுக்க வாய்ப்பு உண்டு; கவனம் தேவை. குறிப்பாக பண விவகாரங்களில் கவனமாக இருங்கள். அடுத்தவர் கடனுக்குப் பொறுப்பேற்பதும் இப்போது வேண்டாம். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, மிதமான நற்பலன்களை கடகத்துக்குத் தரும் என்பது உறுதி.

பரிகாரங்கள்: சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் ஐயப்ப பக்தர்கள் நான்கு பேருக்கு கருப்பு வேட்டி - துண்டு தானம் செய்யுங்கள்; ஐயனின் அருளால் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

தடைகள் நீங்கும்

சிம்மத்துக்கு யோக காலம் ஆரம்பிக்க இருக்கிறது. தொட்டது துலங்கும் காலம் வந்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வர இருக்கும் - நன்மைகளைத் தரக் கூடிய ஆறாமிடத்துச் சனி, சிம்மத்துக்கு அமைய உள்ளது.

ஆம், சிம்மத்தினர் எதிலும் வெற்றி பெறும் நேரம் இது. இந்த சனி மாற்றத்தினால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற சங்கடங்கள் அனைத்தும் விலகி, நிம்மதியான சூழ்நிலை உங்களுக்கு அமைய இருக்கிறது.

கடந்த காலங்களில் மகன்-மகளால் ஏற்பட்ட மன வருத்தங்களும் நீங்கும். மகனுக்கோ, மகளுக்கோ... `நீண்ட காலமாக திருமணம் ஆகவில்லையே, வீட்டில் எந்தவித சுப காரியங்களும் நடக்கவில்லையே, படித்து முடித்தும் குழந்தைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே’ என்று வேதனைப்பட்டவர்களின் குறைகள் தீரும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

இந்த சனிப் பெயர்ச்சியின் மூலமாக சிம்ம ராசிக்காரர்கள் ஒரு புதிய உத்வேகம் தரும் சூழலில் அடியெடுத்து வைக்க இருக்கிறீர்கள். பிறந்த ஜாதகப்படி யோகமான தசாபுக்திகள் உங்களுக்கு நடக்குமாயின், எதிர்கால வெற்றிக்கான அஸ்திவாரட்தை இப்போதே அமைப்பீர்கள். சனி அதற்கு உதவுவார்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்கள் கடன் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் எதிர்ப்புகளையும் போட்டிகளையும் சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் விலகும். ஆரோக்கியம் இல்லாதவர்களின் உடல்நலம் மேம்படும்.

வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி, நடப்பவை அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதி பிறக்கும்; மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மணவாழ்வில் பிரச்னைகள் தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும்.

சிம்ம ராசிப் பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களை அதிகம் தரும். இதுவரை உங்களைப் புரிந்துகொள்ளாத கணவர், இனி உங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகளும் உங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்வார்கள். கூட்டுக்குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானுக்கு எள் முடிச்சித் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு பொருளுதவி செய்யுங்கள்; சகல நன்மைகளும் உண்டாகும்.

கன்னி

கவலை இல்லை இனி

ன்னி ராசிக்கு தற்போது சனி பகவான் ஐந்தாமிடத்துக்குச் செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய மாற்றம். `சனி ஐந்தில் இருப்பது நல்ல நிலை’ என்று நம் மூலநூல்களில் சொல்லப்படாவிட்டாலும், கடந்த மூன்று ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு நான்கில் அமர்ந்து, தனது கெடுதலான பார்வையின் மூலம் நிம்மதியில்லாத சூழல்களை உருவாக்கி வந்தார் சனி. இனி அந்த நிலை மாறும்.

இளம் பருவத்தினருக்கு வேலையில் நிம்மதி இல்லாத சூழ்நிலையும், சிலருக்கு வேலையே இல்லாத நிலைமையும், தகுதி மற்றும் திறமைக்கேற்ற பணி அமையாத நிலையும் இருந்து வந்தது. இனி, அந்த நிலைமை முற்றிலுமாக விலகி நிம்மதியைப் பெறப்போகிறீர்கள்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

சொந்த வாழ்விலும் மன இறுக்கம் நீங்கும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு, குடும்பத்தில் மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குழப்பம், பொருளாதாரச் சிக்கலினால் சண்டை, குழந்தைகளால் மனவேதனை போன்ற அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. இதுவரை தன்னம்பிக்கை இல்லாமலும் தாழ்வு மனப்பான்மையில் உழன்றவாறும் இருந்த கன்னி ராசியினர், இப்போது நம்பிக்கையோடு செயல்படத் தொடங்குவார்கள். எதையும் சந்திக்கும் துணிச்சல் பிறக்கும். புத்துணர்ச்சியோடு வலம் வருவீர்கள்.

எனினும், பிள்ளைகள் விஷயத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றமுடியாத சூழல் உருவாகலாம். பருவ வயதுக் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய படிப்பு, வேலை போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டியது மிக அவசியம். அவர்களுடைய பருவக்கோளாறு பிரச்னைகளை உண்டாக்கலாம். அன்புடன் அவர்களை வழிநடத்துங்கள்.

இந்த ராசிக்காரர்களில், இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்குப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கி நிம்மதி வாய்க்கும். எனினும் சகல பணிகளிலும் அதீத கவனத்துடன் ஈடுபடவேண்டும். கடந்த காலத்தில் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சனி இருந்ததால் ஆரோக்கியக் குறைவையும் உடல்நலப் பிரச்னைகளையும் சந்தித்தவர்கள், சீக்கிரமாக குணமடைவார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்குப் பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற நல்ல பலன்கள் உண்டு. நினைத்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கள். மொத்தத்தில், கன்னி ராசிக்கு எதிர்கால முன்னேற்றத்துக்கு அடித்தளம் போடும் காலம் இது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அல்லது ஜன்ம நட்சத்திர நாளில் அன்னதானம் அளிப்பதும், சிவாலயங்களில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதும் சிறப்பு. அனுதினமும் காகத்துக்கு அன்னமிடுங்கள்; சனி பகவான் மகிழ்ந்து அருள்புரிவார்.

துலாம்

துன்பங்கள் நீங்கும்

துலாம் ராசிக்கு, சனி நான்காம் இடத்துக்கு மாறுகிறார். இது அர்த்தாஷ்டமச் சனி எனும் நிலை. எனினும் துலாம் ராசிக்குச் சனி நான்கு, ஐந்துக்குடைய ராஜ யோகாதிபதி என்ற நிலையில், தற்போது அவர் ஆட்சி எனப்படும் நிலையை அடைவதால், கெடுபலன்கள் இருக்காது. சொல்லப்போனால் உங்களின் ராஜ யோகாதிபதியான சனி சுபத்துவ நிலையில் ஆட்சி பெறுவதால், உங்களுக்குச் சில நன்மைகளைத் தருவார் என்பதே உண்மை.

மேலும் மற்ற கிரகங்கள் வலுவாக இருப்பதால், வரப்போகும் காலம் துலாம் ராசியினருக்கு நல்லவிதமாகவே அமையும். ஆகவே, துணிச்சலுடனும் துடிப்புடனும் செயல்பட்டால், வாழ்க்கையில் சிறப்பான நிலைமைக்கு வருவீர்கள் என்பது உறுதி.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

அதேநேரம், இந்த வருடம் முழுமைக்கும் குருவின் இணைவின்றி தனித்திருக்கும் சனி, தனது பார்வையால் பத்தாமிடத்தையும் உங்கள் ராசியையும் பார்க்கிறார். ஆகவே, பணிபுரியும் இடங்களில் மாற்றங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். அலுவலகத்தில் எவரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

வீண் வாக்குவாதம், அரசியல் பேச்சுக்கள் போன்றவை வேண்டவே வேண்டாம். சுயதொழில் செய்பவர்களும் வியாபாரிகளும் தொழிலை விரிவாக்கம் செய்வது, புதிய கிளைகள் தொடங்குவது, இன்னும்பிற புதிய முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் நன்கு யோசித்து செயல்படவேண்டும். கேதுவின் தயவினால் பண வரவு சிறப்பாக இருக்கும் என்பதால், எத்தகைய சிக்கலையும் சுலபமாக சமாளிக்க முடியும். எனவே, சகல காரியங்களிலும் முன்யோசனை மற்றும் பெரியோர்களினி ஆலோசனையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். சுபத்துவமற்ற சனி ராசியைப் பார்ப்பதால், உங்களுடைய குணங்கள் சற்று மாறுபடும். இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சற்று முரண்பாடானவராக, பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்துகொடுக்க மாட்டீர்கள். அவசியம் இல்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவதும் கியாரண்டி தருவதும் இப்போது கூடாது. வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

எக்காரணம் கொண்டும் எப்படியான நெருக்கடி ஏற்பட்டாலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது கூடாது. தொழில் தொடங்குவதையும் தவிருங்கள். அதேபோல், இருக்கும் வீட்டை விற்றுவிட்டு புது வீடு வாங்கும் திட்டமும் இப்போது வேண்டாம். `நான்காம் வீட்டுச் சனி, சொந்த வீட்டிலிருந்து விலகச்செய்து வாடகை வீட்டில் இருக்க வைப்பார்’ என்பார்கள்! வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் தடைகள் ஏற்படும். ஆகவே, பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் பிள்ளைகள் அடிக்கடி விடுமுறை எடுப்பதைத் தவிர்க்கவும்.

வியாபாரிகளுக்கு வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைக்காரர்களை நம்பவேண்டாம். விவசாயிகளுக்கும் கிராமப்புறத்தில் சிறுதொழில் புரிவோருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்குச் சிக்கல்கள் இருக்காது.

பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் பரம்பொருளின் அருளினால் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். அத்துடன், பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு, இந்த கோசாரக் குறைகள் பெரிதாக பாதிக்காது. ஆகவே, கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் வியாழக் கிழமையன்று தக்ஷிணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் நல்லது.

விருச்சிகம்

நினைத்தது நடக்கும்

விருச்சிகத்துக்கு இப்போது விடிவு வந்துவிட்டது. இந்த சனி மாற்றத்துடன் ஏழரைச் சனி உங்களிடமிருந்து விலகுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடியப் போகின்றன.

இதுவரை வாழ்க்கையில் நிலைகொள்ளாத இளைய பருவ, மற்றும் நடுத்தர வயது விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க இருக்கின்றன. எந்தெந்த விஷயங்களில் இதுவரை உங்களுக்குத் தடைகள் இருந்தனவோ அவை அனைத்தும் இப்போது விலகும். இதுவரையிலும் கிடைக்காத பாக்கியங்கள் இனி கிடைக்கும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் சந்தோஷம் தெரியும். மனத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மை விலகும். இந்தப் பெயர்ச்சிக்குப் பிறகு, புதிய மனிதனாக உணர்வீர்கள்.

உங்களின் அந்தஸ்து, மதிப்பு அனைத்தும் உயரும். அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது; நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுக்திகள் நடந்துகொண்டிருந்தால், சாதனைகளைப் படைத்து புகழின் உச்சிக்குச் செல்வீர்கள் என்பது உறுதி. உங்களுடைய மனத்தைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள்.

சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம் இது. எனவே, தயக்கத்தையும் யோசனைகளையும் உதறித் தள்ளிவிட்டுச் சுறுசுறுப்பாக வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தால், வெற்றி கொடி நாட்டலாம். வேலை கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு, அவர்களின் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாகக் கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரையிலும் கைக்கு வராமல் தடைப்பட்டிருந்த தொகை வந்து சேரும்.

வீட்டில் தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனி சிறப்பாக நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, விரைவில் குழந்தைப்பேறு வாய்க்கும். பிரச்னைகளால் பிரிந்திருந்த தம்பதியர் இனி ஒன்றுசேர்வர். விவாகரத்து ஆனவர்களுக்கு, இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

வம்பு வழக்குகள் தீர்ந்து நல்ல வழி பிறக்கும். வீடு கட்டுவது போன்ற சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் மனத்துக்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் பெயர்ச்சியாகும். உறவுகள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்தவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம்: திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, `இனிமேல் எனக்கு ஒரு குறையும் வர வேண்டாம்’ என்று அனைத்தையும் காக்கும் எம்பெருமான் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரரையும் அன்னையையும் வேண்டி வழிபட்டுத் திரும்புங்கள்.

தனுசு

நிம்மதி பிறக்கும்

னுசு ராசிக்காரர்களுக்குத் துயரங்களைத் தீர்த்துக் கரை சேர்க்கும்விதமாக 2020 ஜனவரி மாதம் 24-ம் தேதி நடக்கும் சனிப்பெயர்ச்சி அமையும். கடந்த மூன்றாண்டுகளில் கடுமையான சோதனைகளை அனுபவித்துவிட்டீர்கள். ஜன்மச்சனியின் தாக்கத்தினால் வேலையைப் பறி கொடுத்தவர்கள், தூக்கம் தொலைத்தவர்கள், கடன் தொல்லையில் அவஸ்தைப்பட்டவர்கள், உடல்நலம் கெட்டவர்கள்... இன்னும் பல சொல்ல முடியாத பிரச்னைகளில் சிக்கித் தவித்த இந்த ராசிக்காரர்கள், இனிமேல் நிம்மதி பெறுவீர்கள்.

ஏழரைச்சனி முழுமையாக நீங்கவில்லை என்றாலும், மூன்று பிரிவாக அமையும் சனியின் தாக்கத்தில், நடுப் பகுதியான ஜன்மச் சனி எனப்படும் இரண்டரை ஆண்டு காலமே கடுமையான கெடுபலன்களைத் தரும் என்பதால், இனி உங்களுக்குச் சோதனைகள் எதுவும் நடக்காது என்பது உறுதியான ஒன்று.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

நீங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பான நிலையை அடைய இந்த சனிப்பெயர்ச்சி துணை நிற்கும். முப்பது வயதுகளில் இருப்பவர்கள், இனி நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.

இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும், மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களைப் புரிந்துகொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள், தற்போது நெருங்கி வருவார்கள். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கும்.

தாமதமாகி வந்த எல்லா பாக்கியங்களும் கைகூடும். சிக்கலில் ஆழ்த்திக்கொண்டிருந்த கடன் தொல்லை ஒழியும், பணப் பிரச்னை தீரும். கஷ்டங்களைக் கொடுத்து வந்த மகன், மகளின் பிரச்னைகள் தீர்ந்து, அவர்கள் விஷயத்திலும் நிம்மதி அடைவீர்கள்.

மகன், மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்துவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். நோய்கள் தீரும். கோர்ட், கேஸ் என்று மன வருத்தங்களில் இருந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடியும். போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும் விலகி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது. அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு உயர்வு உண்டாகும்; சம்பள வருமானம் உயரும். பதவி உயர்வும் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தைச் செல்வம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கை கூடும்; விசா கிடைக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல மாற்றங்களை உணர்வார்கள். செலவுகள் குறையும். விரயங்கள் இருக்காது. வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். தனுசு ராசிக்கு இது முன்னேற்றத்துக்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். மொத்தத்தில், இது அதிர்ஷ்டம் அள்ளித் தரும் சனிப்பெயர்ச்சியாக இருக்கும்.

பரிகாரம்: பாதச் சனி நடப்பில் உள்ளதால், கால பைரவருக்குச் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்; சனியின் கடுமை குறையும். அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மகரம்

வீண் கவலைகள் வேண்டாம்

கர ராசியினர், இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ஜன்மச்சனி எனும் நிலையை அடைகிறீர்கள். இதன்மூலம் முயற்சிகள் பலனளிக்காத ஒரு நிலையை உங்களுக்குத் தர இருக்கிறார், சனி பகவான்.

எனினும், நடுத்தர வயதைக் கடந்தவர்கள்... குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் இளம் பருவத்தில் ஏழரைச்சனியை 1991, 1992, 1993-ம் ஆண்டுகளில் கடுமையாக உணர்ந்தவர்களுக்கு, இந்தப் பெயர்ச்சி பொங்கு சனியாக மாறி நல்ல பலன்களைச் செய்து வாழ்க்கையில் சுபிட்சத்தை தரும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேலும், சனி பகவானே உங்களின் ராசி அதிபதி என்பதால் மற்ற ராசிகளுக்குத் தரும் கெடுபலன்களை அவர் எப்போதும் மகரத்துக்குத் தருவதில்லை. எனவே எதற்கும் கவலை வேண்டாம்.

ராசியில் சனி இருப்பதால் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும். எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது இளைஞர்களுக்கு நன்மையைத் தரும்.

இளைய பருவத்தினர் 2020 ஆகஸ்டுக்குப் பிறகே ஜன்மச் சனியின் பாதிப்புகளை உணர ஆரம்பிப்பீர்கள். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத் தொழில் செய்பவர்கள் எந்த நேரமும் பரபரப்பாக அலைந்துகொண்டிருப்பீர்கள்.

அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகளை நீங்களே வீணடித்துக்கொள்ள நேரிடலாம். நம்பக்கூடாதவர்களை நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க முடியாதபடி கோட்டை விடுவீர்கள்.

உங்களுடைய திறமைகளைப் பிறர் அறியமாட்டார்கள். மனஅழுத்தத்தில் தவிப்பதைத் தவிருங்கள். குடிப் பழக்கம் இருப்பவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்துவது அவசியம். வம்பு, வழக்குகள் வரும் நேரம் இது.

பெண்களுக்கு பணிச் சுமை அதிகமாகும். குடும்பப் பிரச்சினைகளைக் கணவர்-மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக்கொள்வதன் மூலம் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். கடன்கள் வாங்க வேண்டாம். பங்குச்சந்தை முதலீடு போன்றவை கைகொடுக்காது.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்குச் சுமாரான பலன்களைத் தருவதாக அமையும். எல்லாவற்றிலும் விழிப்பு உணர்ச்சியோடு இருந்தால் நன்மையே உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை இரவு சிறிதளவு எள்ளை தலைக்கடியில் வைத்துப் படுத்துக்கொள்ளுங்கள். விடிந்ததும் புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்துக்கு உணவிடுங்கள். நடக்க இயலாத மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோல் வாங்கித் தருவதும் நலம்.

கும்பம்

குறைகள் இனி இல்லை

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் ஏழரைச் சனி ஆரம்பிக்க இருக்கிறது. கும்பம் சனியின் சொந்த ராசியாகும். உங்கள் ராசிக்கு அதிபதியே சனிதான் என்பதால், கடுமையான கெடுபலன்களை சனி தன் கும்பத்துக்குச் செய்வது இல்லை. எனினும் முன்வினைகளுக்கு ஏற்ப சிற்சில அனுபவங்கள் ஏற்பட்டு, அவை உங்களுக்கு வாழ்க்கைப் பாடமாக அமையும்

இந்த ஏழரை ஆண்டு காலம் உங்களுக்குக் கிடைக்கும் எதிர்மறை பலன்களால்தான் பணம் என்றால் என்ன, அதை எப்படிச் சம்பாதிப்பது, வந்த பணத்தை எப்படித் தக்கவைத்துக் கொள்வது போன்ற விஷயங்களைச் சரியானபடி அறிந்துகொள்வீர்கள். மேலும் சுற்றியுள்ள உறவுகள், நட்புகள் எப்படிப்பட்டன, யார் நமக்கு உதவி செய்வார்கள், யார் உதவி செய்வது போல் நடிப்பார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் அடையாளம் காட்டுவதாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

அதேநேரம், முதல் சுற்று சனியின்போது... இளைமை பருவத்தில் சந்தித்த ஏழரைச் சனியால் ஏற்கெனவே வேதனை களை அனுபவித்தவர்களுக்கு, இப்போது இரண்டாம் சுற்றாக வரும் ஏழரைச் சனி கெடுதல்களைச் செய்யாமல், வாழ்க்கையில் நிலைகொள்ளத் தேவையான நன்மைகளையே செய்யும்.

இந்த ராசியைச் சேர்ந்த இளைய பருவத்தினர், இந்த சனி காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமலும், வேலை, தொழிலை நல்லவிதமாக தக்கவைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டுவதும், முக்கிய பணிகளில் மற்றவர்களை நம்பாமல் தானே முன்னின்று கண்ணும் கருத்துமாக ஈடுபடுவதும் மிக அவசியம்.

இளைஞர்கள் தற்போது வேலை, கல்வி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, வேறுபக்கம் கவனத்தைச் சிதற விடாமல் பார்த்துக்கொள்ளவேன்டும். தேவையற்ற, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கங்களிலிருந்தும் கூடா நட்புகளிடமிருந்தும் விலகி, மனத்தை நல்லவிஷயங்களில் திசைதிருப்ப வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், வாழ்க்கை தடம் புரள்வதிலிருந்து தப்பிக்கலாம்.

அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கவனமுடன் வேலை செய்யவேண்டியது அவசியம். உடன் பணிபுரிவோர் எவரையும் நம்பவேண்டாம். அவர்களுடன் கருத்துவேற்றுமைகள் ஏற்படலாம். ஆகவே பேச்சில் கவனமும் பணியில் விட்டுக்கொடுத்தலும் மிக அவசியம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வியாபாரிகள், எல்லோரையும் எல்லா தருணங்களிலும் நம்பி மோசம் போகவேண்டாம். பணிகளை வேலையாள்களிடம் நம்பி ஒப்படைத்தாலும், நீங்களும் தகுந்தபடி மேற்பார்வை செய்வது அவசியம்.

கடன் கொடுப்பதை நாசூக்காகத் தவிர்த்து விடுங்கள். தற்போதுள்ள நிலைப்படி கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதேநேரம் நீங்கள் கடன் வாங்குவதையும் தவிர்க்கவேண்டும். நீங்கள் கடன் வாங்கிய இடத்திலிருந்து உங்களுக்கும் நெருக்கடி வரலாம்.

சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக்கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம். வேலை வாங்கித் தருவதாகச் சொல்பவரை நம்பி பணம் தரவேண்டாம்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் தாங்க முடியாத பணிகளைச் சமாளித்து விட்டு வீட்டுக்கு வந்தால், வீட்டிலும் நீங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்யவேண்டியது இருக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்வதற்கான அனுபவங்களையும் படிப்பினைகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் (அவரவர் வயது எண்ணிக்கையின்படி 25 வயது எனில் 25 தீபங்கள்) செந்நிறத் துணியால் மிளகு முடிப்பு செய்து, மண் அகலில் வைத்து தீபமேற்றவும்.பிள்ளைகளுக்காக பெற்றோர்களும் இதைச் செய்யலாம்.

மீனம்

மனம் மகிழும் காலம்

மீன ராசிக்காரர்களுக்கு 11-ம் இடத்துக்குச் சனி மாறுகிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மீன ராசியினர் மிகவும் மேன்மையான ஒரு காலகட்டத்துக்குள் நுழையப்போகிறீர்கள்.

30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும்... லாப ஸ்தான - பதினொன்றாம் இடத்துச் சனி, தற்போது மீன ராசிக்கு (11-ல்) வருவதால் இன்னும் மூன்றாண்டு காலத்துக்குக் கோசார ரீதியில் மேன்மையான பலன்கள் ஏற்படும் நிலை அமைகிறது.

11-ம் இடத்துச் சனிக்கு நிகரான ஒரு நல்ல அமைப்பாக ராகு-கேது, குரு போன்ற கிரகங்களும் மீன ராசிக்கு நன்மை தரும் நிலையில் அமையவுள்ளன. பிறந்த ஜாதக அமைப்பிலும் நன்மையான தசா, புக்திகள் நடந்துகொண்டிருந்தால், உங்களுடைய முழு வாழ்க்கைக்கும் தேவையான வசதிகளை இந்த மூன்று ஆண்டுகளில் அடையும் அளவுக்கு நன்மைகள் நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்

இதுவரையிலும் எந்தவொரு விஷயத்துக்கும், தேவையான பணத்தைத் திரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தவர்கள், இனி சிறிதளவு முயற்சி செய்தாலெ போதும் பணம் புரளும். நீங்கள் சிறிது முனைந்தாலே போதும் பெரிய அளவில் பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் உணர்வீர்கள். மனத்தில் தன்னம்பிக்கை குடிகொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும்.

தொடர்ந்து பணப் புழக்கம் அதிகரிக்கும்; உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். போட்டி - பந்தயங்கள் கைகொடுக்கும். சுயதொழில் செய்வோருக்கு, முயற்சிகள் கைகொடுக்கும்; தொழில் சூடுபிடிக்கும். பணியாள்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு இது லாபம் வரக்கூடிய காலகட்டமாக அமையும்.

சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இளைய பருவத்தினருக்குத் திருமண காலம் கூடி வந்து விட்டது. மனதுக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணைவர் வந்து சேர்வார். திருமணம் இனிதே நடைபெறும். திருமணம் நடந்து வெகுகாலமாக பிள்ளை இல்லாமல் ஏங்கிக்கொண்டிருந்த இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்களுக்கு, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் விஷயத்திலும் நிம்மதி பிறக்கும்; அவர்களால் உங்களுக்குப் பெருமை சேரும். மகன் மற்றும் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது.

மீன ராசி நேயர்களில், சொந்த வீடு கட்டவேண்டும் என்று காத்திருக்கும் அன்பர்களுக்கு, தடைகள், பணத் தட்டுப்பாடு முதலான பிரச்னைகள் அனைத்தும் விலகி, விரைவில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

கணவன் - மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்குக் கடனை தீர்க்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அன்பர்களுக்கு, இனி தேகநலன் மேம்படும்; மருத்துவச் செலவுகள் குறையும்.

பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மேன்மைகளை அளிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நீங்கி, உங்களுக்கு மேன்மை உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் ஆளுமை மேலோங்கும். உயரதிகாரிகளும், உங்களின் பணியாள்களும் உதவி செய்வார்கள்.

மொத்தத்தில் மீன ராசியினருக்கு, இந்த சனிப்பெயர்ச்சி மட்டுமன்றி, அடுத்து வரும் கிரகப் பெயர்ச்சிகளும் சாதகமாக இருப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

பரிகாரம்: அனுதினமும் உங்களின் இஷ்டதெய்வத்தை தவறாமல் வணங்கிவாருங்கள். இயன்றால் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வாருங்கள். உங்களால் எவருக்கும் எவ்விதத் தீங்கும் பிரச்னைகளும் உண்டாகாதபடி நடந்துகொள்ளுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்; நன்மைகள் பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism