Published:Updated:

வீடு, வாகன யோகம் பெறப்போகும் துலாம் ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

திருமணம் தடைப்பட்டு வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நடைபெறும். குழந்தைபாக்கியம் கிடைக்காமல் இருந்தவர்களுக்குக் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (24.1.2020) தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்திலிருந்து இதுவரை ஓரளவு நற்பலன்களைக் கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான் இப்போது 4-ம் இடத்துக்குச் செல்கிறார். 4-ம் இடம் என்பது அர்த்தாஷ்டம சனி என்று சொல்லக்கூடிய அமைப்பில் வரும்.

பொதுவாக, மூன்றாம் இடத்துக்கு சனி பகவான் வரும்போது நல்ல பலன்கள் நிகழ வேண்டும். ஆனால், துலாம் ராசிக்காரர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாகப் பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கவில்லை.

Libra
Libra

இப்போது அவர் இருக்கக்கூடிய 4-ம் இடம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடியதாக அமையும். அதற்குக் காரணம் துலாம் ராசிக்காரர்களுக்கு சகல யோகங்களையும் வழங்கக்கூடிய ராஜ யோகாதிபதியாக சனி பகவான் இருக்கிறார். அவர் தனது சொந்த வீடான மகர ராசிக்குப் பிரவேசிப்பது, துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்களைத் தரும். ராஜயோகமான கிரகம் 4-ம் இடத்துக்கு வரும்போது உபயோகமான பலன்களே கிடைக்கும் என்பது ஜோதிட விதி.

அடுத்த ஒரு வருடத்தில் குருவுடன் சேர்ந்து சுபத்துவ சூட்சும பார்வை பெறுவதால், இவர்களுக்கு வீடு, வாகனம், தாயார் ஆகிய விஷயங்களில் நல்ல லாபகரமான நன்மைகள் கிடைக்கும். இதுவரை சொந்தவீடு அமையாமல் இருந்தவர்களுக்குச் சொந்த வீடு அமையும். புதிய வாகனங்கள் வாங்கி, அதில் பயணிப்பார்கள்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் பலன்கள் எல்லாம் நிகழத் தொடங்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். உடல் ஆரோக்கியம், நல்ல நிலைக்கு வரும். கோயில், குளம் எனக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருவார்கள்.

தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள், சண்டைச் சச்சரவுகள் யாவும் இப்போது நீங்கப்பெறுவார்கள். அவருடன் இணக்கமான ஓர் உறவு இவர்களுக்கு நிலவும்.

அஷ்டம சனி என்பது பொதுவாக வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் தடைகளை ஏற்படுத்துவார். ஆனால், இந்த முறை துலாம் ராசிக்காரர்களுக்கு அப்படி அவர் செய்ய மாட்டார். வேறு எந்த வகையிலும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனியால் கெடுதல் நடைபெறாது. காரணம் சனி பகவானுக்கு ரிஷபமும் துலாமும் நட்பு வீடுகள்.

Signs
Signs

கடந்த 3 ஆண்டுகளாக சனி பகவான், குருவின் வீட்டில் இருந்ததால் தன்னுடைய மகர ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் இருந்ததால் உங்களுக்குக் கடந்த 3 ஆண்டுகளாக நற்பலன்கள் நிகழவில்லை. ஆனால், இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக நற்பலன்கள் நிகழும்.

திருமணம் தடைப்பட்டு வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நடைபெறும். குழந்தைபாக்கியம் கிடைக்காமல் இருந்தவர்களுக்குக் குழந்தைபாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு, புதிய இடத்தில் நல்ல வேலை அமையும்.

துலாம் ராசிக்காரர்கள் அர்த்தாஷ்டமச் சனியை எண்ணிப் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்குத் தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் தங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

துலாம் ராசியில் பிறந்த அரசுப் பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள், தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் பெண்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் இதுவரை பணியில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் விலகி ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகும். பணியில் பாராட்டும் பதவி உயர்வும் இவர்களை வந்து சேரும்.

35 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தொழிலில் ஒரு மேன்மையான நிலையை இந்த சனிப்பெயர்ச்சி ஏற்படுத்தித் தரும். பண விஷயங்களில் இவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடக் கூடாது. தங்கள் வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை பெற்று எதையும் செய்வது நல்லது.

பரிகாரம்: துலாம் ராசிக்காரர்கள் பரிகாரமாக காலபைரவரை சனிக்கிழமையன்று வணங்குவது சிறப்பைத் தரும். வியாழக்கிழமை குரு ஓரையில் தக்ஷிணாமூர்த்தியை வணங்க வேண்டும். தவிர ஆஞ்சநேயர் வழிபாடும் இவர்களுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

பின் செல்ல