பதவி, புகழ், அந்தஸ்து பெறப்போகும் கன்னி ராசிக்காரர்களின் சனிப்பெயர்ச்சிப் பலன்கள்!

எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் தடைகள் தாமதங்கள் என்கிற நிலைகளே நீடித்து வந்தன. அவை எல்லாம் விலகி, இப்போது புத்துணர்ச்சியுடன் உங்களின் தொழிலில் இறங்கி வெற்றி பெறக்கூடிய முன்னேற்றகரமான நிலையைக் காண்பீர்கள்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (24-1-2020) தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து, சனி பகவான் ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். அஷ்டம் என்றால் எட்டு, அர்த்தாஷ்டமம் என்றால், எட்டில் பாதி நான்கு என்று பொருள். அர்த்தாஷ்டம சனியாக நான்குமிடத்தில் இதுநாள் வரை இருந்து வந்தார். ஏழரைச்சனியில் பாதி அளவு துன்பத்தை இத்தனை நாள்களாக கன்னி ராசிக்காரர்களுக்குத் தந்து வந்தார். இப்போது அவர் ஐந்தாம் இடத்துக்கு வருகிறார். ஐந்தமிடத்து சனி பகவான் சிறப்பான பலன்களை அள்ளித் தருவார்.
கன்னி ராசிக்குப் பூர்வ புண்ணியஸ்தானமான மகர ராசியில் சனி பகவான் இருப்பதால், உங்களுக்குச் சேர வேண்டிய நற்பலன்களை எந்தவிதத் தடையும் தாமதமும் இன்றி வழங்குவார் என்பது ஜோதிட விதி.
கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை, தொழில், ஜீவனம் ஆகிய அமைப்புகளில், கன்னி ராசிக்காரர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை நிலவவில்லை. எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் தடைகள் தாமதங்கள் என்கிற நிலைகளே நீடித்து வந்தன. அவை எல்லாம் விலகி, இப்போது புத்துணர்ச்சியுடன் உங்களின் தொழிலில் இறங்கி வெற்றி பெறக்கூடிய முன்னேற்றகரமான நிலையைக் காண்பீர்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வருமானம் பெரிய அளவில் இல்லை. ஆனால், வாங்கிய கடனுக்கும் வந்த வருமானத்தில் பெரும்பகுதியை வட்டியாகக் கட்டுவதற்குமே சரியாக இருந்தது. கடனுக்கு அதிக சதவிகித வட்டியினால், பனத்தை மிச்சம் மீதம் என எடுத்து வைக்க முடியாத சூழ்நிலையே கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வந்தது. இதனால் தீராத மன உளைச்சலுக்கு நீங்கள் ஆளாகி வந்தீர்கள். இப்போது அந்த நிலைமைகள் மாறி பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.
5-ம் இடத்தில் ஆட்சியாக வருகின்ற சனி பகவான் உங்களுக்கு இப்போது பல விதமான யோக பலன்களைத் தரக் காத்திருக்கிறார். திருமணமாகாமல் பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த பெண்களுக்குத் திருமணம் கைகூடி வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
இதுவரை வேலை கிடைக்காமல் இருந்த இளைஞர்களுக்கு, ஒரு தொழிலைத் தொடங்கி அதை நல்லமுறையில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தவர்களுக்கெல்லாம் அந்த நிலைமைகள் இப்போது மாறும். அதற்கு பதிலாக நல்ல தொழில் வளமும், வேலை வாய்ப்பும் கிடைக்கக்கூடிய ஒரு காலகட்டமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்குகளைச் சரியாகச் செய்து பணியில் உயர்வையும் பாராட்டையும் பெறுவார்கள். குறிப்பாக கணிப்பொறித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த இடத்திலா அல்லது இன்னொரு மாநிலத்திலா என்ற குழப்பமான நிலை எல்லாம் மாறி, நல்ல இடத்தில் வேலை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பணி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய தன்னார்வத் தொண்டர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சியின் வாயிலாக நல்ல பதவி, புகழ் சமூகத்தில் அந்தஸ்து ஆகியவை கிடைக்கும்.
பூர்வீகச் சொத்தில் உங்களுக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்டுப்பெறுவீர்கள். அண்ணன், தம்பி பங்காளிகளுக்கிடையே இருந்து வந்த வீண் சச்சரவுகள், சண்டைகள் எல்லாம் அகன்று ஒரு சுமுகமான சூழ்நிலை இப்போது ஏற்படும். தாயாருடன் பிணக்கில் இருந்த மகள்களுக்கு தாயாரின் பரிபூரண அன்பு கிடைக்கும்.
பரிகாரம்:
கன்னி ராசிக்காரர்கள் பரிகாரமாகத் திருவரங்கம் சென்று, அங்கு உள்ள ஶ்ரீரெங்கநாதனைத் தரிசித்து வந்தால், கன்னி ராசிக்காரர்கள் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.