Published:Updated:

அதிக பணவரவால் திக்குமுக்காடப்போகும் ரிஷப ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Astrology

ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே பண வரவு அத்தனை சரியாக இல்லை. கடன் பெறவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. ஆனால் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு அபரிமிதமான பணவரவை அளிக்கப் போகிறது.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி மாதம் 24 - ம் தேதி (24-1-2020) தை மாதம் 10 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் பலன்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். 

ரிஷப ராசிக்காரர்களுக்குப் பெரும் நிம்மதி தரக்கூடிய ஒரு சனிப்பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி இருக்கும். உங்களின் ராசிக்கு சனிபகவான் கடந்த மூன்று ஆண்டுகளாக அஷ்டம சனியாக இருந்து உங்களை வழி நடத்தியதால் பல துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவித்து வந்தீர்கள்.

Taurus
Taurus

எல்லா ரிஷப ராசிக்காரர்களுக்கும் மனதளவில் ஓர் ஆதங்கம் இருந்து வந்தது. 'என்னுடைய முயற்சிகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையே, சமூகத்திலும் பணியிடத்திலும் ஓர் அங்கீகாரம் ஏன் கிடைக்கவில்லை, என்ற ஆதங்கம் நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது.

வயது, கல்வித் தகுதி, கடின உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை எனும் கவலை உங்களின் மனத்தை வாட்டி வந்தது. வாழ்க்கையின் முன்னேற்றப்பாதையும் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. இந்த சனிப்பெயர்ச்சி அந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறியும்.

அஷ்டம சனியில் முயல்கின்ற எந்தக் காரியமும் பெரிதாக வெற்றி பெறாது என்பது ஜோதிட விதி. அந்த நிலையெல்லாம் மாறி, சனி பகவான் 9 - ம் இடத்துக்கு வருவதால், உங்களின் மனதிலிருந்த பிடித்த துறையைத் தேர்வு செய்து அதில் நீங்கள் சென்றால், வெற்றி பெறுவீர்கள்.

'கண் விழித்துப் படித்தும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே' என்கிற மனக்குறை இத்தனை நாள்களாக ரிஷப ராசி மாணவர்களுக்கு இருந்து வந்தது. அந்த நிலை இனி மாறும்.

Saturn Transition
Saturn Transition

ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே பண வரவு அத்தனை சரியாக இல்லை. கடன் பெறவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. ஆனால், அந்த நிலையெல்லாம் இப்போது மாறிப்போகும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். பழைய கடன்களையெல்லாம் இப்போது கொடுத்து முடிப்பீர்கள்.

பொதுவாக, அஷ்டம சனி விலகினாலே ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு, அவர் செட்டிலாகப் போகிறார் என்பது அர்த்தம். இதுவரை இருந்த மனக் குறைகள் யாவும் நீங்கி, ரிஷப ராசிக்காரர்கள் மன மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பயணிக்கப் போகிறீர்கள்.

குறிப்பாக, கன்னிப் பெண்களுக்கு இருந்து வந்த திருமணத் தடைகள் நீங்கி, இப்போது திருமணம் கைகூடிவரும். அஷ்டம சனி பெரும்பாலும் திருமணத் தடையை ஏற்படுத்தும். அப்படியே அதையும் மீறி திருமணம் நடந்திருந்தாலும் அவர்கள் பிரிவதற்கான சில சம்பவங்களும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடந்திருக்கும். அல்லது வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளி மாநிலத்துக்குச் செல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.

Planets
Planets

கணவன் மனைவிக்கிடையே ஒரு பனிப்போர் இதுநாள்வரை இருந்து கொண்டே இருந்தது. அந்த நிலைமைகள் மாறி குடும்பத்தில் ஒரு சுபிட்சம் நிலவத்தொடங்கும். சனிப்பெயர்ச்சி ஆண் பெண் இருபாலருக்கும் சிறப்பான பலன்களைத் தரக் காத்திருக்கிறது. உடல்நலத்தில் பாதிப்பு இருந்தவர்களுக்கு, பாதிப்புகள் விலகி ஆரோக்கியமடைவீர்கள்.

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்திலிருந்து வந்த பங்குத் தகராறு நீங்கும். நல்ல முறையில் உங்களுக்கான பங்கு உங்களை வந்து சேரும். தந்தை வழி உறவுகளான பங்காளிகளுக்குள் இருந்த மனஸ்தாபம் விலகும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு மாதாமாதம் நிரந்தரமான ஒரு வருமானம் வரக்கூடிய சூழ்நிலை இப்போது உருவாகும். இதுநாள் வரை இருந்து வந்த பணத்தட்டுப்பாடு, பணப்பற்றாக்குறைகளெல்லாம் உங்களை விட்டு விலகும்.

யோகங்கள் பெறப்போகும் ரிஷபம், கன்னி, விருச்சிகம் ராசிகள்... சனிப்பெயர்ச்சி பொதுபலன்கள்!

இதுவரை முயற்சி செய்தும் முடியாமல் இருந்த விஷயங்கள், இனி முயற்சி செய்யாமலேயே அதிர்ஷ்டத்தின் துணையோடு உங்களுக்கு வெற்றிகரமாக முடியும்.

பரிகாரம்: ரிஷப ராசிக்கு அஷ்டம சனி விலகுவதால், இவர்கள் திருச்செந்தூரிலிருக்கும் செந்தில் ஆண்டவனை வணங்கினால் கிடைக்கும் நற்பலன்கள் அதிகமாகும்.

திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி  பலன்கள்