Published:Updated:

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

சனிப்பெயர்ச்சி பலன்கள்

#Utility

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

#Utility

Published:Updated:
சனிப்பெயர்ச்சி பலன்கள்
சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

மேஷம்:

27.12.2020 முதல் ராசிக்கு 10-ல் வரும் சனி பகவான் இதுவரை சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவார். எதிரும் புதிருமாக இருந்த கணவருடன் மனம்விட்டுப் பேசி ஒன்றுசேருவீர்கள். பிள்ளைகளின் கூடாபழக்கங்கள் விலகும். அவர்களின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சொத்துகளைக் கவனமாகக் கையாள்வது நல்லது. வியாபாரத்தில் இனி கணிசமான லாபம் உண்டு. போட்டியாளர்கள் திகைக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும்கூட சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். முக்கிய ஆவணங்களைக் கவனமாக கையாளுங்கள். இந்த சனிப்பெயர்ச்சி அரைகுறையாக நின்ற அனைத்து வேலைகளையும் முழுமையாக முடிக்கும் திறனையும், செல்வம் - செல்வாக்கையும் அள்ளித் தருவதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

ரிஷபம்: அஷ்டமத்தில் நின்று உங்களை ஆட்டிப்படைத்த சனி பகவான் 27.12.2020 முதல் 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்வார். பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளிலிருந்து மீள்வீர்கள். கடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கை நிறைய சம்பாதிப்பீர்கள். எந்த வேலையிலும் நிரந்தரமாக நிற்காமல் சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் கணவரின் ஒத்துழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் ஆதாயம் கூடும். அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கடினமான வேலைகளையும் சாமர்த்தியமாகச் செய்து முடித்து எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியையும் செல்வவளத்தையும் தருவதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

மிதுனம்:

உங்களின் ராசிக்கு 7-வது வீட்டில் இருந்து கொண்டு அடுக்கடுக்கான தோல்விகளையும், நஷ்டங்களையும், தனிமையையும் தந்த சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமர்வதால் இனி நல்லதே நடக்கும். அனைத்துச் செயலையும் முழுமையாக முடிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார். உங்கள் வேலையையும் இழுத்துப் போட்டுச்செய்வார். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு நிச்சயம். புதிய வாய்ப்புகளால் பரபரப்புடன் காணப்படுவீர்கள். சம்பள பாக்கிகள் கைக்கு வரும். இந்த சனிப்பெயர்ச்சி சகிப்புத் தன்மையையும் பணப்புழக்கத்தையும் தருவதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

கடகம்: இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் 7-வது வீட்டில் நுழைந்து என்ன பலன் தரப் போகிறார் என்று பதற்றப்படாதீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் செலவுகளும் அலைச்சலும் வரும். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ள வேண்டாம். பணத்தைத் தாராளமாகச் செலவு செய்யாமல் உங்களுக்காகவும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். தந்தை வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து போகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முதலீடுகள் வேண்டாம். வாடிக்கையாளர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். இந்த சனிப்பெயர்ச்சி வளர்ச்சியடையச் செய்வதுடன் அனைத்திலும் முதலிடம் பிடிக்கவைப்பதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

சிம்மம்:

உங்களின் பூர்வபுண்ணிய வீடான 5-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை சிரமப் படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் அதிரடி யோகங்களைத் தருவார். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். கரடுமுரடாகப் பேசிய கணவர் இனி பாசமாகப் பழகுவார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உறவினர்களிடம் நிலவிய ஈகோ பிரச்னை நீங்கும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் மறைமுகமாகத் தொல்லை கொடுத்தவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். இந்த சனி மாற்றம் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

கன்னி: இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு பலவகையிலும் உங்கள் முன்னேற்றங்களைத் தடை செய்த சனி பகவான் 27.12.2020 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். உங்களுக்குள் அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். மனோபலம் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவரின் குறைநிறைகளை சுட்டிக் காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கில்விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் இருந்த இக்கட்டான நிலை மாறும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் கடின உழைப்பைக் கண்டு அதிசயிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த சனி மாற்றம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிக்கொணர்வதுடன் கௌரவம், புகழையும் தரும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

துலாம்: உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்து தைரியத்தையும் விடாமுயற்சியையும் தந்த சனி பகவான் சுக வீடான 4-வது வீட்டில் 27.12.2020 முதல் அமர்வதால் அர்த்தாஷ்டமச்சனியாச்சே என்றெல்லாம் பயப்படாதீர்கள். சனி பகவான் ஆட்சிபெற்று அமரப் போகிறார். அவர் 4-வது வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். கெடுபலன்கள் குறையும். முடங்கிக்கிடந்த பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். என்றாலும் உறவினர்களுடன் கணவருடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாமியார், மாமனாரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத துறையில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கோபப்படுவது நல்லதல்ல. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். இந்த சனிப் பெயர்ச்சி நல்லது கெட்டது என்று அனைத்தையும் கற்றுத்தரும் பாடசாலையாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

விருச்சிகம்:

இதுவரை பாதசனியாக அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் தொல்லைப்படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் ராஜயோகம் தரும் வீடான 3-ம் வீட்டில் அமர்ந்து, திடீர் யோகங்களை வாரி வழங்குவார். எதைத் தொட்டாலும் இழுபறியாகவே இருந்த நிலை இனி மாறும். ஏமாற்றங்களிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக விடுபடுவீர்கள். கணவருடன் நீடித்த மௌனயுத்தம் மாறும். மனம்விட்டுப் பேசுவீர்கள். சொத்தை விற்றும் பணம் வராமல் தடைப்பட்ட நிலை நீங்கும். வருங்காலத்துக்காகச் சேமிப்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் புண்ணியதலங்களுக்குச் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவீர்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசாங்கத்தால் ஏற்பட்ட கெடுபிடிகள் விலகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். இந்த சனிப்பெயர்ச்சி திணறிக்கொண்டிருந்த உங்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

தனுசு:

இதுவரை ஜென்ம சனியாக இருந்து உங்களை புயலைப்போல் புரட்டிப்போட்ட சனி பகவான், 27.12.2020 முதல் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அடிமனதில் இருந்த அச்சம் விலகும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல உறவு நீடிக்கும் என்றாலும் சனி பகவான் இப்போது 2-ம் வீட்டுக்கு வருவதால் கணவருடன் வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் வர வாய்ப்பிருக்கிறது. உறவினர்களுடன் நிதானமாகப் பேசுங்கள். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். உங்களின் லாப வீட்டை சனி பகவான் பார்ப்பதால் திடீர்ப் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. வியாபாரத்தில் முன்பு ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். நல்ல பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். கூட்டுத்தொழிலில் முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி பணிவாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிட்டும். சக ஊழியர்கள் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொண்டு நட்புறவாடுவார்கள். வீண் வதந்தி, விமர்சனங்களிலிருந்து விடுபடுவீர்கள். இந்த சனி மாற்றம் அசுர வளர்ச்சியையும், பணவரவையும், எங்கும் எதிலும் வெற்றியையும் தருவதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

மகரம்: இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்துகொண்டு பலன்களைத் தடுத்த சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து நற்பலன்களைத் தரப்போகிறார். கட்டுக்கடங்காத செலவுகளும் அடுக்கடுக்காக ஏற்பட்ட பிரச்னைகளையும் சிரமமின்றி சந்திப்பீர்கள். தண்ணீரும் தாமரை இலையுமாக ஒட்டாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். எதிலும் தெள்ளத்தெளிவாக முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள், அல்லாதவர்கள் யாரென்பதை உடனே புரிந்துகொள்வீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. ஜென்மச்சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவர்வழியில் கொஞ்சம் அலைச்சலும் செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் உறவினர்களால் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். இந்த சனி மாற்றம் சங்கடங்கள், சவால்களில் வெற்றியையும் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

கும்பம்:

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று ஓரளவு நல்ல பலன்களைத் தந்த சனி பகவான் 27.12.2020 முதல் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார். 12-ம் வீடான விரய வீட்டில் இப்போது நுழைந்தாலும் அங்கு ஆட்சி பெற்றிருப்பதால் உங்களுக்கு நல்லதையே செய்வார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாமல் திண்டாடிய நிலை ஓரளவு மாறும். எலியும் பூனையுமாக இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். கணவர் உங்கள் பணிகளுக்கு உதவியாக இருப்பார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும் செலவுகளும் இருக்கும். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திடீர்ப் பயணங்கள், அலைச்சல்கள் குறையும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வரவு உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்ந்து வேலைப்பளு அதிகரிக்க செய்யும். மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப்பார்க்க வேண்டிவரும். உங்களுக்கு எதிராகச் சிலர் சதித்திட்டம் தீட்டினாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி பிரச்னைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவதாகவும் அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 27.12.2020 முதல் 19.12.2023 வரை

மீனம்:

இதுவரை 10-ம் வீட்டில் நின்ற சனி பகவான் 27.12.2020 முதல் லாப வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார். எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறும். குடும்ப வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். பாதியிலேயே நின்று போன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவர் உங்களின் தியாக உணர்வைப் புரிந்துகொள்வார். அந்நியோன்யம் அதிகரிக்கும். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் நீடித்த அவலநிலையெல்லாம் மாறும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். கூட்டுத்தொழிலில் தொந்தரவு கொடுத்த பங்குதாரர்களை மாற்றிவிட்டுப் புதியவர்களைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவந்த நிலை மாறும். இழந்த சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள். உங்களை அலைக்கழித்த நிறுவனமே புது வாய்ப்பு கொடுக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். இந்த சனி மாற்றம் உங்களை வெளியுலகுக்கு அழைத்து வருவதுடன், புதிய தொடர்புகளையும் வசதி வாய்ப்பையும் அதிகப்படுத்துவதாக அமையும்.