Published:Updated:

கடன், நோய், எதிரிகள் ஆகியன தீரப்போகும் சிம்ம ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சிப் பலன்கள்!

Leo
Leo

சிம்ம ராசிக்காரர்கள் எதைச் செய்தாலும் நல்லவிதமாக, வெற்றிகரமாக முடியக்கூடிய அமைப்பு இப்போது வந்திருக்கிறது. இதைத்தான், `உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது' என்று சொல்வார்கள்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் பலன்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

Leo
Leo

சிம்ம ராசிக்காரர்களுக்கு, திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் உன்னதமான பலன்களை தரக் காத்திருக்கிறது. 2020 புத்தாண்டுப் பலன்கள் கூறும்போதே, 12 ராசிகளில் சிம்ம ராசிதான் அதிகபட்சமான பலன்களை அடையப்போகிறது என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அந்த விதத்தில், இப்போது ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகின்ற இந்த சனிப்பெயர்ச்சி வாயிலாக, அவர்கள் அதி உன்னத பலன்களை அடையப்போகிறார்கள் என்பது நிச்சயம்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு, சிம்மராசிக்கு 6-ம் இடத்துக்கு வரும் சனி பகவான், கடன், நோய் மற்றும் எதிரிகள் இல்லாத ஒரு இன்பமான வாழ்வுக்கு வழிகோலும் விதமாக அமையப் போகிறார்.

ஏற்கெனவே ராகு பகவான் சிம்ம ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். குரு பகவான் 5-ம் இடத்திலிருந்து ஒன்பதாம் பார்வையாக சிம்ம ராசியைப் பார்க்கிறார். கோள்சார ரீதியாக இப்படிப்பட்ட அமைப்பு எப்போதாவது ஒருமுறைதான் ஒரு ராசிக்குக் கிடைக்கும். அந்த அமைப்பு, இப்போது சிம்ம ராசிக்குக் கிடைத்திருக்கிறது.

Planets
Planets

சிம்ம ராசிக்காரர்கள் எதைச் செய்தாலும் நல்லவிதமாக, வெற்றிகரமாக முடியக்கூடிய அமைப்பு இப்போது வந்திருக்கிறது. இதைத்தான், `உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது' என்று சொல்வார்கள்.

2015-ம் ஆண்டிலிருந்து சிம்ம ராசிக்காரர்களுக்கு, கடந்த நான்கைந்து ஆண்டுகளாகப் பெரிதாக நல்ல பலன்கள் எதுவும் நடைபெறவில்லை. `இனி எல்லாம் சுகமே' என்கிற ரீதியில் நல்ல பலன்கள் நடக்கத் தொடங்கும். குறிப்பாக, வேலை இல்லாமல் அவதிப்பட்டுவந்த இளைஞர்களுக்கு நல்ல இடத்தில் வேலை அமையும்.

சிம்ம ராசியினருக்கு வரவிருக்கும் இந்த மூன்று ஆண்டுகளும் அதாவது, 2023-ம் ஆண்டுவரை உங்களுக்கு சிறப்பான பலன்கள் நடக்க இருக்கின்றன. பிறக்கும்போதே ஜாதகத்தில் சிறப்பான அம்சங்களுடன் பிறந்தவர்கள், தங்களுடைய வாழ்நாள் சாதனையை நிகழ்த்தி புகழின் உச்சியை அடையக்கூடிய ஒரு காலகட்டமாக இந்த மூன்று ஆண்டுகள் அமையும்.

உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் தேவையான அளவுக்கு பொருளாதார ரீதியாகச் சம்பாதிப்பீர்கள். உங்களுக்குப் பண வரவு அபரிமிதமாக இருக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, உயர் கல்வியில் தாங்கள் விரும்பிய கல்லூரியில் சேருவார்கள்.

Leo
Leo

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு குறிப்பாக கணிப்பொறித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்துக்குப் பணிமாற்றம் அமையும். முன்னேற்றத்துக்கான வழிகள் இப்போது திறக்கவிருக்கின்றன. ஒரு ஒளிமிக்க எதிர்காலம் உங்களை நோக்கி வரவிருக்கிறது. ஆகவே, நீங்கள் சுறுசுறுப்பாகவும் மனத்தெளிவுடனும் செயலாற்றி வெற்றிகளைக் குவிக்கவேண்டிய ஒரு காலகட்டமாகும். இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்வதும் பயன்படுத்திக்கொள்ளாமல் விடுவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

உங்களின் முழுத்திறமையும் இப்போது வெளிப்பட இருக்கிறது. உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமூகம் போற்றும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவீர்கள். மிக உயர்ந்த அந்தஸ்துடன் ஒரு பெருங்கூட்டத்தில் நீங்கள் தனித்த சிம்மம் போல் வலம் வரப்போகிறீர்கள். தலைமைப் பண்பு மிக்கவர்களாகத் திகழ்ந்து வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

பரிகாரம்:

சிம்ம ராசிக்காரர்களுக்குப் பரிகாரம் தேவையில்லை. ஏனென்றால், அனைத்து கிரகங்களும் இப்போது அவர்களுக்குச் சாதகமான நிலையில் இருக்கின்றன. வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது, `இறைவா எந்த உயிருக்கும் என்னால் எந்தத் துன்பமும் தெரிந்தோ தெரியாமலோ வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டுப் புறப்படுங்கள் உங்களின் காரியங்கள் ஜெயமாக முடியும்.

பின் செல்ல