Published:Updated:

ஒரே ராசியில் சனியும் செவ்வாயும் உங்களுக்குச் சாதகமா, பாதகமா?

சனி செவ்வாய் சேர்க்கை
பிரீமியம் ஸ்டோரி
சனி செவ்வாய் சேர்க்கை ( adventtr )

ஏப்ரல் 7 வரையிலும் சனியும் செவ்வாயும் தரும் பலன்கள்!

ஒரே ராசியில் சனியும் செவ்வாயும் உங்களுக்குச் சாதகமா, பாதகமா?

ஏப்ரல் 7 வரையிலும் சனியும் செவ்வாயும் தரும் பலன்கள்!

Published:Updated:
சனி செவ்வாய் சேர்க்கை
பிரீமியம் ஸ்டோரி
சனி செவ்வாய் சேர்க்கை ( adventtr )

ஒரே ராசியில் ஐந்து கிரகங்களின் சேர்க்கை எனும் நிலை, சகலரை யும் கவனிக்கவைக்கும் அமைப்பாகும். கடந்த பிப்ரவரி மாதம் 26 முதல் மார்ச் 1-ம் தேதி வரையிலும் சனி, செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய 5 கிரக மூர்த்திகளும் மகர ராசியில் இணைந்தனர். இந்த கிரகச் சேர்க்கையானது, ஏறக்குறைய மூன்று மாதம் வரையிலும் பலன்களில் மாறுபாட்டைச் சந்திக்கவைக்க வாய்ப்பு உண்டு.

ஒரே ராசியில் சனியும் செவ்வாயும் உங்களுக்குச் சாதகமா, பாதகமா?
adventtr
ஆம்பூர் வேல்முருகன்
ஆம்பூர் வேல்முருகன்

குறிப்பாக சனி பகவானும் செவ்வாய் பகவானும் ஏப்ரல் 7-ம் தேதி வரையிலும் மகரத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த இருவரும் ஒரு ராசியில் இணையும் காலத்தில் குறிப்பிடத்தக்க பல நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது உலகம். தனிப்பட்ட ஜாதகரின் வாழ்விலும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. அவ்வகையில் இந்த இருவரும் மகரத்தில் இணைந்திருக்கும் ஏப்ரல் 7-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 12 ராசியினருக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வோம்.

மேஷம்: தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்குப் புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தடைகள் வந்தாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை உயரும்; பொது இடங்களில் புகழ், செல்வாக்கு கூடும். இருப்பினும் எவரையும் பகைக்க வேண்டாம். எதிலும் பொறுமை அவசியம்.

பரிகாரம்: தினமும் வீட்டில் நெய் விளக்கு ஏற்றிவைத்து, சஷ்டிக் கவசம் படித்து முருகப்பெருமானை வழிபடலாம். செவ்வாய்க் கிழமைகளில் அருகில் உள்ள ஆலயம் சென்று முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுதால் நன்மைகள் உண்டாகும்!

ரிஷபம்: தந்தை உடல்நலனில் கவனம் தேவை. பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைகள் அதிகரிக்கும். சிலரால் தவறான வழிகாட்டுதலும் தேவையற்ற பிரச்னைகளும் வர வாய்ப்புகள் உண்டு. அதேநேரம், கல்வி வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் வல்லமை ஏற்படும். எனினும் அவசர முடிவுகளைத் தவிர்த்து, எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பிதுர் வழிபாடு நன்மை தரும்.

பரிகாரம்: தினமும் வீட்டில் `பச்சைமா மலைபோல் மேனி’ எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடி, பெருமாளை துளசியால் அர்ச்சித்து வழிபடுவது விசேஷம். இயன்றால் ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதரை தரிசித்து வரலாம். அவரருளால் சகல நன்மைகளும் நடக்கும்.

மிதுனம்: வாகன பயணங்களில் கவனம் தேவை. இயன்றவரையிலும் இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் பொறுமை, விழிப்பு உணர்வு தேவை. வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பரிகாரம்:அனுதினமும் லட்சுமி நரசிம்மரை மனதார தியானித்து வழிபடுவது நன்மை தரும். சோளிங்கர், சிங்கபெருமாள் கோயில், பரிக்கல் போன்று ஏதேனும் ஒரு தலத்துக்குச் சென்று ஶ்ரீநரசிம்மரை வழிபட்டு வருவதால், விசேஷ பலன்கள் கிடைக்கும்.

கடகம்: வீட்டில் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தம்பதிக்கு இடையேயான பிரச்னையில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிருங்கள். வியாபார ரீதியான ஒப்பந்தங்களில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். குடும்ப விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. எவரையும் பகைக்கவேண்டாம். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்ப்பது அவசியம்.

பரிகாரம்: வீட்டில் தினமும் விநாயகர் அகவல் படித்து பிள்ளையாரை வழிபடுவது நலம் பயக்கும். அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டு வரலாம்.

சிம்மம்: உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. யாரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். வீண் கோபத்தைத் தவிர்க்கவும். பயணங்களின்போது ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

பரிகாரம்:சூரியதேவனை வழிபடுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் அருகிலுள்ள ஆலயங்களில், நவகிரக சந்நிதியில் சூரியனை தரிசித்து வழிபட்டு வாருங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.

கன்னி: எதிலும் பொறுமையும் விழிப்பு உணர்வும் அவசியத் தேவை. பூர்வீகச் சொத்து விஷயங்களில் தலையிட வேண்டாம். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது; கவனம் தேவை. வீண் மன குழப்பங்கள், எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும்வீட்டில் குருவாயூரப்பனுக்கு துளசி சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வணங்கி வருவதால் நற்பலன்கள் கைகூடும்.

துலாம்: தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு-வாகனம், சொத்து தொடர்பான ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:வீட்டில் சுந்தரகாண்டம் படிப்பதாலும் அனுமன் துதிப்பாடல்கள் சொல்லி வழிபடுவதாலும் தோஷங்கள், தடைகள் நீங்கும். அருகிலுள்ள பெருமாள் கோயில்கள், அனுமன் கோயில்களுக்குச் சென்று வாயு மைந்தனை வழிபட்டு வருவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

விருச்சிகம்: மனதில் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். இருப்பினும் எதையும் நாசுக்காகக் கையாளுங்கள். அதீத நம்பிக்கையைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் சிறிது போராட்டத்திற்குப் பின் வெற்றி பெறும். எதிலும் பொறுமை அவசியம். புதிய தங்க நகைச் சேர்க்கை உண்டாகும். பயணங்களால் நன்மை உண்டு. உடன்பிறப்புகளால் பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.

பரிகாரம்:அனுதினமும் வீட்டில் விளக்கேற்றிவைத்து குமாரஸ்தவம், திருப்புகழ் பாடல்களைப் பாடி முருகனை வழிபடுவது சிறப்பு. இயன்றால் வாரம் ஒருமுறையேனும் முருகன் ஆலயத்துக்குச் சென்று மலர்கள் சமர்ப்பித்து வழிபட்டு வரலாம்.

தனுசு: பேச்சில் கவனம் தேவை. பொது இடங்களில் மற்றவர்களை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். விட்டுக்கொடுத்துச் செல்வது மிக மிக நல்லது. பொருளாதார ஏற்றத்தாழ்வு உண்டு. குடும்ப விஷயங்களோ, அலுவலகக் காரியங்களோ எதுவாயினும் கவனமாகச் செயல்படுங்கள். தவறான பழக்க வழக்கங்களிலிருந்து விலகியிருங்கள்.

பரிகாரம்: அனுதினமும் அன்னை வராஹியை மனதார தியானித்து வணங்குவதால், வீட்டில் சுபிட்சம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் ஆலயங் களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், மகிழ்ச்சி பெருகும்.

மகரம்: தேவையற்ற வீண் மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் உருவாகும். வீண் கோபத்தைத் தவிர்க்கவும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். எதையும் நாசூக்காகக் கையாளுங்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமை, விழிப்பு உணர்வு அவசியம். வீண் வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

பரிகாரம்: அனுமன் வழிபாடு அல்லல்களை அகற்றும். அனுமன் ஆலயங்களில் செந்தூரக் காப்பு வழிபாடு செய்வதும் அந்த அலங்காரத்தில் அருளும் அனுமனை தரிசனம் செய்வதும் நன்மை சேர்க்கும்.

கும்பம்: பணம் கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இரவு நேரப் பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் வரும்; விழிப்பு உணர்வுடன் செயல்படுவது அவசியம். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

பரிகாரம்: சனி பகவான் வழிபாடு நன்மை தரும். காகங்களுக்கு அன்னம் இடுங்கள். சனிக்கிழமைகளில் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்; துன்பங்கள் தொலையும்.

மீனம்: பொருளாதார நிலையில் இருந்த சிக்கல்கள் குறையும். சிலருக்குத் திடீர் பணவரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் வந்து சேரும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பும் ஆதாயமும் உண்டு. சிலர், திடீரென பிரபலமாகும் சூழல் கனிந்து வரும். எதையும் சாதிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் வெற்றியைத் தரும்.

பரிகாரம்: தினமும் இல்லத்தில் முருகப்பெருமானை வழிபடுங்கள். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களைப் பாடி வணங்குங்கள். இயன்றால் ஒருமுறை திருச்செந்தூர் செந்திலாண்டவனை தரிசித்து வாருங்கள்; நீங்கள் நினைத்தது நிறைவேறும்!