Published:Updated:

தொட்டது துலங்கப் பெறும் விருச்சிக ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

விருச்சிக ராசிக்காரர்கள் இதுவரை எதை இழந்தீர்களோ அவற்றையெல்லாம் இப்போது நான்கு மடங்காகத் திரும்பப் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (24.1.2020) தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்

விருச்சிக ராசிக்காரர்களுக்குப் புதிய விடியலைத் தரக்கூடிய ஒரு சனிப்பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். 'இதோ நல்ல நேரம் வருகிறது, அதோ நல்ல நேரம் வருகிறது' என்று விருச்சிக ராசிக்காரர்களைப் பார்த்துக் கூறியவர்களுக்கு சுபசெய்தியாக அந்த நல்ல நேரம் இப்போது வந்துவிட்டது.

Astro Signs
Astro Signs

விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 7 ஆண்டுகளாக வாழ்க்கையில் எவ்வளவோ முயன்றும் ஒரு நல்ல நிலையை அடைய முடியாமலும் எவ்வளவோ பாடுபட்டும் பணத்தைச் சேர்த்து வைக்க முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். வாழ்க்கை ஓர் இருளான பகுதிக்குச் சென்று விட்டதாகவே தங்களைத் தாங்களே நொந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் ஒரு முடிவாக, வட்டியும் முதலுமாக ஒரு மிகச்சிறந்த நல்ல நேரம் இப்போது உங்களுக்கு வந்திருக்கிறது.

எதையும் சாதிக்கலாம், எதில் தலையிட்டாலும் அதில் வெற்றிபெறலாம், தொட்டது துலங்கும் என்கிற ஒரு காலகட்டமாக, இந்தக் காலகட்டம் உங்களுக்கு அமையும்.

மனதில் தெளிவும் உற்சாகமும் உங்களுக்கு இப்போது பிறக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த 2020-ம் ஆண்டு 'இன்று புதிதாகப் பிறந்தீர்கள்' என்று சொல்லக்கூடிய அளவு புதிய வாழ்க்கை புதிய பயணத்தை அமையும் வகையில் இந்த சனிப்பெயர்ச்சி இருக்கும்.

தொழில் வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என இரண்டிலும் பரிதவித்து வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகப் பெரிய மாறுதலைத் தரும். எவரிடமும் வெளியில் சொல்ல முடியாத அளவு துயரத்தை நீங்கள் இத்தனை காலமாக அனுபவித்து வந்தீர்கள். அந்தத் துயரங்கள் எல்லாம் இப்போது விலகி, சிறப்பான ஓர் எதிர்காலம் உங்கள் கண்முன்னே காட்சி தர இருக்கிறது.

Happpy life
Happpy life

கவலை தோய்ந்த முகத்துடன், கலங்கிய கண்களுடன், கலைந்த கேசத்துடன் இருந்த விருச்சிக ராசிக்காரர்கள் இப்போது புதிய பொலிவுடன் தேஜஸுடன் முக அழகுடன் வலம் வருவீர்கள். இதுவரை உங்களைச் சுற்றி இருந்த ஓர் இருள் வளையம் விலகி, உங்களைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் உருவாகும்.

சனி பகவான் மூன்றாம் ராசிக்குச் செல்வதால் நீங்கள் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் தடையற்ற வெற்றி கிடைக்கும். உபஜெய ஸ்தானமான மூன்றாம் இடம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

விருச்சிக ராசிக்காரர்கள் இதுவரை எதை இழந்தீர்களோ அவற்றையெல்லாம் இப்போது நான்கு மடங்காகத் திரும்பப் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

கடன், நோய், எதிரி ஆகியவை உங்களை விட்டு விலகி, மனதில் புத்துணர்ச்சி, உற்சாகம், நம்பிக்கை, நல்ல நண்பர்கள், அற்புதமான சமூகச் சூழல் இவையெல்லாம் அமைந்து மிகச் சிறப்பான பலன்களை விருச்சிக ராசிக்காரர்கள் இப்போது அனுபவிப்பார்கள்.

வெளிநாட்டில் இருந்தவர்கள், வெளிமாநிலத்தில் இருந்தவர்கள் குடும்பத்தைப் பிரிந்து துயரத்திலிருந்தவர்களெல்லாம் மீண்டும் தங்களுடைய குடும்பத்தினரோடு இணைந்து குதூகலமாக இருப்பீர்கள்.

பெண்களைப் பொறுத்தவரை தாய்க்கும் உங்களுக்கும் இருந்துவந்த பிணக்குகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த வீண்கருத்து வேறுபாடுகள், சண்டைச் சச்சரவுகள் எல்லாம் விலகிப் பரஸ்பரம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் புதிய பாதையில் பயணிக்கும் எழுச்சி மனிதர்களாக இந்த சனிப்பெயர்ச்சியில் திகழ்வார்கள்.

பரிகாரம்: விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரைச்சனி முடிந்திருக்கும் இந்த வேளையில், திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது, நல்ல பரிகாரமாக இருக்கும். சனீஸ்வரனை நேருக்கு நேர் பார்க்காமல், தர்பாரண்யேஸ்வரரை வணங்கி விட்டு வருவது நல்ல பலனை உங்களுக்கு வழங்கும்.

அடுத்த கட்டுரைக்கு