சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

‘அரசியலில் மாற்றம் வியாபாரத்தில் மேன்மை!’ - திருக்கணித சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் - 2023

சனிப்பெயர்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
சனிப்பெயர்ச்சி

- ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

மானுடப் பிறப்பின் வினைகளைக் கழிக்க அருள்செய்யும் கிரக மூர்த்தி யார் என்றால், அது சனிபகவான்தான். நீதிமானாகச் செயல்பட்டு அவரவரின் முன்வினைகளுக்கு ஏற்ப உரிய பலாபலன்களைக் கொடுத்து, மனித வாழ்வுக்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்தும் கிரக மூர்த்தி சனீஸ்வரர். கிரகங்களில் மெள்ள நகர்பவர். அவரைச் சனைச்சரன் என்று போற்றுகின்றன ஞான நூல்கள்.

‘அரசியலில் மாற்றம் வியாபாரத்தில் மேன்மை!’ - திருக்கணித  சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் -  2023

யுளுக்குக் காரகன் சனி பகவான். மேலும் கட்டுப்பாடு, தடை, பொறுப்பு, தாமதம், லட்சியம், தலைமை, செல்வாக்கு, அதிகாரம், ஒற்றுமை, அனுபவ அறிவு, பற்றற்ற நிலை ஆகியவற்றுக்கும் இவரே காரகர் ஆவார். வாழ்க்கையின் எல்லையை எட்டுவதற்குச் சனி பகவானின் அருள் வேண்டும். இவரின் திசை ஆண்டுகள் 19. சனியின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. ராசிகளில் மகரத்துக்கும் கும்பத்துக்கும் இவரே அதிபதி யாகத் திகழ்கிறார்.

சனி பகவான் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவர். பிங்களன், செளரி, மந்தன், கோணஸ்தன் ஆகிய பெயர்களும் சனி பகவானுக்கு உண்டு. இவரின் அதிதேவதை பிரம்மன்; பிரத்யதி தேவதை யமன். ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு ஆயுள், நல்ல மனப்பாங்கு, சிக்கனக் குணம், பொறுமை, தத்துவ ஞானம், வெளிநாட்டு வாசம் ஆகியவற்றை அருள்வார்.

விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி அமைந்திருக்கும். ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். மூன்றையும் முறையே மங்கு சனி, பொங்கும் சனி, போக்கு சனி என்று அழைப்பார்கள்.

ராசி மண்டலத்தில் வலம் வரும்போது, சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கும் ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் தலா இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி. இங்ஙனம் மூன்று ராசிகளிலும் சேர்த்து அவர் கோசாரம் செய்யும் ஏழரை வருடங்களையே ஏழரைச் சனிக் காலம் என்கிறோம்.

`ஏழரைச் சனி’ என்றதும் பயம் கொள்ளத் தேவையில்லை. அப்படியே அஷ்டமத்துச் சனி, ஜன்மச் சனி போன்ற நிலைகளை எண்ணியும் கலங்க வேண்டியதில்லை. சனி பகவான் நம் வினைகளைக் கரைக்க அருள்செய்பவர்; இன்ப-துன்பங்களைக் வினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர்.

ஜாதகப்படியும், கோசாரப்படியும் சனி பகவான் எந்த நிலையில் இருந்தாலும், அவரின் அருளைப் பெற சனிக்கிழமைகளில் ‘சம் சனைச்சராய நம:’ என்று சொல்லி, அவருக்கு 16 வகை உபசாரங் களை அளித்து வழிபடலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், சனீஸ்வரர் பெரிதும் மகிழ்ந்து அனுக்கிரகம் செய்வார்.

நிகழும் சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் (17.1.23) செவ்வாய்க் கிழமை அன்று (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி), தன் சொந்த வீடான மகர ராசியிலிருந்து மற்றொரு சொந்தவீடான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். இதனால் தனுசு ராசிக்கு ஏழரைச் சனி காலகட்டம் நிறைவடைகிறது; மீன ராசிக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. மகர ராசியினருக்கு ஜன்மச்சனி விலகுகிறது.

பொதுவாக கும்பத்தில் சனிபகவான் அமர்ந்து பலன்கொடுக்கும் காலத்தில், உலகில் பல நன்மைகள் ஏற்படும் என்கின்றன ஜோதிட நூல்கள். சனிபகவான் சொந்த வீட்டில் ஆட்சி பலம் பெறுவதால் எண்ணெய், இரும்புத் தொழில்களில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். ரியல் எஸ்டேட் துறை மேன்மை அடையும்.

விவசாயிகளுக்கும் இந்தக் காலகட்டம் மகிழ்ச்சியானதாக அமையும்; விளைச்சல் செழிக்கும். குறிப்பாக, கறுப்பு உளுந்து, துவரை, வேர்க்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் உண்டு. மழைப்பொழிவு நன்றாக இருக்கும். அதனால் தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்காது.

இந்தச் சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அமையும். தொழிலில் நல்ல முறையில் அபிவிருத்தியைக் காண்பார்கள். அதேநேரம், கால்நடைகள் மற்றும் பறவை இனங்களுக்கு இனம்புரியாத புதுவித வியாதிகள் வர வாய்ப்புகள் உண்டு. சனிபகவானின் கோசார நிலையால், காட்டு மிருகங்கள் - புள்ளி மான்களின் இனவிருத்தி குறையும். கடல் வாழ் உயிரினங்களில் சுறா, திமிங்கலம், கடற் குதிரை போன்றவை அழிவைச் சந்திக்கும்.

மலைவாழ் மக்களுக்கு அரசாங்கத்தால் அதிக நன்மைகள் ஏற்படும். நாடு பொருளாதாரத்தில் மேன்மை அடையும். தேசமெங்கும் ஆங்காங்கே புதிய தொழிற்சாலைகள் தோன்றும்; உற்பத்தி திருப்தியான முறையில் இருக்கும்.

அதேநேரம், மக்களில் நடுத்தர வயதின ரைப் பாதிக்கும் வகையிலான புதுவித வைரஸ் தொற்று உருவாகி உலகமெங்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

விமான சேவைகளிலும் போக்குவரத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உலகளவில் குறிப்பிட்ட ஒருசில மாதங்களில் பல்வேறு காரணங்களால் பொருளாதார பாதிப்பு, நெருக்கடிகள் உண்டாகலாம். வங்கிகள் மற்றும் அவை சார்ந்த விவகாரங்களில், சில முக்கிய பிரமுகர்களுக்குப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் துறையில் நல்ல மாற்றங்கள் நிகழும்; அதன் மூலம் மக்களுக்கு சில நன்மைகள் நடக்கும். உலகளவில் சில நாட்டின் தலைவர்களுக்கு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். விளையாட்டுத்துறை மேன்மை அடையும். உலகளவில் இந்தியாவுக்குப் பெருமையும் புகழும் சேரும்.